சங்கர அத்வைதமும் சைவ சித்தாந்த அத்வைதமும்
அத்வைதம் அல்லது அபேதம் என்றால் என்ன? அபேதம்- வேற்றுமையின்மை. உள்ளது ஒரு பொருளே. அப்பொருளே பிரமம் எனப்படும் கடவுள். பிரமத்திற்கு வேறாக உயிர்கள் எனத் தனியே இல்லை. பிரமமாகிய ஒரு பொருளே பல்வேறு உயிர்களாகத் தோற்றம் அளிக்கிறது. பொன் என்ற ஒரு பொருளே பல்வேறு அணிகலன்களாக மாறித் தோன்றுதல் போன்றது இது. பொன்னுக்கும் அணிகலனுக்கும் இடையே வேற்றுமையில்லை. பொன்னே அணிகலன்; அணிகலனே பொன். அதுபோலப் பிரமத்திற்கும் உயிருக்கும் வேற்றுமையில்லை. பிரமமே உயிர்; உயிரே பிரமம். கடவுளும் உயிரும் பொருளால் ஒன்றே ஆயினும் வேறு போலத் ததோன்றுவது மாயையின் ஆதிக்கத்தால் தான். மற்றபடி கடவுளும் உயிர்களும் ஒன்றே என்பது சங்கர அத்வைதம் கூறும் கொள்கை . அபேத வாதம் கூறுவோர் வேதத்தில் வரும் பிரமம் அத்துவிதம் என்ற தொடரை மேற்கோள் காட்டுவர். துவிதம்- இரண்டு; அத்துவிதம்- இரண்டு இல்லை. பிரமம் ஏகம் என்பதற்குப் பிரமம் ஒன்றே உள்ளது; பிரமம் இல்லையாயின் ஒரு பொருளும் இல்லை. அகர உயிர் இன்றேல் அக்கரங்கள் இல்லை - அகரமாகிய உயிரெழுத்து இல்லையாயின் எழுத்துக்களே இல்லை. அத்துவிதம் என்பதற்கு இரண்டு இல்லை எனப் பொருள் கொண்டு இறைவனும் உலகமும் ஒன்றே, இ