முட்டுப் பட்டு — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song muttup pattu (முட்டுப் பட்டு) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"முட்டுப் பட்டுக் கதிதோறும் " என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். ஞானவெளியில் சிறகடிக்கத் துடிக்கும் ஆன்மாவின் தாகமாய், ராகமாய் ஒலிக்கும் பாடல். பட்டுத் துடித்த பின் விட்டு விடுதலையாக நினைக்கும் பக்தியின் உச்சம். முருகனை உணர்ந்து கொண்டு விட்ட உன்னத நேரத்தில் உதிக்கின்ற வரிகள். இழுத்துச் செல்லும் பிறவிச் சுழலிலிருந்து விடுபடக் கதறும் அபயக்குரல். காஞசியாயிருந்தாலும், கைலாசமாகவே இருந்தாலும், அவனை எட்டிவிடாதோ பக்தனின் குரல்! இதயத் தாமரைக்குள் எழுந்தருளிவிட மாட்டோனோ எம் பெருமான்!

முட்டுப் பட்டுக் கதி தோறும்

விளக்கம் எத்தனை பிறவிகள் எடுத்து இளைத்து விட்டேன் ஐயா! புல், பூண்டிலிருந்து தொடங்கி, புனித உணர்வு ஏதும் இல்லாத விலங்குகளாக, புன்மையான அரக்கர்களாக, ஏதேதோ வகை மனிதர்களாக, ஏதோ புண்ணியம் செய்து சில காலம் தேவர்களாக, புண்ணியம் தீர்ந்த பின், மீண்டும் மனிதர்களாக, கர்மவினைகளில் சிக்கிக் கதியற்று தவிப்பதோ கந்தா!

முற்றச் சுற்றிப் பல நாளும்

விளக்கம் : முடிவே இல்லாத சுழற்சியோ இது என்று அயர்ந்து விட்டேன் ஐயா! பற்றுக்கோடு நீ தான், பற்றிக் கொண்டு விட வேண்டும் என்ற உணர்வு உள்ளே மின்னலடித்தாலும், நீ எனக்கு இன்னும் அகப்படவில்லையே முருகா!

தட்டுப் பட்டுச் சுழல்வேனை
சற்றுப் பற்றக் கருதாதோ

விளக்கம்: முட்டி மோதிக் கொண்டு அந்தச் சுழலிலிருந்து விடுபட நான் தத்தளிப்பதை நீ பார்த்திருப்பாயோ ஐயா! உன் இரக்கத்திற்கு இது அழகோ! என் முயற்சிகள் எதுவாக இருந்தாலும், நீ மனது வைத்தால் தான் அணுவும் அசையும் என்பதை புரிந்து கொண்டேன் .அந்தக் கருணா கடாட்சத்தைத் என்மேல் திருப்பலாகாதா! உன் அபய கரம் என்னை மீட்கலாகாதா!

வட்டப் புட்பத் தல மீதே
வைக்கத் தக்கத் திருபாதா

விளக்கம்: தூய பக்தியால் நிரப்பப்பட்டு, உனக்காகத் தாமரை போல் விரியும் பக்தனின் இதயத்தில் விருப்புடன் உன் திருப்பாதங்களை எடுத்து வைக்கும் நேயா!

கட்டத்தற்றத் தருள்வோனே
கச்சி சொக்கப் பெருமாளே

விளக்கம்:அடியார்கள், கஷ்டப்படுவதைக் காணப் பொறுக்காது துயர் தீர்க்க ஓடி வரும் கந்தா! சொக்க வைக்கும் எழிலுடன் காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் குமரா!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே