அனித்தமான : JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song aniththamaana (அனித்தமான) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"அனித்தமான ஊனாளும்" என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். ஞானிகளின் யோக நிலைகள் என்பது வேறு; அஞ்ஞானிகளாம் சாதாரண மனிதர்களின் யோகப் பயிற்சிகள் என்பது வேறு. உடல் தான் நிரந்தரம்; அதைப் பேணுவது என்பது தான் வாழ்வின் நோக்கம் என்பது போன்ற யோகப் பயிற்சிகளை அருணகிரிநாதர் சாடுகிறார். சிவயோக நிலை நின்று, மெய்ப்பொருளாம் முருகனை உணரும் சிவஞானம் நாடுகிறார். அந்த ஞானம் அருளுமாறு முருகனை வேண்டிப் பாடுகிறார். எந்த நிலையில் இருக்கிறோம், எந்த நிலைக்கு உயர வேண்டும் எனத் தெளிவாகக் காட்டும் பாடல். முருகன் புகழ் அமுதமாய்ப் பொங்கி வரும் பாடல்.

அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி
அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து"

விளக்கம்: அழியக் கூடிய இந்த உடல் நிரந்தரம் என எண்ணிக் கொண்டு அதைப் பேணி காப்பதற்காகத்தான் யோகப் பயிற்சிகள் எனத் தவறாகப் புரிந்து கொண்டு மூச்சை அடக்கி, காற்றின் பாதைக்குத் தடை விதித்து,

அவத்திலே குவால் மூலி புசித்து

விளக்கம்: உடலை என்றென்றும் இளமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதேதோ மூலிகைகளை எல்லாம் உணவாக உண்டு கொண்டு,

வாடும் ஆயாச அசட்டு யோகியாகாமல்

விளக்கம்: எதிர்பார்த்த அளவுக்கு உடல் ஒத்துழைக்காவிட்டால் மன வாட்டம் கொண்டு, எதிர்மறையாக உடலும் உள்ளமும் தளர்ந்து போகும் அளவுக்கு அசட்டுத்தனமாக யோகப் பயிற்சிகள் என்ற பெயரில், நீ குடியிருக்கும் கோயிலாம் இந்த உடலை நான் வீணாக்கி விடாமல் காப்பாய் முருகா

மல மாயை செனித்த காரிய உபாதி ஒழித்து
ஞான ஆசார சிரத்தையாகி

விளக்கம்: மாயையால் சூழப்பட்டு, காமக் குரோதாதிகளாம் மன அழுக்குகளால் மூடப்பட்டு, தொடரும் கர்ம வினைகளால் வேதனைப்பட்டு, நான் துடிக்கும் இந்த நிலையை மாற்றி விடு முருகா. ஞானத்தின் ஒளி தரும் பாதையில் நான் நடந்து, ஆசார அனுஷ்டானங்களில் வழுவாமல் நிலைக்க அருள்வாய்.

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோ தீத
சிவச் சொ௹ப மாயோகி என ஆள்வாய்

விளக்கம்: அந்த ஞானப்ரகாசத்தில், 'நான்' என்று நினைத்துக் கொண்டிருக்கும் உடல் வேறு, உள்ளே கனிந்து நிற்கும் ஆன்மா வேறு, இந்த ப்ரபஞ்சம் என்பதும் அதன் திகழ்வுகளும் ஒரு தற்காலிக மாயப் படலம், என்ற தெளிவு வர வேண்டும். மாயையும், மனமும், ஐம்பொறிகளும் நடத்தும் இந்த நாடகத்தின் திரை கிழித்து, இதையெல்லாம் கடந்த சிவஞானம் என்ற மெய்ப்பொருள் ஒன்று உண்டு, அது நீ தான் என்று உணரும், மிகச் சிரத்த யோக நிலையில் என்னை நிறுத்தி, ஆட்கொள்வாய் முருகா

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத மருகோனே

விளக்கம்: உள்ளம் உருக்கும் நாதத்தைப் புல்லாங்குழலில் இசைப்பவனும், ஆநிரையை மட்டுமல்லாமல் அகிலத்தையும் வழி நடத்த ஆயர் குலத்தில் அவதரித்தவனும், ஆயிரம் நாமங்களால் துதிக்கப்படுபவனுமான, திருமாலின் அளவு கடந்த அன்பிலே திளைக்கும் மருகோனே முருகா!

சொர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல் வீர வயலூரா

தேவர் உலகம் என்னும் சிறந்த கப்பல் குரோதத்தால் கொந்தளிக்கும் கடல் போன்ற அசுர குலத்தால் அழித்து படாமல் கரை சேர்த்த காவலன் அல்லவா நீ! ஈரேழு பதினான்கு உலகங்களாம் அண்ட சராசரத்துக்கும் அதிபதி அல்லலா நீ! அன்றலர்ந்த கடம்ப மாலை சூடி உள்ளம் கவர் அழகா! வீர விளையாட்டு நிகழ்த்தும் வேலவா! அன்று எனை வயலூரில் ஆட்கொண்ட வள்ளலே!

செனித்தராதி கோணாடு தழைக்க மேவு காவேரி
மக ப்ரவாக பானியம் அலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோகம் ஆன்வாரும்
மதித்த சாமியே தேவர் பெருமாளே

விளக்கம்: காவேரிப் பெண்ணாள் ப்ரவாகமாய்ப் பொங்கி வந்து வளப் படுத்தும் சோழ நாட்டின் கரையில், சோலைகள் தழைத்துச் சிறந்த திருவானைக்கா திருத்தலத்தில் மனித குலம் தழைக்கவென்று கோயில் கொண்டிருக்கும் தேவாதி தேவா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே