உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து உணர்வு நிலைகள்

காரிய அவத்தைகளும் காரண அவத்தைகளும்

அவத்தை / அவஸ்தை என்பது உணர்வு நிலை. அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா உடலில் கருவி கரணங்களுடன் கூடி ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. உயிர் அடையும் ஐந்து நிலை வேறுபாடுகள் காரிய அவத்தைகள் எனப்படும். இவை பின்வருமாறு :

  • நனவு

    – சாக்கிரம், பிரக்ஞை நிலை,
    Conscious mind linked to gross body or sthoola sharira :
    விழிப்புநிலையில் நாம் நம்மையும் நம் மனதில் பொதிந்திருக்கும் விருப்பங்கள், கவலைகள், எதிர்ப்பார்ப்புகள், ஆகிய எல்லாவற்றையும் உணர்கிறோம். ஜாக்ரத் என்பது முழுமையான தன்னுணர்வு நிலை. காது முதலான ஞானேந்திரங்களால், ஒலி முதலான விஷயங்களை அறிந்து வெளிப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது.
  • கனவு

    – ஸ்வப்னம்,
    subconscious mind linked to subtle body :
    கனவுநிலை என்பது பாதி தன்னுணர்வு அழிந்த நிலை. விழிப்பு நிலையில் எது பார்க்கப்பட்டதோ, எது கேட்கப்பட்டதோ அதனால் ஏற்படும வாசனை மூலம் உறக்கத்தில் தோன்றும் பிரபஞ்சமே கனவு நிலை எனப்படும்.
  • உறக்கம்

    – சுஷுப்தி/சுழுத்தி, ஆழ்நிலை,
    unconscious mind linked with causal body :
    கனவுநிலையில் ஆழ்ந்து செல்லும் நிலை சுஷுப்தி. எதுவும் அறியப்படாது, ஆனந்தமாக தூங்கும் அனுபவ நிலையே தூக்கமும், முற்றிலும் தானற்ற நிலையும் ஆகும்.
  • பேருறக்கம்

    – துரியம்,
    self-consciousness with pure awareness of their own non-dual Self and correspons to total silence/stillness of mind and body :
    தன்னிலையை இழந்து எல்லா உயிர்களின் ஒட்டுமொத்த தன்னிலையின் ஒரு பகுதியாக இயல்பாகத் திகழும் நிலை
  • உயிர்ப்பு அடங்கல் – துரியாதீதம்

ஒருவன் விழித்திருக்கும் பொழுது அவன் கனவு நிலையிலோ அல்லது உறக்க நிலையிலோ இல்லை; ஆழ்ந்து தூங்கும் பொழுது விழிப்பு அல்லது கனவு நிலையிலோ இல்லை; கனவு காணும் போது விழிப்பிலோ அல்லது ஆழ்ந்த தூக்கத்திலோ இல்லை; ஆனால் இம்மூன்று நிலையிலும் அடித்தளமாக துரிய நிலை இருக்கிறது. இந்நிலை விழிப்பும் ('பகலும்') இல்லை, ஆழ்ந்த தூக்கமும் ('இரவும்') இல்லை. கனவு கண்டு விழித்தவுடன் கனவில் கண்டதை நினைவு கூறுகிறோம். கனவு நிலையில் 'நான்' என்ற உள் உணர்வு அடித்தளமாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஒரு சாட்சி போல பார்த்து கொண்டிருக்கிறது. கனவில்லாத ஆழ்ந்த தூக்கத்தில் 'நான்' என்கிற உணர்வு இல்லாதிருந்தாலும், ஆழ்ந்த ஒரு உணர்வு விழித்திருப்பதால் நாம் விழித்தவுடன் 'நன்றாக தூங்கினோம்' என்று உணர்கிறோம். இந்த நிலையில் அறிந்து கொள்பவன், அறிவு, அறியப்படு பொருள் என்று எந்த பாகுபாடும் இல்லை. கனவற்ற தூக்கம் நமக்கு 'நான்' என்ற உணர்வைத் தாண்டி ஒரு எல்லையற்ற ஆத்ம உணர்வு இருக்கிறது என்று உணர்த்துகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் உணர்வற்று இருக்கிறோம்; ஆனால் துரிய நிலையில் வெளி உலக பிரக்ஞை இல்லாமல் முழு உள் விழிப்புடன் ஆத்ம உணர்வில் ஒன்றி இருக்கிறோம்.

இவற்றுக்குக் காரணமாக விளங்குபவை கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்றும் காரண அவஸ்தைகள். கனவு காலத்தில் உயிர் உடல் முதலிய கருவிகள் இல்லாமல் முற்றிலும் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு இருக்கின்ற நிலையைக் 'கேவலம்' என்பர். விழித்துக்கொண்டிருக்கும் 'சகலம்' என்று வழங்கப்படும் நிலையில் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் அதற்குக் கூட்ட, அதன் அறிவு ஆற்றல்கள் ஓரளவு விளங்கும். அதன் பின்னர் உயிர் பக்குவம் பெற்று ஐந்து மலங்களிலிருந்தும் நீங்கிப் பிறவியை அழித்துத் தூய்மை எய்திய நிலை 'சுத்தம்' எனப்படும்.

இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது கேவல நிலை. அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது சகல நிலை எனலாம். இவ்வுவமையை மேலும் சிறிது நுணுகி நோக்குவோம்.

விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படுவதில்லை. பொருள்களின் வண்ணமும் வடிவும் மாறித் தோன்றுதல் உண்டு. ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு எது காரணம்? விளக்கொளி காரணமா? இருள் காரணமா? விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது. பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.

விளக்கொளி வராதபோது பொருள்களை முழுதுமாக மறைத்து நின்ற இருளே விளக்கொளி வந்த காலத்தில் அவ்வாறு மறைக்க மாட்டாமல் அவ்வொளியின் சார்பினால் பொருள்களை மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது, அதுபோலவே, கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள் சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.

Comments

  1. இந்நிலைகளை அனுபவம் செய்த பெரியோர்கள் உண்டா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே