தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1

சிவாகமங்கள் கூற்றுப்படி பரசிவம் ஒன்றே மெய்ப்பொருள். அது சத்-சித்-ஆனந்த (உண்மை, அறிவு, இன்பம்) வடிவாக இருக்கிறது. முழுமுதற் பொருளாகிய கடவுள் பொருளால் ஒன்றேயாயினும், சிவம், சக்தி எனத் தன்மையால் இரண்டாய் நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலான தன் சொரூப நிலையில் நிற்கும்பொழுது சிவம் பராபரம் என வழங்கப்படும். சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது, அதன் சக்தி பராபரை எனப்படும்.

பரப்பிரம்மத்தின் ஆற்றலால் உலகமும்(சகம்), உயிரும்(சீவன்) தோற்றத்திற்கு வருகின்றன. இறைவனுடைய பேரருளே படைப்புத் தொழிலாக, சக்தியின் மூலமாகப் விளையாட்டாக பரிணமிக்கின்றது. இந்த திருவருள் விளையாடல் எண்ணிலா உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவற்றிற்கு வேறு வேறு வினைகளையும் தரும்; உலகெங்கும் பரவி உயிருக்குயிராய் நின்று, உயிருக்கு அறிவையும், ஆற்றலையும் அளித்து, படிப்படியாக உயிர்களைப் பக்குவமடையச் செய்து, வீட்டுப் பேற்றினையும் வழங்கும்.

உலகத் தோற்றத்தின் தொடக்க நிலையில் இயற்கை நிலையிலுள்ள பராபர சிவம், உயிர்களை உய்விக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் ஆதிசிவனாய் நின்று தனது ஆற்றலாகிய ஆதிசக்தியின் வடிவமான மாயா சக்தியால் இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கின்றது. மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அந்த மாயைதான் ஆணவ மலத்துடன் விரவி தூய்மை இழந்தும், கலவாது தூய்மையாயும், இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும்.

இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் 'ஏறுதல், குறைதல், ஒடுங்கல்' என்னும் வேறுபாடுகளை உடையன.

ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதலில் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி முதலில் சிவன் எனும் ஞான சத்தியால் தன் நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவம் தோன்றுவிப்பான். பின்னர் கிரியா சத்தியாலும் சத்தி என்னும் நிலையில் சிவத்துடன் தொடர்ந்து பல நிலைகளில் நின்று பின்னர் சதாசிவன், மகேச்வரன், உருத்திரன், திருமால், அயன் முதலிய ஐவருக்கும் பிருதிவி முதலான ஐம்பூதங்களுக்கும் தலைமைப் பொருளாக நிற்பாள்.

சுத்தமாயையிலிருந்து தோன்றும் ஐந்து தத்துவங்கள் "சிவதத்துவம்". அவை மூலப் பொருளின் உள்ளியல்பை உரைக்கின்றன. சுத்த மாயை ஆணவ மலத்தோடு கலவாதது. சிவ தத்துவம் ஐந்து — நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை.

நாதம் — முதலில் ஆதி சிவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் விரிவடையத் தக்கது எனப் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதியாக சிவதத்துவம் என்ற நாதம் தோன்றும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது. தூய அறிவாலான பரம்பொருளின் முழுமையான நனவிலி நிலை (unconscious mind). இதுவே பரசிவ வடிவம் ஆகும்.

விந்து - சக்தி. முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியை தனது கிரியா சத்தியால் மேலும் விருத்திப்படுத்துவதால் விந்துவாகிய சத்தி தோன்றும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது. அந்த இயக்கத்தாலேயே, சிவத்துடன் இணைந்து ஏனைய தத்துவங்களை உருவாக்க ஆரம்பிக்கும் இறைவனின் திருவருட்சக்தியின் நிலை ஆகும்.

சாதாக்கியம் - சதாசிவன். இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் 'இது இவ்வாறு விரிவடையத்தக்கது' என்று நோக்கியும், கிரியா சத்தியால் 'இது இவ்வாறு விரிவடைக' என்று கருதியும் நிற்பான். இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது. ஏனைய தத்துவங்களின் தோற்றம் தூண்டப்படும்.

ஈசுரம் - ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.செயலற்ற நிலையில் இருக்கும் ஆன்மாக்களை மறைத்தலுக்குள்ளாக்கும் செயல்பாடு ஆரம்பமாக, அதனூடே மறைவாக இறையறிவும் இயங்கிக் கொண்டிருக்கும்.

சுத்த வித்தை. ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம் இதன்போது, முழுமை்யாகச் செயற்பட, செயல் (கிரியாசக்தி) பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதுவரை பரமசிவம் என்னும் பர தத்துவம் சுத்தமாயையுடன் சேர்ந்து ஐந்து சிவ தத்துவங்களை தோற்றுவித்தது பற்றி பார்த்தோம். இனி அசுத்தமாயையுடன் சேர்ந்து தோற்றுவிக்கும் ஏனைய தத்துவங்களை பார்ப்போம்.

அசுத்த மாயை சுத்த மாயையுடன் சேர்ந்த சுத்தாசுத்தம் (சுத்த-அசுத்தம் அல்லது மிச்சிரம்) எனும் நிலையில் ஏழு வித்தியா தத்துவங்களையும், தனியாக மற்ற இருபத்து நான்கு பிரகிருதி தத்துவங்களையும் தோற்றுவிக்கின்றன. தத்துவங்கள் பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்கள் ஆகும். மாயை பர தத்துவத்தால் இயக்கப்படும் போது, இந்த முப்பத்தாறு தத்துவங்களும் படிப்படியாகத் தோன்றி ஜீவனாக உருவெடுக்கிறது.

இத்தொடரின் மற்ற பகுதிகளையும் படிக்கவும்:
பகுதி 2
பகுதி 3
To read the series in English: What Are Tattvas?

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே