ககனமும் அனிலமும் — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune.

You may read the detailed explanation of the song gaganamum anilamum in English by clicking the underled hypelink.

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே சரணம். " ககனமும் அனிலமும் " என்று தொடங்கும் பாடலில் வளமான வள்ளிமலையை சுகமான தமிழால் வர்ணித்து விழி முன்னே காட்டுகிறார் அருணகிரி நாதர்.

வகுளமும் முகுளித வழைகளும்
மலிபுன வள்ளிக் குலாத்தி கிரி

அதாவது, பூத்துக் குலுங்கி மகிழ்ச்சி தரும் மகிழ மரங்களும், அரும்பு கட்டிச் சரம் சரமாய்த் தொங்கும் சுர புன்னை மரங்களும், பயிர் முற்றிச் செழித்த தினைப் புனங்களும், அடர்ந்து படர்ந்த வள்ளிக் கொடிகளும் நிறைந்த வள்ளி மலை என்ற அழகான வர்ணனை. வள்ளி மணவாளனை வரவேற்க இயற்கை எடுத்த எழிற் கோலமோ அது?

வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

அதாவது, அத்தனை எழில் கொஞ்சும் வள்ளிமலையின் வனப்பை எல்லாம் விஞ்சும் குறவஞ்சிக் கொடியாள், Uச்சை வண்ண இச்சா சக்தியாம் வள்ளிக்கு மிகப் பொருத்தமான மணவாளனாக அமைந்த பெருமானே - எனத் துதிக்கிறார். இகபர சுகம் தரும் வள்ளி, பக்தர்களைக் காத்து நிற்கும் கந்தன் - இந்த சக்தி சங்கமம் ஜகத்தோருக்கு வாய்த்த வரம், என்பதை "வள்ளிக்கு வாய்த்த பெருமாளே" என வணங்கிச் சொல்கிறார். உடல் எல்லைகளைத் தாண்டி மன வெளியில் சிறகடிக்கும் அருணகிரிநாதரை இந்தப் பாடலில் பார்க்கிறோம்

ககனமும் அனிலமும் அனல் புனல் நிலம் அமை
கள்ளப் புலால் கிருமி வீடு

அதாவது, பஞ்ச பூதங்களால் ஆன ப்ரபஞ்சம் போலவே, வானம் , காற்று. அக்னி, நீர், மண் என்ற Uஞ்ச பூதங்களால் ஆன உடம்பு .ஆன்மாவை விலக்கி விட்டுப் பார்த்தால் இதற்கு முக்கியத்துவம் இல்லை. புலால் நாற்றமும், கிருமிகளும் இருக்கும் ஒரு கூடு.

கனல் எழ மொழி தரு சினமென மதம் மிகு
கள் வைத்த தோற்பை சுமவாதே

அதாவது, காம க்ரோத மத மாச்சரியங்கள் நிறைந்ததாய், மாயையால் ஏற்பட்ட மயக்கம் என்ற கள் நிறைந்த இந்த வெற்றுத் தோற்பையாம் பாரம் சுமந்து எத்தனை பிறவிகள் எடுப்பேன் ஐயா - எனத் தவிக்கிறார். அடுத்து, அவர் முருகனிடம் வைக்கும் வேண்டுதல் உன்னதமானது. முருகன் என்ற பெயரில் உலவும் பரதத்துவம் பற்றி உடல் சிலிர்க்கச் சொல்கிறார்.

யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள்
உள்ளக்கண் நோக்கும் அறிவூறி
ஒளி திகழ் அரு உரு எனும் அருமறை இறுதியில்
உள்ள(த்)தை நோக்க அருள்வாயே

அதாவது. யுகங்கள் முடிந்து விடும் ப்ரளய காலத்தில் கூட அழிவில்லாமல் நிலைத்து நிற்கும் சத்திய தத்துவமே, உருவமற்ற ஞானப் பிழம்பாய், எந்த உருவமும் எடுக்கும் சர்வ வல்லமையாய், வேதங்களின் ஆதியாய், அந்தமாய், சாரமாய், விளங்கும் மெய்ப் பொருளான உன்னை, அகக் கண்ணாம் ஞானக் கண் கொணடு தரிசிக்கும் சிவஞானம் தருவாய், சரவணபவா! என வேண்டி நிற்கும் ஆனந்த நிலை.

ம்ருகமத பரிமள விகசித நளின நள்
வெள்ளைப் பிராட்டி இறை காணா
விட தர குடில சடிலமிசை வெகு முக
வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே

அதாவது, பரிமள சுகந்தம் வீசும் வெண்தாமரையில் அமர்ந்திருக்கும் கலைமகளின் நாயகன் பிரமன் காணமுடியாமல் ஜோதியாய் வளர்ந்து நின்றவரும், ஆலகால விஷம் உண்டவரும், ஜடாமுடியில் பலலிதமான ப்ரவாகம் எடுக்கும் கங்கை அணிந்தவருமான, பஞ்சாட்சரப் பொருளாம் மகாதேவனின் மைந்தா! சரவணபவா! சரணம்! என ஏற்றிப் போற்றுகிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே