வந்து வந்து வித்தூறி : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song vanthu vanthu (வந்து வந்து வித்தூறி ) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"வந்து வந்து வித்தூறி" என்று தொடங்கும் தில்லைத் திருத்தலப் பாடல். வந்து வந்து பிறக்கிறான் மனிதன். வாழத் தெரியாமல் நொந்து நொந்து வாழ்கிறான். பின் வெந்து வெந்து மடிகிறான். அந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவிக்கத் தயாளன் முருகன் வர வேண்டும் என அருணகிரியார் ஏங்கிப் பாடும் பாடல். மனித குலமே சம்சார சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதாலே, அருணகிரியார் வேண்டுவது மனித குலம் உய்யத் தான். ஞானிகள், இவ்வாறு, இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாய் அமைந்து நம்மைப் பக்குவப் படுத்தப் பாடு படுகிறார்கள். முருகன் எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை வண்ணக் காட்சியாய் நம் முன்னே விரிக்கும் பாடல். கந்தனை வந்தனை செய்து கொண்டு, பாட்டின் பொருள் பார்ப்போமா?

வந்து வந்து வித்தூறி எந்தனுடல்
வெந்து வெந்து விட்டோட நொந்துயிரும்
வஞ்சினங்களிற் காடு கொண்ட வடிவங்களாலே

_ மீண்டும் மீண்டும் கருவடைந்து, ஜனித்து, ஜனித்துப் பின் மரித்து, நான் துன்பச் சுழலில் சுற்றிச் சுற்றி வந்து துடித்திருப்பதோ முருகா? "மறுபடியும் பிறவி எடுத்தே தீருவேன்" என்பது போல் உயிர் வினைகளில் உழன்று கொண்டிருக்க, வெவ்வேறு பிறவிகளில் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து உடல் குழம்பிக் கலங்க,

மங்கி மங்கி விட்டேனை உன்றனது
சிந்தை சந்தோஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி அண்டரொடு தொண்டர் சூழ

விளக்கம் : பிறவி எடுத்து எடுத்துக் களைத்து அழிந்து கொண்டிருக்கும் என்னை ஆட்கொள்ள, "பிணி முகம் " என்ற யானையின் மேல் ஆரோகணித்து, அண்டரும் உன் தொண்டரும் புடை சூழ வந்து நகை முகம் காட்டி என் நம்பிக்கை முகமாய்த் தோன்றுவாய் முருகா (அடியார்களை ஆட்கொள்ளும் உறுதியுடன், மகிழ்ச்சியுடன் வரும் பொழுது, யானை மேல் ஆரோகணித்து வருகிறான் முருகன் எனச் சொல்லப் படுகிறது. அன்று வள்ளியை ஆட்கொள்ள வரும் பொழுதும், தனி யானை சகோதரனை அழைத்தவன் அல்லவா!) _

எந்தன் வஞ்சனைக் காடு சிந்தி விழ
சந்த ரண்டிசை தேவர் அரம்பையர்
கனிந்து பந்தடித் தாடல் கொண்டு வர மந்தி மேவும்
எண் கடம்பணித் தோளும் அம்பொன் முடி
சுந்தரத் திருப் பாத பங்கயமும்
எந்தன் முந்துறத் தோணி உந் தனது சிந்தை தாராய்

விளக்கம் : அப்படி அன்பர்கள் பக்திப் பரவசத்துடன் உன்னைச் சூழ்ந்து வர, ஆடல் பாடலில் வல்ல அரம்பையர்கள் சந்த ஒலியுடன் லாகவமாய் பந்தாடி வர, வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த கடம்ப மலர் மாலைகள் உன் பராக்ரம பன்னிரு தோளை அலங்கரிக்க, மாணிக்க மகுடங்கள் ஒளி சிந்த, எழிலை வாரி இறைக்கும் உன் தாமரைப் பாதங்கள் என் முன் தோன்றி என் மாயத் திரை கிழி பட, என் மனம் உன்னில் நிலைக்கும் அந்த இனிய நேரம் வந்து விடுமல்லவா கந்தா! உன் கருணைக்காக ஏங்கி நிற்கும் ஏழையை ஏற்றுக் கொள்ள வருவாய் முருகா!

அந்தரந் திகைத்தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத்தோட கெந்தருவர்
அம்புயன் சலித் தோட எண்டிசையை உண்ட மாயோன்
அஞ்சி உன் பத சேவை தந்தி டென
வந்த வெஞ்சினர் காடு எரிந்து விழ
அங்கியின் குணக் கோலை உந்தி விடு செங்கை வேலா

விளக்கம் : அன்பர்களுக்கு இன்முகம் காட்டும் நீ, அந்த அடியவர்களைத் துன்புறுத்தும் கொடியோர்களுக்கு வன் முகம் காட்டும் வீரத்தை என் சொல்வேன் ஐயா! அன்றொரு நாள், அண்டர்கள் அரண்டு ஓட, வித்யாதரர்கள் குழப்பத்துடனும் வேதனையுடனும் இடம் பெயர, கந்தர்வர்களும் கமலாஸனாம் ப்ரம்மனும் கலங்கி ஓட, எட்டுத் திக்கும் பரவி நிற்கும் அகிலத்தையே வாய்க்குள் காட்டிய அந்த மாயனே கூட உன்னிடம் 'காப்பாற்று" என முறையிட, விண்ணோரை, அந்த நிலைக்கு ஆளாக்கிய வஞ்சக சூரர்கள் மேல் கடுஞ்சினம் கொண்டு, நெருப்பெனப் பாயும் உன் கூர்வேல் கொண்டு அவர்களை மண்ணோடு மண்ணாக்கிய மாவீரா, வேலவா! -

சிந்துரம் பணைக் கோடு கொங்கை குற
மங்கை இன்புறத் தோள் அணைந்துருக
சிந்துரம் தனைச் சீர் மணம் புணர் நல் கந்தவேளே

விளக்கம் : யானையின் தந்தம் போன்ற அங்க லாவண்யம் கொண்ட வள்ளி மகிழ்ந்து உருக, அவள் தோள்களை அணைத்து ஆட்கொண்ட நாயகா! சுற்றம் சூழ தெய்வானையை முறைப்படி மணந்த மணவாளா!

சிந்தி முன்புரக் காடு மங்க நகை
கொண்ட செந்தழற் கோலர் அண்டர் புகழ்
செம்பொனம் பலத்தாடு அம்பலவர் தம்பி ரானே

/ _ விளக்கம் : தன் சிரிப்பெனும் நெருப்பால் திரிபுரங்களையும் எரித்த செந்தழல் வண்ணனாம் திரிபுராந்தகன், விண்ணோர் புகழும் விமலன், பொன்னம்பலத்தில் ஆடுகின்ற அரசன் என்ற பெருமைகள் கொண்ட சிவனாருக்கே குருவானவா, எம் தலைவா, குமரா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே