உனைத் தினம் : J R விளக்கவுரை
To read the meaning of the song unai thinam (உனைத் தினம்) in English, click the underlined hyperlink.
முன்னுரை
"உனைத் தினம்" என்று தொடங்கும் திருப்பரங்குன்றம் திருத்தலப் பாடல். மீண்டும், மீண்டும் அருணகிரிநாதர் மனித மனத்தில் பதிக்க நினைப்பது என்ன? எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்கிறோம் என்ற துல்லியமாக எடை போட்டு ,நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல். அவர் வாழ்க்கையையே படம் பிடித்துப் பாடம் நடத்தும் பாடல்கள். இந்தப் பாடலிலும் கடந்த காலக் கரடு முரடான வாழ்வைச் சொல்கிறார். பக்திப் பாதையில் நடந்ததில்லை. சக்தி பாலனை நெஞ்சில் வைத்து துதித்ததில்லை. சத்சங்கம் எதிலும் சேர்ந்ததில்லை. இடிபாடுகளுக்கிடையில், தரு ஒன்று துளிர்த்தது போல், முருக பக்தி உதிக்கிறது. ஆனால் அதற்குள் மரண பயம் எதிர்கொள்கிறது. முருகனை முழுவதுமாகச் சரண் அடைகிறார்.
விளக்கம்
முருகா! ஒருநாள் கூட உன்னை மனதால் நினைத்தறியா பாவி நாள். உன் திருக்கோயில்களுக்கு வந்து உன்னைத் தொழுததில்லை. நாமணக்க மணக்க உன்னைத் துதித்ததில்லை. கை மணக்க மணக்க வாசமலர் எடுத்து உனக்கு அர்ச்சித்ததில்லை. தவம், ஜபம் என்ற புனித வழிகள் தெரிந்ததில்லை. உன்னைத் தேடித் தேடித் தவித்து, உன் அருளுக்குப் பாத்திரமான அன்பர்களின் இருப்பிடம் கூட அறிந்ததில்லை. நீ கொலுவிருக்கும் குன்றங்களுக்கு வந்து, கிரிப் ப்ரதட்சிணம் செய்ததில்லை. உன் மகிமையைப் பாட வேண்டும் என்ற விருப்பம் கூட முகிழ்த்ததில்லை.
வீணே கழித்த வாழ்நாளின் விளிம்பு காட்டும் அதலபாதாளம் அச்சுறுத்துகிறது. கரிய, பெரிய எருமை ஏறி, சினத்துடன் சீறி வரும் எமராஜனின் தூதர்கள் வீசும் பாசக்கயிறு என்னை இறுக்கு முன் என்னைக் காக்க வந்து விடு கந்தா! கலக்கமும், குழப்பமுமாய் மனம் நொந்து, நொந்து, பரிதவித்து நிற்கும் ஏழையின் அச்சமெல்லாம் தவிடுபொடியாக, மயில் ஏறி வந்து விடு, என் சொந்தமே, சுகமே.
தீய சக்திகள் என்பதும், தீய குணங்கள் உனக்கும் உன் வேலுக்கும் தூசு அல்லவா! அன்றொரு நாள், போர்க்களத்தில் உன் சினத் தீயால் அசுரர் குலம் எரித்து, அவர்கள் நிணமெல்லாம் சிதற அடித்த தீராதி தீரா!
உன் திண்புயத்தில் தினைப்புன மயிலை அணைத்து, இணைத்துக் கொண்ட அன்புருவான வள்ளி நாயகா! உன் அன்புக்காக ஏங்கி நிற்போரைக் கண் பாராய்!
வேதமோதும் தேவர்கள் தினந்தோறும் அபிஷேக, ஆராதனை செய்ய, முனிவு என்பதே அறியாத பக்குவ ஆசார முனிபுங்கவர்கள் உன்னைத் தொழுது நிற்க, உவகையுடன் அவர்கள் துதிகளை ஏற்றுக் கொள்ளும் தூயவா!
தெனத் தெனந்தன என்ற சந்தத்தில் இசை அமைத்தது போல் ரீங்காரம் செய்யும் வரி வண்டுகள் திகட்டத் திகட்டத் தேன் குடிக்கும், மலர்ச்சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றத்தின தேவாதி தேவா சரணம்
Comments
Post a Comment