சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song cheechi muppura (சீசி முப்புர) in English, click the underlined hyperlink.

முன்னுரை

காமக் கோட்டத்தின் கந்தா! அத்திவரதரின் அழகிய மருகா! சரணம். "சீசி முப்புரக் காடு நீறெழ" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். பக்தர்களுக்காக ஒளிமயமான மலர்ப்பாதை விரித்து வைத்திருக்கிறான் முருகன். அதில் நடந்தால் ஆணவம், கன்மம், மாயை என்ற மாசுகள் எரிந்து போகும். பஞ்ச கோசங்கள் தாண்டிய ஆன்ம ஸ்வரூபம் காட்சி தந்துவிடும். சூரிய ஞானப் பெருவெளியில் சஞ்சாரம் செய்யும் பேறு கிட்டும். முக்தி வாசல் திறக்கும். அநுபூதியாம் பேரானந்த அனுபவம் மலர்ந்து விடும். இவையெல்லாம் புரியாமலே வாழ்வின் பெரும் பகுதி வீணாகி விட்டதே, வேலா! பந்த பாசங்கள் அகற்றி, உன் மேல் மாறாத நேசத்தை நெஞ்சிலே நிறுத்தி வைப்பாய் – என அருணகிரிநாதர் வேண்டுகின்ற பாடல். மனித நெஞ்சத்தை நன்னிலமாக்கி, அதில் பக்தியை விதைக்க அவர் பாடுபடுவது தான் ஒவ்வொரு பாடலுமே. பாடலின் இரண்டாம் பகுதியில் அவனுடைய புகழ் என்னும் தேனை அருந்தச் செய்து விடுவதாலே சொல்லொணா மன நிறைவு.

சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முக்தியிற் கூடவே களித்து அநுபூதி சேர

விளக்கம்: திரிபுரத்தின் தீய சக்திகள் மலைபோல் எழுந்து மதம் பிடித்துத் திரிந்தது போல், மனதை அடைத்துக் கொண்டிருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற அழுக்குகள். சீ சீ என்று வெறுத்து ஒதுக்க வேண்டிய அந்தக் குப்பைகளை முழுவதும் எரித்துச் சாம்பலாக்கும் வல்லமை கொண்ட முருகா! உணவால், உடலால் ஆன அன்னமய கோசம்; பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகிய பஞ்ச வாயுக்களும், வாய், கைகள், கால்கள், எருவாய், கருவாய் ஆகிய ஐந்து கர்மேந்த்ரியங்களும் சேர்ந்த பிராணமய கோசம்; மனமாகிய மனோமய கோசம்; ஞானத்துடனும், புத்தியுடனும் கூடிய விஞ்ஞானமய கோசம் – இவற்றிலெல்லாம் சுகிக்கும் ஒரு போலியான ஆனந்தமய கோசம் என்ற ஐந்து விதமான கனத்த உறைகளும், அஞ்ஞான இருளைப் போர்த்திக் கொண்டு உறங்கும் மனது, உள்ளிருக்கும் ஜோதிமயமான ஆன்ம ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கும் அவலம். அந்த உறைகளை எல்லாம் கிழித்தெறிந்து, ஆன்மாவின் சத்திய தரிசனம் காட்டும் வல்லமை கொண்ட வடிவேலா! உடற் கூட்டுக்குள் திணறும் ஆன்மாவுக்கு விடுதலை தந்து அநுபூதியாம் ஆனந்தம் அளிப்பாய்.

அற்புதக் கோலமாமென
சூரியப் புவிக்கேறி ஆடுகச்
சீலம் வைத்து அருள் ஏறியே இருக்கறியாமல்

விளக்கம்: அற்புதக் காட்சியாம் சூரிய ஞானப்பெருவெளி விழி முன்னே விரிய, யோக சாதனையால் அதுவரை ஏறிச் சென்று சஞ்சாரம் செய்து, ஆனந்தமாய் நடனமாடும் உயர்நிலையை உன் அருள் கொடுத்து விடும் என்பதை அறியாமல், ஒழுக்கமற்ற இருள் பாதையில் உழன்று கொண்டிருந்து விட்டேனே ஐயா!

பாசம் விட்டுவிட்டோடிப் போனதுப்
போதும் இப்படிக் காகிலேனினிப்
பாழ்வழிக் கடைக்காமலே பிடிதது அடியேனைப்

விளக்கம்: ஓரளவுக்கு உன்னருள் புரிய ஆரம்பித்த பின்னரும் கூட பாச பந்தங்கள் விடுவது போல் விட்டுத் திரும்பவும் பிடித்துப் பிடித்து அலைக்கழிக்கும் நிலை. இந்தச் சித்ரவதை போதும் முருகையா! இந்தப் பாழடைந்த பாதையிலிருந்து என்னை விலக்கித் தடுத்தாட்கொள்வாய்.

பார் அடைக்கலக் கோலமாமெனத்
தாபரித்து நித்தார மீதெனப்
பாத பத்ம நற்போதையே தரித்தருள்வாயே

விளக்கம்: இது தான் என் புகலிடம் என்று உணர்ந்து உருக உன் அருட் கோலத்தைக் காட்டி விடு. நான் ஆறுதல் அடையும் வகையில், உன் சத்திய தத்துவம் எனும் ஆபரணத்தை எனக்கு உன் உபதேசம் மூலமாக அணிவித்து விடு. ஏங்கும் இந்த ஏழைக்கு எழில் கொஞ்சும் உன் பாதத் தாமரைப் போது என்ற போதம் அளித்து விடு.

தேசில் துட்ட நிட்டூர கோதுடைச்
சூரை வெட்டி எட்டாசை ஏழ்புவித்
தேவர் முத்தர்கட் கேதமே தவிர்த்தருள்வாயே

விளக்கம்: ஆணவத்தால் அண்டர் உலகை ஆட்டிப்படைத்து, அஞ்ஞானத்தால் உன்னுடனும் மோதத் துணிந்த கொடிய சூரனை வெட்டிக் களைந்து, எண்திசையும், ஏழு உலகமும், தேவரும் மகிழ, ஜீவன் முக்தரும் உருக துன்பம் துடைத்து விட்ட தூயோனே, அருளாளா!

சீர் படைத்தழற் சூல மான் மழுப்
பாணி வித்துருப் பாதனோர் புறச்
சீர் திகழ்ப் புகழ்ப் பாவை யீனப் பொற் குருநாதா

விளக்கம்: மான், மழு, சூலம் ஏந்திப் பக்தர்களின் இதயமேடைகளில் ஆனந்த நடமிடும் சிவந்த பாதத்தினரான சிவபெருமானின் இடம் கொண்ட எழிற் பாவையாம் பார்வதியின் புதல்வா, பொன்னே, மணியே என் குருநாதா

காசி முத்தமிழ்க் கூடல் ஏழுமலைக்
கோவல் அத்தியிற் கான நான் மறைக்
காடு பொற்கிரிக் காழி ஆரூர் பொற் புலி வேளூர்
காள அத்திப் பால் சிராமலை
நேசமுற்றுப் பூசை மேவி நற்
காம கச்சியில் சாலமேவு பெருமாளே

விளக்கம்: விஸ்வத்தின் அதிபதி கோயில் கொண்டிருக்கும் காசி, முத்தமிழ் வளர்த்த மதுரை, ஏழுமலையென ஏற்றம் பெற்ற திருவேங்கடம், அழகிய திருக்கோவலூர், அம்பிகையின் ஆனைக்கா, வேத கோஷம் முழங்கும் வேதாரண்யம், கருணைமலையாம் கநக மலை, சீர்மிகுந்த சீர்காழி, ஐயனின் திருவாரூர், அவன் ஆடும் சிதம்பரம், அருமருந்தான வைத்தீஸ்வரன் கோவில், வடதிசை காளஹஸ்தி , தென்திசை திருச்சிராப்பள்ளி என்று எங்கெங்கும் கோயில் கொண்டிருக்கும் குமரா. இதயக்கோயில் ஏறிவிட்ட தலைவா! காலங்கள் கடந்து நிற்கும் சத்தியமே, நீ முக்காலப் பூஜை ஏற்பதெல்லாம் ஏழைகள் எங்களுக்காக அல்லவா! காமக் கோட்டமான காஞ்சிபுரத்தில் விருப்பமுடன் வீற்றிருக்கும் வேலவா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே