துன்பங் கொண்டு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song thunbam kondu(துன்பங் கொண்டு) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"துன்பங் கொண்டு " என்று தொடங்கும் திருச்செந்தில் திருத்தலப் பாடல். மாயத் திரையின் பின்னணியில் நடக்கும் நாடகங்களை எல்லாம் "மயக்கம்" என்ற சொற் பிரயோகத்தால் தெளிவு படுத்தி விடுகிறார் அருணகிரிநாதர். வேரோடிய பெண்ணாசை போன்ற ஆசைகளை மனம் எளிதில் விடுவதில்லை தான். ஆனால், இது ஒரு மயக்க நிலை தெளிந்து விடும் பொழுது நெஞ்சத்தில் ஒரு அமைதி பூக்கும். மயக்கம் தெளிவிக்கத் தான் நீலக் கடலோரம் நின்று கஞ்சமலர்ப் பாதம் காட்டுகிறான் கருணையின் வடிவமான கந்தன்.

துன்பங் கொண்டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும் பெண் சஞ்சலமென்பதில் அணுகாதே

விளக்கம் : அன்பும் பண்பும் நிரப்பித்தான் மானுடனை பூமிக்கு நீ அனுப்புகிறாய் தேவா. இடையில், எம் வெம்மையான வினையில் தீய்ந்து அவற்றை எல்லாம் மறந்து விடும் கொடுமை நடந்து விடுகிறது. அதன் உச்சமாக பெண் மயக்கம் என்னும் சஞ்சலம் பிடித்து ஆட்டுகின்ற சித்திரவதை வேண்டாம் பிரபோ! உடலும் உள்ளமும் நொந்து, ஒளி இழந்து, சிந்தையும் செயலும் கருத்துப் போய் அலையும் நிலையிலிருந்து மீட்பாய்.

இன்பம் தந்து உம்பர் தொழும் பத
கஞ்சம் தந்து தஞ்சமெனும்படி
யென்றென்றும் தொண்டு செயும் படிஅருள்வாயே

விளக்கம் : விண்ணோர் யாவரும் பணியும்உன் தாமரைப் பாதங்களை ஏழைக்குக் காட்டக் கூடாதா முருகா ! அந்தக் கழலின் நிழலில் அடைக்கலம் தருவாய். மாறாத இன்பம் தருவாய். அந்தப் பெரும் பேறு கைநழுவி விடாமல் உனக்கும், உன் அடியாருக்கும் பணி செய்வதே என் வாழ்க்கை ஆகி விடவேண்டும். அருள் புரிவாய் ஆதி முதல்வா!

நின் பங்கொன்றும் குற மின்
சரணம் கண்டுத் தஞ்சமெனும்படி
நின்று அன்பின் தன் படி கும்பிடு மிளையோனே

விளக்கம் : ஒரு ஜீவன் உன்னையே நினைத்து உருகினால், நீ மனம் கசிந்து இரங்கி அந்த ஜீவனைத் தேடி வந்து விடுகிறாய். ஒரு பேதைப் பெண்ணுக்காக தினைப் புனம் எங்கும் அலைந்து திரிந்தாயே ! அன்பர்களின் அன்பு உனக்கு மிக முக்கியம் எனக் கிள்ளை மொழியாளிடம் இன்மொழி பேசினாய்- உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் - என்று கேட்டுப் பணியும் எளிமையே! கருணையே!

பைம்பொன் சிந்தின் துறை தங்கிய
குன்றெங்கும் சங்கு வலம்புரி
பம்பும் தென் செந்திலில் வந்தருள்பெருமாளே

விளக்கம் : சிந்து பாடும் தென்செந்தில் சிந்துவின் கரை வந்து நின்று, கரைகாணா உன் கருணையைப் பொழிகின்றாய். வலம்புரிச் சங்கங்கள் மிக விளைந்து குன்றாய் உயர்ந்து நிற்கும் கரைமீது ஏறித் திரியும் வளம் கொழிக்கும் செந்தூரின் வேலா சரணம் சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே