முன்னுரை
திருவானைக்காவின் திருப்புதல்வா சரணம். "ஓலமறைகள் " என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி என்ற இணையற்ற தாய் தந்தையரின் அருமைப் புதல்வனாய் திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் முருகன், ஐந்து சன்னிதிகளில் வள்ளி தெய்வானை சமேதராகவும, ஒரு சன்னிதியில் பால தண்டாயுதபாணியாகவும், இன்னொரு புறம் ஒரு சிற்ப அற்புதமாகவும், ஒரே கோவிலில் ஏழு விதமாகத் தரிசனம் தருவது பக்தர்கள் செய்த தவமல்லவா! வெள்ளை யானை வழிபட்ட தலம். வெண் நாவல் மரத்தடியில் ஈஸ்வரனின் திருக்கோலம் என்ற சிறப்புக்கள் கொண்ட இந்தப் புனிதத் தலத்தில் அருணகிரியார் கண்டது தயாபரனின் தண் தேனாம் கருணை ததும்பும் அவன் தாமரைப் பாதங்கள் தானோ! அந்தச் சிலிர்ப்பிலே பிறந்தது இந்தப் பாடலோ! உவமைகளுக்கு அப்பாறபட்டதாய், அந்தக் கழல்கள் இருப்பதாலே கவித்துவத்தை மட்டும் கைக்கொளாமல் தத்துவார்த்தமாக கந்தன் கழலின் அருமைகளைப் பெருமைகளைக் காட்டுகிறார் அருணகிரிநாதர். வேதநாதம் அது; ஞானப் பெருவெளி அது; துரியாதீதம் அது; ப்ரபஞ்சமாய் விரிந்து பரந்து இருப்பது; பரிபூரணம் அது; மோட்சமே அதுதான் என அடுக்கடுக்காய் கந்தனின் கழலிணைகள் பற்றிச் சொல்லும் அரிய பாடல்.
ஓலமறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்
விளக்கம்:
வேதங்கள் "எங்கே? எங்கே??" என்று கதறிக் கதறித் தேடுவது எல்லாம் நின் மென் மலர்ப்பாதங்களைத் தானே! அந்தக் கழலின் ஓசை ப்ரணவ நாதமே. சிரசின் உச்சியில் ப்ரம்மாந்தரத்துக்கு அப்பால் ஒளியாய்ப் பரவி நிற்கும் பரவெளியாம் பரஞ்ஜோதி உன் திருப்பாதங்கள் தானே!
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும்
ஓத அரிய துரியங் கடந்தது
விளக்கம்:
கோவில்களில் தொண்டு செய்து உன் காட்சி வேண்டும் சரியையாளர், பலவிதமான பூஜைகள் ஆயிரமாயிரம் செய்து உன் தரிசனம் வேண்டுகின்ற கிரியையாளர், யோக சாதனைகளின் உச்சத்தில் உன் உன்னத தரிசனம் காணத் துடிப்போர் என வெவ்வேறு மார்க்கஙகளில் உன்னைத் தேடுவோருக்கு எட்டாத துரியாதீதம் உன் கழல்கள் தானே!
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம்
விளக்கம்:ஞானச் சுடராய், உருவமில்லாத தத்துவமாய், மோகன வடிவம் கொண்ட உருவமாய், ப்ரபஞ்சம் எனும் படைப்பின் அற்புதமாய், அண்டத்தில் பரந்து விரிந்த நீயே தான் பிண்டமாம் உடலாய், அதன் உள்ளாடும் உயிரில், உணர்வில் கலந்து இருக்கிறாய் என்ற சிவஞானம் தருவது உன் திருப்பாதங்கள் தானே, முருகா!
சால உடைய தவர் கன்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலம் இலது
விளக்கம்:
அத்தகைய சிவஞானம் பெற்று விட்ட தவ சரேஷ்டர்கள் கண்ணும் கருத்தும் நிறையுமாறு காட்சி தருபவை அல்லவா உன் கழலிணைகள்! விண்டு விரியாத, துண்டு விழாத பரிபூரணத்தின் சாரம் அல்லவா உன் தாமரைப் பாதங்கள். அடைக்கலம் தருவதற்கு ஜாதி மதம் பார்ப்பதில்லை உன் பொற்பாதங்கள்.
தூய பக்தி இருந்து விட்டால், சரணாகதி செய்து விட்டால் அடைக்கலம் தந்து விடும் எளிமை அல்லவா அது!
அன்றி அன்பர் சொனவியோமம்
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த
மெய் வீடு பரமசுக சிந்து
விளக்கம்:
ஞான வெளியில் பரந்து திரியும் முனி புங்கவர்கள், இன்பக் கடலாடி நிற்கும் வீடுபேறு எனபதும், உன் கமல பாதம் என்பதும் வெவ்வேறு இல்லையே முருகா!
இந்த்ரிய தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ
விளக்கம்:
அப்படிப்பட்ட பேரானந்த நிலையை அடைய விரும்பாமல் மோகம், தாகம், சபலம் என்று தகிக்கும் ஆசைகளில் நான் உழல்வதோ முருகா! அந்த ஆசைகள் அறவே அற்றுப் போய் நான் உன் கழல் அடையும் பேறு பெறுவேனோ ஐயா!
வாலகுமர குக கந்த குன்றெறி
வேல மயில என வந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்திரன் வெந்துயர் களைவோனே
விளக்கம்:
வானோர வேந்தன் அன்று"பால குமரா, குகா, கந்தா, குன்று துளைத்த வேலவா, மயில் வாகனா" என்ற தித்திக்கும் நாமங்களால் உன்னைத் துதித்துத் தம் இன்னல் தீர்க்க வேண்டுமென வேண்டிய பொழுது,
புயலெனப் புறப்பட்டு அசுரர்களை முடித்து விண்ணோர் வெந்துயர் துடைத்த வீரத்தின் விளை நிலமே வேலாயுதா!
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ வயலூரா
விளக்கம்: மணம் வீசும் சந்தனக் கலவை அணிந்து எழில் வீசும் சண்முகா! ஒளி வீசும் வீரக் கடகம் அணிந்து ஆண் சிங்கமாய்ச் சிலிர்த்து வரும் சுந்தரா! போர்க்களத்தில் மாற்றாரைப் பந்தாடி வெற்றி வாகைகள் குவிக்கும் தீரா! பக்தரைக் காக்க நினைக்கும் பொழுது இரக்கத்தின் இருப்பிடமாய் மாறிவிடும் வள்ளலே, வயலூரா!
ஞான முதல்வி இமயம் பயந்த மின்
நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை திரிபுராயி
விளக்கம்: இந்தத் தவப்புதல்வனை பெற்றெடுத்து எமக் களித்த உன் அன்னையின் திருநாமங்களைச் சொல்லச் சொல்ல இனிக்குதையா முருகா. அகிலம் தோன்ற ஆதி காரணமானவள்; மலையான் மகளாய் வந்துதித்த மின் கொடி; வானத்துக்கும் கடலுக்கும் வண்ணம் தந்தது போன்ற எழிலாள் நீலி, பொன்னாய் மின்னுகின்ற கௌரி, வலிமையின் ஊற்றுக்கண்ணாய், அதன் ப்ரவாகமாய் வருகின்ற பராசக்தி;
மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாய் இருந்து யோக நிலைகளுக்கு ஏற்றிச் செல்பவள், அன்பர் நெஞ்சங்களில் அருளாய் கனிந்து இனிப்பவள்; அவள் மூவுலகுக்கும் தாயான எங்கள் அம்பிகை.
நாத வடிவிஅகிலம் பரந்தவள்
ஆலின் உதரமுள பைங்கரும்பு
வெண் நாவல் அரசு மனைவஞ்சி தந்தருள் பெருமாளே
விளக்கம்: வேதத்தின் ப்ரணவ நாதமாய் எங்கும் பரவி நின்று அகிலம் புரக்கும் அகிலாண்டேஸ்வரி,
திருவானைக்காவின் தேவி,ஆலிலை போன்று அடங்கிய உதரத்தாள்; தன் கருணையால் பைங் கரும்பாய் இனித்துப் பரவசம் தருபவள்; திருவானைக்காவில் வெண் நாவல் மரத்தடியில வீற்றிருக்கும் ராஜாதி ராஜனாம் ஜம்புநாதனின் தேவி அவள்— இத்தகைய மகிமைகள் கொண்ட உமையாளின் செல்வக் குமரா சரணம்.
Comments
Post a Comment