ta The Nectar of Thiruppugazh: 2016

Wednesday, 28 December 2016

441. அனித்தமான

ராகம்: பூபாளம் தாளம்: சதுச்ர ஏகம் திஸ்ர நடை
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாதவகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெனுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகியெனஆள்வாய்

440. வம்பறாச் சில

ராகம் : ஆபோகி தாளம்: ஆதி 2 களை
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத்திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற்றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக்கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக்கருதாதோ

Tuesday, 27 December 2016

439. முட்டுப் பட்டு

ராகம் : பெஹாக் தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 3 (6)
முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப்பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனைச்
சற்றுப் பற்றக்கருதாதோ
வட்டப் புட்பத்தலமீதே
வைக்கத் தக்கத்திருபாதா
கட்டத் தற்றத்தருள்வோனே
கச்சிச் சொக்கப்பெருமாளே.

Sunday, 25 December 2016

438. மக்கட்குக் கூற

ராகம் : லதாங்கி தாளம்: திஸ்ரத்ரிபுடை (7)
மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாததுமனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதிமதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானதுபெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவதுபுரிவாயே

Saturday, 17 December 2016

437. பொக்குப்பை

ராகம்: பஹுதாரி தாளம்: திச்ர ரூபகம் (5)
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக்குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச்சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப்பெறுவேனோ

Wednesday, 14 December 2016

436. புனமடந்தை

ராகம் : சங்கராபரணம் தாளம்: ஆதி - 2 களை (16)
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும்பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்றருள்வாயே

435. புரைபடும்

ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்
தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண்டடைவேனோ

Tuesday, 13 December 2016

434. படிறொழுக்கம்

ராகம்: சாரங்கா தாளம்: மிஸ்ர சாபு 1½ + 2 (3½)
படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட னொடிபேசும்
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தறஉயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிடமிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பதமருள்வாயே

433. நச்சரவ மென்று

ராகம்: கானடா தாளம்: ஆதி
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்கமதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
நத்திரைவ ழங்குகடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச லெனவேணும்

Monday, 12 December 2016

432. தலைவலை

ராகம்: சுத்த தன்யாசி தாளம்: ஆதி
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குறவஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ளம்புகாளப்
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சனனம்பெறாதோ
பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவனெ னத்திக் கியம்பு கின்றது
புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகைதந்திடாதோ

431. செறிதரும்

ராகம்: ஷண்முகப்ரியா தாளம்: ஆதி
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும்படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்றருள்வாயே

Sunday, 11 December 2016

430. சீசி முப்புரக் காடு

ராகம் : தர்பார் தாளம்: மிஸ்ரசாபு 1½ + 2 (3½)
சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித்தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக்கறியாமற்
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே

Saturday, 10 December 2016

429. கொத்தார்

ராகம் : கல்யாண வசந்தம் தாளம்: ஆதி திச்ர நடை (12)
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற்செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப்புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉஎனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக்கமறாதோ

Thursday, 8 December 2016

428. கனிதரும் கொக்கு

ராகம் : ஆரபி தாளம்: ஆதி
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந்திலும்வேலும்
கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண்சுழல்வேனைப்
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென்றுருகாஎப்
பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன்றுளதோதான்

Monday, 5 December 2016

427. கறை இலங்கும்

ராகம் : தோடி தாளம்: ஆதி
கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன் தனிவீரக்
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் தமிழ்பாடிக்
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் றிலதான
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங்கிடையாதோ

Sunday, 4 December 2016

426. கருமமான பிறப்பற

ராகம்: பெஹாக் தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 (15½)
கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத்தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக்கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக்கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப்புகல்வாயே

Saturday, 3 December 2016

425. எனக்குச் சற்று

ராகம் : கமாஸ் தாளம்: ஆதி (28) மிஸ்ர நடை (தகிட தகதிமி)
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக்குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக்கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
பெறச்செச்சைப் புயத்தொப்பித்தணிவோனே
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத்திறல்தாராய்

Friday, 2 December 2016

424. அற்றைக்கு இரை

ராகம்: பாகேஸ்ரீ தாளம்: சங்கீர்ண சாபு 1 + 1 + 2½ (4½)
அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத்தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.

423. அறிவிலாப் பித்தர்

ராகம்: சாரங்கா தாளம்: அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½)
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றியறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்துஅவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்றுஅருள்வாயே

Thursday, 1 December 2016

422. அதிமதங்

ராகம் : கல்யாணி தாளம்: ஆதி (2 களை)
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன்குறவாணார்
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன்குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும்படிபாராய்

421. வேத வித்தகா

ராகம் : சாமா தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 1 + 2½ + 2 (8½)
வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநமவிந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேக மொத்தமா யூரா நமோநமவிண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநமதுங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷ ணத்துமா மார்பா நமோநமபுண்டரீக

Tuesday, 29 November 2016

420. வேடர் செழுந்தினை

ராகம்: சிம்மேந்திர மத்யமம் தாளம்: திச்ர த்ருவம் 2 களை
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
லோசன அம்புக ளாற்செயல்தடுமாறி
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
வேளைபு குந்தப ராக்ரம மதுபாடி
நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
னாலுல கங்களு மேத்தியஇருதாளில்
நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம
நாடஅ ருந்தவம் வாய்ப்பதுமொருநாளே

419. வானப் புக்கு

ராகம் : பூர்வி கல்யாணி தாளம்: சதுச்ர ரூபகம்
வானப் புக்குப் பற்றும ருத்துக் கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப்பிறவாதே
ஞானச் சித்திச் சித்திர நித்தத்தமிழாலுன்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப்புரிவாயே

Monday, 28 November 2016

418. வாரி மீதே

ராகம் : குறிஞ்சி தாளம்: அங்கதாளம் 2½ + 2½ + 1½ + 2 (8½)
வாரிமீ தேயெழுதிங்களாலே
மாரவே ளேவியஅம்பினாலே
பாரெலா மேசியபண்பினாலே
பாவியே னாவிமயங்கலாமோ

417. வாதந் தலைவலி

ராகம்: பெஹாக் தாளம்: ஆதி
வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியிவையணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழிமருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணைபெறுவேனோ

416. மோது மறலி

ராகம்: ஹம்சத்வனி தாளம்: அங்கதாளம் 1½ + 1½; + 1 + 1½ + 2 (7½)
மோது மறலியொரு கோடி வேற்படை
கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
மோக முடையவெகு மாதர் கூட்டமுமயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
மோக வினையில்நெடு நாளின் மூத்தவரிளையோர்கள்
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
கூடி நடவுமிடு காடெ னாக்கடி
தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி யறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்
சூழ முநிவர்கிளை தாமு மேத்திட
ஈச னருள்குமர வேத மார்த்தெழ வருவாயே

Sunday, 27 November 2016

415. மூலா நிலமதின்

ராகம்: பந்துவராளி தாளம்: ஆதி
மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர் தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலு
மோதா நெறிமுறைமுதல்கூறும்
லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசியவுபதேசம்
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமதுதருவாயே

Friday, 25 November 2016

414. முனை அழிந்தது

ராகம் : சங்கரானந்தபிரியா தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ப்ரபையான
முகமி ழிந்தது நோக்குமி ருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்ததுஅறிவேபோய்
நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு
மவச மும்பல ஏக்கமு முந்தின
நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது பலநோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சலம லங்களி னாற்றமெ ழுந்தது
நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினிதருள்வாயே

Wednesday, 23 November 2016

413. முருக மயூர

ராகம்: பாகேஸ்ரீ தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 2 (5½)
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமளமுலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதியபு ராரிக் கோதிய குருவேயென்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினோ டூடிக் கூடியும்வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வது மொருநாளே

Monday, 21 November 2016

412. மாண்டார் எலும்பணி

ராகம்: சங்கராபரணம் தாளம்: அங்கதாளம் 2½ + 2 + 2 (6½)
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை
வான்பூத லம்பவ னங்கனல்புனலான
வான்பூத முங்கர ணங்களு
நான்போயொ டுங்கஅ டங்கலு
மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை யருளாயேல்
வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில்
வீழந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையேனாய்
வேந்தாக டம்புபு னைந்தருள்
சேந்தாச ரண்சர ணென்பது
வீண்போம தொன்றல என்பதையுணராதோ

411. மனைமக்கள் சுற்றம்

ராகம்: ராமப்ரியா தாளம்: திச்ர ஏகம் (3)
மனைமக்கள் சுற்றமெனுமாயா
வலையைக்க டக்க அறியாதே
வினையிற்செ ருக்கி யடிநாயேன்
விழலுக்கி றைத்துவிடலாமோ
சுனையைக்க லக்கி விளையாடு
சொருபக்கு றத்தி மணவாளா
தினநற்ச ரித்ரமுளதேவர்
சிறைவெட்டிவிட்டபெருமாளே.

Sunday, 20 November 2016

410. மனக பாட

ராகம் : திலங் தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½)
மனக பாட பாடீர தனத ராத ராரூப
மதன ராச ராசீப சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனைவினையேனைக்
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வதொருநாளே

409. மதிதனை யிலாத

ராகம் : தன்யாசி தாளம்: அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½)
மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன்அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை யிதேது காய மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூளனெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தானமருள்வாயே

Friday, 18 November 2016

408. மதனேவிய

ராகம்: தோடி தாளம்: திச்ர ஏகம் (3)
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுகமுடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற
மகிழ்ஞானக அநுபூதியினருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகரமுடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெவருவாயே

Thursday, 17 November 2016

407. மக்கள் தாயர்

ராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி கண்ட நடை (1½ + 1)
மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
விக்கும்வாழ் நர்க்குமிகமனதூடே
மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
வைத்துவா டச்சமனுமுறமேவித்
திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
திக்கஆ விக்களவுதெரியாமுன்
சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
சித்ரபா தக்கமலமருள்வாயே

Wednesday, 16 November 2016

406. போத நிர்க்குண

ராகம்: சுநாதவினோதினி தாளம்: அங்கதாளம் (8)
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநமபஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநமஎன்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுகலங்கலாமோ

405. பொதுவதாய்

ராகம் : ஹம்சத்வனி தாளம்: மிஸ்ரசாபு (3½)
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
இரவு போய்ப்புகல்கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதைவின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புலனைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையிருந்தவாறென்

404. பேரவா அறா

ராகம் : ஹிந்தோளம் தாளம்: அங்கதாளம் (1½ + 1½ + 2½ + 2 + 3 (10½)
பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப்பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக்கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப்பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப்பெருமாளே.

Tuesday, 15 November 2016

403. பெருங்காரியம்

ராகம் : கரஹரப்ரியா தாளம்: ஆதி கண்ட நடை (20)
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
ப்ரியங்கூர வந்து கருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணமானார்
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி தெனமூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை யஞ்ச லெனவேணும்

402. பூத கலாதிகள்

ராகம்: மோகனம் தாளம்: அங்கதாளம் 2 + 2 + 1½ (5½)
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து பிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்துவெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாசமு ணர்ந்து வொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு மடைவேனோ

Monday, 14 November 2016

401. புவிக்குன் பாதம்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம்: சதுச்ர ரூபகம் (6)
புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
புலக்கண் கூடு மதுதனைஅறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
புழுக்கண் பாவ மதுகொளல் பிழையாதே
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
களைக்கும் பாவ சுழல்படுமடிநாயேன்
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
கணக்குண் டாதல் திருவுளமறியாதோ

400. புத்தகத்து ஏட்டில்

ராகம்: ஆபோகி தாளம்: அங்கதாளம் (2½ + 2 + 1½ + 3)
புத்தகத் தேட்டிற் றீட்டி முடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டியருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றியருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே

Sunday, 13 November 2016

399. புகரில் சேவல

ராகம் : மலையமாருதம் தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
புகரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடிமணவாளா
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
புயச பூதர என்றிரு கண்புனல்
பொழிய மீமிசை யன்புது ளும்பியமனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்
மருவு மாருயி ருங்கர ணங்களு
மவிழ யானுமி ழந்தஇ டந்தனிலுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை
யறிவி லேனறி யும்படி யின்றருள்புரிவாயே

Saturday, 12 November 2016

398. பிறவியலை

ராகம் : கல்யாணி தாளம்: அங்கதாளம் கண்ட ஜம்பை (1½ + 1 + 1½ + 1 + 3 (8)
பிறவியலை யாற்றினிற்புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற் றலையாதே
உறுதிகுரு வாக்கியப்பொருளாலே
உனதுபத காட்சியைத் தருவாயே

397 பாணிக்குட் படாது

ராகம் : ஹரிகாம்போதி தாளம்: திஸ்ரத்ரிபுடை (7)
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதகபஞ்சபூத
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனைநெஞ்சமான
ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
யேறிப்பற் றொணாது நாடினர் தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
யேறச்செச் சைநாறு தாளைவணங்குவேனோ

Thursday, 10 November 2016

396. பருதியாய்

ராகம்: சஹானா தாளம்: மிஸ்ர அட (18)
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலாயுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
னாலா றேழா மேனா ளாயேழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலேசிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
சூடா நாடா ஈடே றாதேசுழல்வேனோ

Tuesday, 8 November 2016

395. பரவைக்கு எத்தனை

ராகம் : ராமப்ரியா தாளம்: திச்ர ஏகம் (3)
பரவைக் கெத்தனை விசைதூது
பகரற் குற்றவ ரெனமாணுன்
மரபுக் குச்சித ப்ரபுவாக
வரமெத் தத்தரவருவாயே

394. பட்டுப் படாத

ராகம் : கானடா தாளம்: சதுச்ர ஜம்பை (7)
பட்டுப் படாதமதனாலும்
பக்கத்து மாதர்வசையாலும்
சுட்டுச் சுடாதநிலவாலும்
துக்கத்தி லாழ்வதியல்போதான்

Monday, 7 November 2016

393. பகிர நினைவொரு

ராகம் : சஹானா தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
பகிர நினைவொரு தினையள விலுமிலி
கருணை யிலியுன தருணையொ டுதணியல்
பழநி மலைகுரு மலைபணி மலைபலமலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
பழகி யழகிலி குலமிலி நலமிலி
பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி லிகுலாலன்
திகிரி வருமொரு செலவினி லெழுபது
செலவு வருமன பவுரிகொ டலமரு
திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல்நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலி லுணர்விலி சிவபத மடைவதுமொருநாளே

Tuesday, 1 November 2016

392. நெடிய வடகுவடு

ராகம்: காம்போதி தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி
நிபிட முடிகிழி யவுநில மதிரவும்விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையு முறைதரு பெருமையும்
நிறமு மிளமையும் வளமையு மிருசரணமும்நீப
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தனகிரி தழுவியதிரடோளும்
மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
முருக னறுமுக னெனவரு வனபெயர்
முழுது மியல்கொடு பழுதற மொழிவதுமொருநாளே

Thursday, 27 October 2016

391. நீலங்கொள்

ராகம் : சாரங்கா/குறிஞ்சி தாளம்: அங்கதாளம் கண்ட நடை (8)
நீலங்கொள் மேகத்தின்மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன்மணநாறும்
மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங்குலகாலா
நாலந்த வேதத்தின்பொருளோனே
நானென்று மார்தட்டும்பெருமாளே.

Tuesday, 25 October 2016

390. நீரு மென்பு

ராகம்: நவரச கன்னட தாளம்:
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
நீளு மங்க மாகி மாயவுயிரூறி
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி
நீதி யொன்று பால னாகியழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூர உறவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாயமொழியாதோ

Sunday, 23 October 2016

389. நிருதரார்க்கொரு

ராகம்: மத்யமாவதி தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெயவிறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாட்டொழு மாறே தானினியுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானுறு
சவலை தீர்த்துன தாளே சூடியுனடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
மருளி யாட்கொளு மாறே தானது
தமிய னேற்குமு னேநீ மேவுவதொருநாளே

Friday, 21 October 2016

388. நிமிர்ந்த முதுகும்

ராகம் : காபி தாளம்: சதுச்ர ரூபகம் (6)
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
நிறைந்த வயிறுஞ் சரிந்துதடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு
நினைந்த மதியுங் கலங்கிமனையாள்கண்
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
உறைந்த உயிருங் கழன்றுவிடுநாள்முன்
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்துமகிழ்வேனோ

Wednesday, 19 October 2016

387. நித்தமுற் றுனை

ராகம் : குந்தலவராளி தாளம்: அங்கதாளம் 1½
நித்தமுற் றுனைநினைத்துமிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக
நத்தியு தமதவத்தினெறியாலே
லக்யலக் கணநிருத்தமருள்வாயே

Tuesday, 18 October 2016

386. நாளு மிகுத்த

ராகம் : கமாஸ் தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 3 (6½)
நாளு மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தமதைநாடும்
ஏழை தனக்கு மநுபூதி
ராசி தழைக்கஅருள்வாயே

385. நாலிரண்டிதழ்

ராகம் : துர்கா தாளம்: அங்க தாளம் (1½ + 2 + 2 + 2 (7½)
நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள
ஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரனு
நாடி நின்றப்ர பாவா காரனு நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
நூல றிந்தம ணீமா மாடமு
மேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
சால மண்டப மீதே யேறிய
வீர பண்டித வீரா சாரிய வினைதீராய்

Saturday, 15 October 2016

384. நாராலே

ராகம்: மலஹரி தாளம்: ஆதி 2 களை
நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக் கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற் பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத்திறல்தாராய்

Wednesday, 12 October 2016

383. நரையொடு

ராகம்: நாதநாமக்ரியா தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 1½ + 2½ (7½)
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து
நயனமி ருட்டி நின்று கோலுற்றுநடைதோயா
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
நமதென மெத்த வந்த வாழ்வுற்று
நடலைப டுத்து மிந்த மாயத்தைநகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் வினையோடு
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு வினவாதோ

Tuesday, 11 October 2016

382. தோலத்தியால்

ராகம் : சுருட்டி தாளம்: சதுச்ர த்ருபுடை கண்ட நடை (20)
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்றகுடிலூடே
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்றஅருள்தாராய்

Sunday, 9 October 2016

381. தோரண கனக

ராகம் : மோகனம் தாளம்: மிஸ்ர சாபு 2 + 1½ (3½)
தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ மதகோப
வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறையஅரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழியமொழியேனே

Friday, 7 October 2016

380. துள்ளுமத

ராகம் : ஹம்சானந்தி தாளம்: அங்கதாளம் 1½ + 1 + 2 + 3 (7½)
துள்ளுமத வேள்கைக்கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத்தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும ரேசத்திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப்பெருமாளே.

Wednesday, 5 October 2016

379. திரை வஞ்ச

ராகம் : நாட்டகுறிஞ்சி தாளம்: கண்டசாபு (2½)
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி விளையாடிச்
சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முநிவர்கண மயன்மாலும்
அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
அடியென்க ணளிபரவ மயிலேறி
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
அருமந்த பொருளையினி யருள்வாயே

Tuesday, 4 October 2016

378. திரிபுரம் அதனை

ராகம்: தர்பாரி கானடா தாளம்: மிஸ்ரசாபு (3½)
திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய்த ருளியசிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகிவிடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடையவடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழிதொடலாமோ

Monday, 3 October 2016

377. தவநெறி தவறிய

ராகம் : ஆபோகி தாளம்: சதுச்ர துருவம் (14)
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடுசருவாநின்
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுதுவெனுமாறற்
றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ
குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபடவுரகேசன்
கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத்
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.

Sunday, 2 October 2016

376. தலைவலய

ராகம் : பிலஹரி தாளம்: அங்க தாளம் 2½ + 1½ + 1 (5)
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
தவறுதரு காமமுங்கனல்போலுந்
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்
சமயவெகு ரூபமும்பிறிதேதும்
அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்
டறியுமொரு காரணந் தனைநாடா
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
றபரிமித மாய்விளம் புவதோதான்

Friday, 30 September 2016

375. தரணிமிசை

ராகம்: அமிர்தவர்ஷிணி தாளம்: சதுஸ்ர த்ருவம் கண்ட நடை
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் பதுவாயுந்
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் அயர்வாகிச்
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் கழல்தாராய்

Tuesday, 27 September 2016

374. தத்தனமும் அடிமை

ராகம் : சுத்த சாவேரி தாளம்: ஆதி
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
தக்க மனையினமுமனைவாழ்வுந்
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
தைக்கு மயல்நினைவுகுறுகாமுன்
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
பற்று மருள்நினைவுதருவாயே
பத்து முடியுருளு வித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் மருகோனே

Sunday, 25 September 2016

373. தசையும் உதிரமும்

ராகம் : பாகேஸ்ரீ தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 ( 7½)
தசையு முதிரமு நிணமொடு செருமிய
கரும கிருமிக ளொழுகிய பழகிய
சடல வுடல்கடை சுடலையி லிடுசிறுகுடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலை யறிவினர் நெறியினை விடஇனி யடியேனுக்
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
வசன முறஇரு வினையற மலமற
இரவு பகலற எனதற நினதறஅநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
இறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபடமொழிவாயே

Thursday, 22 September 2016

372. ஞானா விபூஷணி

ராகம்: கானடா தாளம்: அங்க தாளம் 2½ + 2 + 2 + 2 (8½)
ஞானாவி பூஷணி காரணி காரணி
காமாவி மோகினி வாகினி யாமளை
மாமாயி பார்வதி தேவிகு ணாதரி உமையாள்தன்
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
வேதாக மேயருள் தேவர்கள் தேவந
லீசாச டாபர மேசர்சர் வேசுரிமுருகோனே
தேனார்மொ ழீவளி நாயகி நாயக
வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
சேணாளு மானின்ம னோகர மாகியமணவாளா
சீர்பாத சேகர னாகவு நாயினன்
மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
சீராக வேகலை யாலுனை ஓதவும் அருள்வாயே

Monday, 19 September 2016

371. செழுந்தாது

ராகம் : சுத்தசாவேரி தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½)
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
சிறந்தியாதி லூமாசையொழியாத
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
செயுங்காய நோயாளனரகேழில்
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
விடுங்கால மேநாயென் வினைபாவம்
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
விளம்போசை யேபேசி வரவேணும்

Thursday, 15 September 2016

370. சூதின் உணவாசை

ராகம்: வாசஸ்பதி தாளம்: கண்டசாபு 1½ + 1 (2½)
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
தூசுவழ கானவடிவதனாலே
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
ளாசைதமி லேசுழலவருகாலன்
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
தாவிதனை யேகுறுகிவருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
மாதிமுரு காநினைவுதருவாயே

Monday, 12 September 2016

369. சுருதி வெகுமுக

ராகம்: குந்தலவராளி தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 1 + 1½ + 2 (7½)
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள்
துரித பரசமய பேத வாதிகள்என்றுமோடித்
தொடர வுணரஅரி தாய தூரிய
பொருளை யணுகியநு போக மானவை
தொலைய இனியவொரு ஸ்வாமி யாகியநின்ப்ரகாசங்
கருதி யுருகியவி ரோதி யாயருள்
பெருகு பரமசுக மாம கோததி
கருணை யடியரொடு கூடியாடிமகிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபு ராரிய
கிரண சரண அபி ராம கோமள
கமல யுகளமற வாது பாடநி னைந்திடாதோ

Sunday, 11 September 2016

368. சுட்டது போலாசை

ராகம்: ஹிந்தோளம் தாளம்: சங்கீர்ணசாபு 3 + 1½ (4½;)
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தாரவெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறிமதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோனமடைவேனோ

Thursday, 8 September 2016

367. சீதமலம் வெப்பு

ராகம்: பீம்ப்ளாஸ் தாளம்: ஆதி
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றியுடலூடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்கவருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்குளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்த
தாள்தர நினைத்துவரவேணும்

Wednesday, 7 September 2016

366. சிவஞான புண்டரிக

ராகம்: கல்யாணி தாளம்: கண்டசாபு (2½)
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
சிவபோக மன்பருகஅறியாமற்
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
திகழ்மாதர் பின்செருமியழிவேனோ
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
தயவாய்ம கிழ்ந்துதினம்விளையாடத்
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
ததிநாளும் வந்ததென்முன்வரவேணும்

Tuesday, 6 September 2016

365. சாங்கரி பாடியிட

ராகம் : வாசஸ்பதி தாளம்: சங்கீர்ணசாபு 2 + 1½ + 1 (4½)
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர்வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுறவடியேனுந்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடுசிவயோகந்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகைஅருளாதோ

Saturday, 3 September 2016

364. சலமலம் அசுத்த

ராகம் : குந்தலவராளி தாளம்: அங்கதாளம் 4 + 1½ (5½)
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ளுற்றுமிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்களொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி யவத்தி லுற்றுமகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
கடுவினை தனக்குள் நிற்பதொழியாதோ

Wednesday, 31 August 2016

363. சருவிய சாத்திர

ராகம் : ஆனந்த பைரவி தாளம்: அங்க தாளம் 3 + 1½ + 3 (7½)
சருவிய சாத்திரத்திரளான
சடுதிக ழாஸ்பதத்தமையாத
அருமறை யாற்பெறற்கரிதாய
அனிதய வார்த்தையைப்பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்தெழுபார
நெடுதிரை யார்ப்பெழப்பொருதோனே
பொருளடி யாற்பெறக்கவிபாடும்
புலவரு சாத்துணைப்பெருமாளே.

362. சமய பத்தி

ராகம் : சாரங்கா தாளம்: அங்கதாளம் (1½ + 2 + 2 + 3 (8½)
சமய பத்தி வ்ருதாத்தனைநினையாதே
சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி
அமைய சற்குரு சாத்திர மொழிநூலால்
அருளெ னக்கினி மேற்றுணைதருவாயே
உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி
உரிய மெய்த்தவ மாக்கிநலுபதேசத்
தமிழ்த னைக்கரை காட்டியதிறலோனே
சமண ரைக்கழு வேற்றிய பெருமாளே.

Saturday, 27 August 2016

361. சந்தம் புனைந்து

ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம்: ஆதி
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங் கைவஞ்சிமனையாளுந்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்களிளைஞோரும்
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
லென்றும் புகழ்ந்து மிகவாழும்
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள்தரவேணும்

360. கொடிய மதவேள்

ராகம் : வாசஸ்பதி தாளம்: அங்க தாளம் 2½ + 2 + 3 (7½)
கொடியமத வேள்கைக் கணையாலே
குரைகணெடு நீலக்கடலாலே
நெடியபுகழ் சோலைக்குயிலாலே
நிலைமைகெடு மானைத்தழுவாயே
கடியரவு பூணர்க்கினியோனே
கலைகள்தெரி மாமெய்ப்புலவோனே
அடியவர்கள் நேசத்துறைவேலா
அறுமுகவி நோதப்பெருமாளே.

Friday, 26 August 2016

359. குருதி தோலினால்

ராகம் : அடாணா தாளம்: அங்கதாளம் 1½ +1½ + 2½ (5½)
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவிவிடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலியெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவுமிளையோனே
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாடஅருள்தாராய்

358. குகையில் நவநாதரும்

ராகம் : பெஹாக் தாளம்: அங்க தாளம் 2½ + 1½ + 1½ + 1½ (7) (
குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்கமுரல்வேதக்
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரி யுங்கொ டுங்கணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும்அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்றுஅடைவேனோ

Wednesday, 24 August 2016

357. காதி மோதி

ராகம் : சங்கராபரணம் தாளம்: 1½ + 1½ + 2½ + 2 + 3 (10½)

காதி மோதி வாதாடு நூல்கற் றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப்பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக்குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக்கலைவாரே
நாத ரூப மாநாத ராகத்துறைவோனே
நாக லோக மீரேழு பாருக்குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப்பெருமாளே.

Tuesday, 23 August 2016

356. கவடு கோத்தெழு

ராகம்: பாகேஸ்வரி தாளம்: மிஸ்ர அட 3½ + 3½ (18 - /7/7 0 0)
கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் வீடானதுகூட
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீதினும்வீழேன்
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
தாழா தீயேன் வாழா தேசாவதுசாலத்
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
தாவா மாறே நீதா னாதாபுரிவாயே

Monday, 22 August 2016

355. கருப்பையில்

ராகம்: ஆரபி தாளம்: சங்கீர்ண த்ரிபுடை
கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்துமறுகாதே
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்களுரையாதே
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்கருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கிமகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்சமரவேளே
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்தமயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்புமிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்தபெருமாளே.

Friday, 19 August 2016

354. கருப்பற்றூறி

ராகம் : நடபைரவி தாளம்: திச்ர ஏகம் (3)
கருப்பற் றூறிப் பிறவாதே
கனக்கப் பாடுற்றுழலாதே
திருப்பொற் பாதத்தநுபூதி
சிறக்கப் பாலித் தருள்வாயே
பரப்பற் றாருக்குரியோனே
பரத்தப் பாலுக்கணியோனே
திருக்கைச் சேவற்கொடியோனே
செகத்திற் சோதிப்பெருமாளே.

353. கடலை பயறொடு

ராகம் : பெஹாக் தாளம்: 1½ + 2 + 4
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவையினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகையொழியாதோ

Saturday, 13 August 2016

352. ஓது முத்தமிழ்

ராகம் : சாவேரி தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2½ (8)
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
வேத னைப்படு காமாவி காரனை
ஊன முற்றுழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி
யோக மற்றுழல் ஆசாப சாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை
ஊதி யத்தவம் நாடாத கேடனைஅன்றிலாதி
பாத கக்கொலை யேசூழ்க பாடனை
நீதி சற்றுமி லாகீத நாடனை
பாவி யர்க்குளெ லாமாது ரோகனைமண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ தெந்தநாளோ

351. ஒழு கூனிரத்தம்

ராகம்: மணிரங்கு தாளம்: ஆதி
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
உயர்கால் கரத்தினுருவாகி
ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
உழல்மாய மிக்குவருகாயம்
பழசா யிரைப்பொ டிளையா விருத்த
பரிதாப முற்றுமடியாமுன்
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
பகர்வாழ் வெனக்குமருள்வாயே

Wednesday, 10 August 2016

350. ஏட்டிலே

ராகம் : காவடி சிந்து தாளம்: மிஸ்ர சாபு 1½ + 2 (3½)
ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினிதென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகுலங்கள்பேசிக்
காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉலகங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொழிந்திடாதோ

Thursday, 4 August 2016

349. என் பந்த வினை

ராகம்: பூர்வி கல்யாணி தாளம்: மிஸ்ர ஜம்பை (10)
என்பந்த வினைத்தொடர் போக்கிவிசையமாகி
இன்பந்தனை யுற்றும காப்ரிய மதுவாகி
அன்புந்திய பொற்கிணி பாற்கடலமுதான
அந்தந்தனி லிச்சைகொ ளாற்பதமருள்வாயே
முன்புந்தி நினைத்துரு வாற்சிறு வடிவாகி
முன்திந்தி யெனப்பர தாத்துட னடமாடித்
தம்பந்த மறத்தவ நோற்பவர்குறைதீரச்
சம்பந்த னெனத்தமிழ் தேக்கியபெருமாளே.

Tuesday, 2 August 2016

348. எழுபிறவி

ராகம்: கரஹரப்ரியா தாளம்: அங்கதாளம் 2½ + 1½ + 1½(5½)
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்துவளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்துமிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தினருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை யருள்வாயே

Monday, 1 August 2016

347. எழுதரிய அறுமுகம் (விழையும் மனிதரை)

ராகம்: ஆனந்த பைரவி தாளம்: சதுச்ர மட்யம் கண்ட நடை (25)
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந்துங்கநீள்பன்
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ்செம்பொனூலும்
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ்செங்கைவேலும்
முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந்தம்பிரானே.
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன்சிந்தியாதோ

346. எதிரொருவர்

ராகம் ஹம்சானந்தி தாளம்: அங்கதாளம் 2½ + 2½ + 2½ + 2½ + 2½ + 2½ + 1½ + 2 (18½)
எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
திட்டுக்ரி யைக்கேயெழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
யெட்டெட்டு மெட்டாதமந்த்ரவாளால்
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
வெட்டித் துணித்தாண்மைகொண்டுநீபம்
விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
வெட்சித் திருத்தாள்வணங்குவேனோ

Sunday, 31 July 2016

345. எட்டுடன் ஒரு

ராகம்: த்விஜாவந்தி தாளம்: ஆதி 2 களை
எட்டுட னொருதொளை வாயா யதுபசு
மட்கல மிருவினை தோயா மிகுபிணி
யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர்நிலையாக
எப்படி யுயர்கதி நாமே றுவதென
எட்பகி ரினுமிது வோரார் தமதம
திச்சையி னிடருறு பேரா சைகொள்கடலதிலேவீழ்
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு
முப்பதி னறுபதின் மேலா மறுவரு
முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக
முக்குண மதுகெட நானா வெனவரு
முத்திரை யழிதர ஆரா வமுதன
முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே

Saturday, 30 July 2016

344. ஊனேறெலும்பு

ராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
ஊனே றெலும்பு சீசீ மலங்க
ளோடே நரம்புகசுமாலம்
ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
மூனோ டுழன்றகடைநாயேன்
நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனையோத
நானா ரிரங்க நானா ருணங்க
நானார் நடந்துவிழநானார்

Friday, 29 July 2016

343. ஊனுந் தசை

ராகம் சிந்து பைரவி தாளம்: ஆதி
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழியொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுனதருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில்மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள்புரிவாயே

Thursday, 28 July 2016

342. உறவின் முறை

ராகம்: வலசி தாளம்: சதுஸ்ர துருவம் கண்ட நடை (35)
உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற
பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற
உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியுமந்தநாளில்
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்
உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும்அந்தமார்பும்
மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய
மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர
மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர்வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து
மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன்வந்திடாயோ

Wednesday, 27 July 2016

341. உலகத்தினில்

ராகம்: ஆந்தோளிகா தாளம்: திச்ர த்ரிபுடை (7)
உலகத்தினில் மாதரு மைந்தரும்
உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
உயர்துக்கமு மோடுற வென்றுறவருகாலன்
உதிரத்துட னேசல மென்பொடு
உறுதிப்பட வேவள ருங்குடில்
உதிரக்கனல் மீதுற என்றனையொழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
கதறிப்பத றாவுரை வென்றுயர்
கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடுகளிகூருங்
கவலைப்புல மோடுற என்துயர்
கழிவித்துன தாளிணை யன்பொடு
கருதித்தொழும் வாழ்வது தந்திடநினைவாயே

Tuesday, 26 July 2016

340. இன மறை விதங்கள்

ராகம்: பூபாளம் தாளம்: அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 (5)
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
கிணியிலகு தண்டையம்புண்டரீகம்
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
திரவுபகல் சந்ததஞ்சிந்தியாதோ
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்
றுளையுமொரு வஞ்சகன்பஞ்சபூத
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்
துழலுமது துன்புகண்டன்புறாதோ

339. இருந்த வீடும்

ராகம்: வசந்தா தாளம்: சதுச்ர அட (12)
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவருமுறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும்வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையெனமகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபடஅருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன்மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதருபுலவோனே
சிவந்த காலுந் தண்டையு மழகியபெருமாளே.

Monday, 25 July 2016

338. இருநோய் மலம்

ராகம் : சிந்துபைரவி தாளம்: அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 (5)
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
யினிதாவ ழைத்தெனது முடிமேலே
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
ரியல்வேல ளித்துமகி ழிருவோரும்
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
மொளிர்வேத கற்பகந லிளையோனே
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
உபதேசி கப்பதமுமருள்வாயே

Thursday, 21 July 2016

337. இரவொடும் பகலே

ராகம் : தர்பாரி கானடா தாளம்: அங்க தாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலேபெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே வயதாகி
நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறேவிழலாகி
நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாதழிவேனோ

Wednesday, 20 July 2016

336. இத்தரணி மீதில்

ராகம்: அசாவேரி தாளம்: ஆதி (எடுப்பு 3/4 இடம்)
இத்தரணி மீதிற்பிறவாதே
எத்தரொடு கூடிக் கலவாதே
முத்தமிழை யோதித்தளராதே
முத்தியடி யேனுக்கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா
சத்தசொரு பாபுத் தமுதோனே
நித்தியக்ரு தாநற்பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப்பெருமாளே.

Tuesday, 19 July 2016

335. இசைந்த ஏறும்

ராகம்: ரீதிகௌளை தாளம்: சதுச்ர அட (12)
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையுமழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையுமுடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவியகுருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரறமுனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர்நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில்வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவியபெருமாளே.

334. ஆனாத ஞான புத்தி

ராகம்: சுருட்டி தாளம்: அங்கதாளம்
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ரழியாதே
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்
ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினிதுலகேழும்
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்இடராழி
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும்மறவேனே

Monday, 18 July 2016

333. ஆவி காப்பது

ராகம் : ஆரபி தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 (5½)
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
தாமெ னாப்பர மார்த்தமதுணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
நேக நாட்டொடு காட்டொடுதடுமாறிப்
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
பூவி னாற்றம றாத்தனகிரிதோயும்
போக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
போது போக்கியெ னாக்கையைவிடலாமோ

332. ஆராதனர்

ராகம்: கீரவாணி தாளம்: திச்ர த்ரிபுடை
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்துமடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து மருளாதே
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க நியமாக
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
நேரேபர மாநந்த முத்தி தரவேணும்

Sunday, 17 July 2016

331. ஆராத காதலாகி

ராகம்: திலங் தாளம்: அங்கதாளம் 2½ + 1½ +1½ + 2 (7½)
ஆராத காத லாகி மாதர்த
மாபாத சூட மீதி லேவிழி
யாலோல னாய்வி கார மாகியிலஞ்சியாலே
ஆசாப சாசு மூடி மேலிட
ஆசார வீன னாகி யேமிக
ஆபாச னாகி யோடி நாளுமழிந்திடாதே
ஈராறு தோளு மாறு மாமுக
மோடாரு நீப வாச மாலையு
மேறான தோகை நீல வாசியுமன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதகமன்புறாதோ

Wednesday, 13 July 2016

330. ஆரவாரமாயிருந்து

ராகம்: கேதாரம் தாளம்: ஆதி திச்ர நடை 2 களை
ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
ஆழி வேலை போன்மு ழங்கியடர்வார்கள்
ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து
ஆலைமீதி லேக ரும்புஎனவேதான்
வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
வீசு வார்கள் கூகு வென்றுஅழுபோது
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து
மேலை வீழ்வ ரீது கண்டுவருவாயே

329. ஆசைகூர்

ராகம்: யமுனா கல்யாணி தாளம்: ஆதி
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்துநடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டியொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தியளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி லணிவேனோ

Sunday, 10 July 2016

328. ஆசார வீனன்

ராகம் : ஹம்சவிநோதினி தாளம்: அங்கதாளம் 2½ + 1½ + 2 (6)
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நீச னநுசிதன்விபரீதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம ணனல்வளி யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனெனநினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய நினைவாயே

Saturday, 9 July 2016

327. அமல வாயு

ராகம்: யமுனா கல்யாணி தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 2½
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான மேமூலஅனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபானமதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாகவுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீதமருள்வாயே

Friday, 8 July 2016

326. அப்படி ஏழும்

ராகம்: கேதாரம் தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 2 (5½)
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகைமிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயமதடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரிதருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள்புரிவாயே

Thursday, 7 July 2016

325. அதல சேடனார்

ராகம் : பிருந்தாவன சாரங்கா தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½)
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாளமவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராடமதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடிவரவேணும்

Wednesday, 6 July 2016

324. அடியார் மனம்

ராகம் : சாமா தாளம்: அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½)
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்துவிடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்தவெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்துனருள்தாராய்

Monday, 4 July 2016

323. அகரமுதலென

ராகம் : கரஹரப்ரியா தாளம்: சதுச்ர துருவம் கண்ட நடை (35)
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளுமாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமுமற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே

Tuesday, 28 June 2016

322. கும்பகோணம்

ராகம் : யமுனாகல்யாணி தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2½ + 2 (8)
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவசெகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்வருதேவே

Saturday, 25 June 2016

321. கழைமுத்து மாலை

ராகம்: மத்யமாவதி தாளம்: ஆதி
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலைமலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலையரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவஅடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொடருள்வாயே

320. மாலினால் எடுத்த

ராகம் : மனோலயம் தாளம்:
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தையநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் கணமூடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்துஅருள்வாயே