வள்ளி சன்மார்க்கம்

முருகன் வள்ளியின்பால் நடத்தியது வெறும் காதல் அல்ல. இது இறைவன் பக்குவ ஆன்மாக்களுக்கு தானே வந்து அருளும் நிலை. வள்ளி சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி. அவள் முருகன்பால் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி. இது, அடியார்களை முருகப்பெருமான் வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை. வேலவனின் இச்சா சக்தியாக திகழ்வது வள்ளி. ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும்.

கருணகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு முருகன் எழுந்தருளினான். கருணை கூர்தலாவது, கருணை பெறுவோரின் முயற்சி மிகச் சிறியதாக இருந்தும் கருணை தருவோரின் முயற்சி பெருகி இருத்தல். இதை வள்ளி எம்பெருமாட்டியை ஆட்கொண்ட நிகழ்ச்சியில் வைத்துக் காட்டினான், முருகன். குற்றங்கள் இருந்தாலும் மறந்து, அன்பு வித்துத் தோன்றிய இடத்தில் அதை வளரச் செய்கின்ற பேரருளை வழங்குதற்கு நான் பிறந்தேன்’ என்ற உண்மையை அவன் சிவபெருமானிடத்தில் சொன்னான். வள்ளி சன்மார்க்கம் என்பது அதுதான்.

சிவனாருக்குக் கிடைத்த இந்த விளக்கமே தனக்கும் உபதேசிக்கப்பட்டது என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கின்னம் குறித்து .. 'எனத் தொடங்கும் 24ம் அலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.

கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.

"முன்னாளில், வேடுவர் குலக்கொடி வள்ளியம்மையை, குறிஞ்சி நிலத்து வள்ளிமலையில் நீ மணந்து அருளினாய். அவர்களின் ஊது குழல்கள், கொம்புகள், எக்காளங்கள், மேளங்கள் முதலியவை முழங்க அம்மையின் கரம் பிடித்தாய். முருகா! நீ நான் பிறவிநோய் நீங்கி வாழும்பொருட்டு என் செவிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்ன குன்னத்தை (தெய்வ ரகசியத்தை), கோடு குழல் சின்னம் முதலிய இசைக்கருவிகள் முழங்க நீ வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடமாகிய குறிச்சி ஊருலகம் எல்லாம் அறிய வெட்ட வெளியாக்கிவிட்டதே. தெய்வ ரகசியத்தை கொட்டு முழக்கோடு வெளியிடுவதாக அல்லவா இச்செயல் உள்ளது?!

"நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள் ‘யான் எனது’ என்னும் தற்போதத்தை விடவேண்டும் என்பது. ‘யாரொருவர் யான் எனது என்னும் ஆணவச் செருக்கற்று என்னை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நான் எளியன்; குற்றேவல் செய்பவன்’ என்பதல்லவா நீ எனக்கு உபதேசித்த இரகசியம். நீ உபதேசித்த முறையில் உன்னை வழிபட்டவள் வள்ளிப் பிராட்டி. அதனால் அல்லவா, நீ அவள் வாழ்கின்ற குறிச்சிக்குச் சென்று அவள் மகிழும்படியாக பல விளையாடல்கள் நிகழ்த்தி, அவளுக்குக் குற்றேவல் செய்து, அவளைத் திருமணமும் செய்து கொண்டு உன் தேவியாக்கிக் கொண்டாய்," எனக் கேட்டு அருணகிரிநாத சுவாமிகள் முருகப் பெருமானைப் கொண்டாடுகின்றார்.

வள்ளி கல்யாணம்

தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை வென்று தேவர்களை சிறை விடுத்தார் முருகன். தேவேந்திரன் மகிழ்ந்து, தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். சூரனை வென்று தெய்வானையை மணந்தபின், திருத்தணிகை வந்து யோகத்தில் அமர்ந்தார் குமரவேள். நாரதர் அவரிடம் வந்து, தணிகைக்கு அருகில் வள்ளிமலையில் வாழ்ந்து வரும் வள்ளியின் பெருமைகளை விவரித்தார்.

அவளுக்கு அருள்புரிய, திருவுளம் கொண்ட முருகன் வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு தினைப் புனத்தில், வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும் வேடமிட்டு, லீலைகள் பல செய்து, அவளை மணம் புரிய விரும்பி, காதல் மொழிகளைப் பேசினார்.

வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக, அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார். அவர் யானை வடிவில் வந்து, வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி, வயோதிகராக வந்த முருகனை அணைத்துக்கொண்டாள் வள்ளி.

இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி, மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து, ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

வள்ளியாகிய ஜீவாத்மாவிடம் “நீ மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து, நீ யார் என்பதையும் எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியாது மயங்கி விட்டாய்’ என்று குருவாக வந்து அவளை மீட்கிறது. தினைப்புனம் என்பது உலகம்; தினைக் கொல்லை, ஞானப் பயிர் விளையும் இடம்; வள்ளி, பரிபக்குவம் அடைந்த நல்லுயிர். குறவர் குலமகளாகிய வள்ளியிடம் முருகன் தானே வலிந்து சென்று நயந்து மணந்து கொண்டது, இறைவனின் எளிமைத் தன்மையைக் காட்டுவதாகும்.

இந்த நெறிமுறையை 'வள்ளி சன்மார்க்கம்' என்றே பெயரிட்டு "கள்ளக் குவாற்பை” என்னுந் திருப்புகழில் கீழ்க்கண்ட வரிகளில் குறிப்பிட்டு இதையே தான் தன் தந்தையாருக்கும் உபதேசித்தார் என்று உறுதிபடுத்துகிறார்.:

வள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று     மிளையோனே
பொழிப்புரை: வள்ளி சன்மார்க்கம்=வள்ளி பிராட்டியார் அநுட்டித்த நன்னெறி என்னும் உபதேசத்தை கேட்ட தந்தையார்க்கு ஒரு கணப்பொழுதில் உபதேசித்த இளம்பூரணரே! விள்ளை = விள் + ஐ; விள்ளுதல் = சொல்லுதல்; ஐ = அரசன், ஆசான்; வல்லை = காலம் விரைந்து செல்லுதல், கால விரைவு;

Comments

  1. I'νe read several excellent stuff here. Certainlу worth bookmarking for revisiting.
    I surprise how a lot effort you set to make one of these fantastic informative web sіte.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே