Thiruppugazh Isai Vazhipadu with lyrics, meaning in English and Tamil, and teaching audios of Guruji Shri A.S. Raghavan
Search
மயில் விருத்தங்கள் : J R விளக்கவுரை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
By Janaki Ramanan, Pune
Click on the panel link to expand it and click once again to collapse.
வேல் விருத்தம், மயில் விருத்தம் படைப்புக்குக் கவசமாக வேண்டும் என்று வேலனையும், விக்ன விநாயகனையும் துதிக்கும் பாடல். மணமிக்க சந்தனம் பூசப்பட்டு, பரவசம் தரும் மங்கல குங்குமப் பூச்சால் அலங்கரிக்கப்பட்டு. எழிலான சண்பக மாலைகள் சூட்டப்பட்டு, வீரக் கடகம் அணிந்து மின்னும் திண்தோள்களுடன், வண்ணமயில் ஏறி வருகின்ற இளங் குமரா, ஆறுமுகா சரவணபவா!!
குரா மலர் மாலைகள் சூடி கருமேகம் போன்ற அளகபாரத்துடன் எழில் சிந்தி நிற்பவளும், நாரதரமிருந்து ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்றவளும், இச்சா சக்தி ஸ்வரூபணியும், திருமால் திருமகளாய் உதித்து, வேடர் குலத்தில் வளர்ந்தவளும் ஆன முருக பக்தையாம் வள்ளியின் மணவாளா! கிரியா சக்தியாம் தெய்வானையின் நாயகா,
கந்தனெனும் கருணைக் கடலே, உன் தண்மலர்ப் பாதங்கள் சரணம். கவசமாய் காப்பாய்.
எழிலாய் உயர்ந்து நிற்கும் க்ரிடம் போன்ற மத்தகத்துடன், அழகாக அசையும், துதிக்கையுடன் சாமரம் போல் வீசி வரும் செவிகளும் கொண்டு, பரந்த கன்னத்தில் மதநீர் பெருக வரும் கணபதியே! எம் தந்தையே! பெருவயிற்றில் அகிலம் அடக்கி வைத்திருப்பவனே! கஜ முகாசுரனை வென்று, அவனை மூஞ்சூறு வாகனம் ஆக்கிக் கொண்ட பெருந்தகையே! மூலாதாரத்தில் நிலைக்கும் எங்கள் ஆதாரமே! சிவந்த தாமரையாய் மின்னும் சிந்துர வண்ணா! சிவனார் புதல்வா! எங்கள் விக்னங்களை எல்லாம் வேரறுக்கும் விநாயகா! சரணம்!
சகோதரர்களாய் வந்து அதிலம் புரக்கும் ஆனந்தமான இணை தெய்வங்களே! எங்கள் முயற்சிகள், வெற்றி பெற, எங்கள் படைப்புகள் தரம் பெற, உரம் தந்து வரம் தந்து காக்க வேண்டும்.
எந்தச் செயலையும், எந்தப் படைப்பையும், தொடங்கு முன் கணபதியைத் தொழ வேண்டும் என்ற நியதிக்கு மூவரும், தேவரும் கூட விதிவிலக்கல்ல என்பதாலே காப்புச் செய்யுளுக்கும், வேல் விருத்தத்திற்கும், மயில் விருத்தத்திற்கும் கணேசனையே காவல் தெய்வமாக்கிப் பாடுகிறார் அருணகிரிநாதர். விநாயகனைச் சரணடைந்து செயல் துவங்க மக்களைத் தூண்டுகிறார். அடுத்து, எம்பெருமான் முருகன் மகிமைகள் சொல்கிறார். மூஷிக வாகனனும், மயில் வாகனனும் ஞானப் பிழம்பாய் ஜ்வலிப்பவர்கள் என உணர்த்துகிறார். அவனுக்கு வாகனமாக அமையும் பேறுபெற்ற மயிலின் வண்ணத்தை, வனப்பை, சொல்கிறார்.
விளக்கம் : தேவர்கள், அருமையான தேவலோக மலர்கள் எடுத்து விநாயகனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். பூமியில் மானுடர், ஜாதி, சம்பக, மல்லிகை முதலிய பூக்களால் கணபதிக்கு அர்ச்சனை செய்வது போல், தேவர்கள் சந்தான புஷ்பம், மந்தாரம், கற்பகம், பாரிஜாதம் போன்ற மலர்கள் சொரிந்து அர்ச்சனை செய்கிறார்கள். கற்பக விருட்சமாய் கேட்டதெல்லாம் வழங்கும் பாத கமலங்களுக்குப் பொருத்தமான அர்ச்சனை. அந்த மலர்களின் இதமான மணம் தங்கிய, சரணங்கள். வேத நாதம் ஒலிக்கும் சதங்கைகள். சந்திரனின் அமுதம் போல், கருணை பொழியும் பாதங்கள்.
பிறைசூடிய பாலச்சந்திரனாய் காட்சி தருகிறார். மகா கணபதியாய் இருந்தும் வாகனம் மூஷிகம். குண்டலினி சக்தி எழும்பும் பொழுது எழுப்பும் ஒலி வடிவம அந்த மூஷிகம் என்கிறார்கள் ஞானிகள். சத்தியனான விநாயகன் சத்ய நெறிகளிலிருந்து சிறிதும் பிறழாமல் வழிகாட்டுகிறார்.
அன்னை தந்தையருக்கு அபிஷேகம் செய்யவென்று அழகிய கலசத்தில் புனித நீர் ஏந்தி வருகிறார். சிவனைப் போலவே முக்கண். மத நீர் வழியும் கன்னம் நம் மதமெல்லாம் அடக்கும். ஞானக்கனி பெறுவதற்குச் சகோதரர்கள் போட்டி போடுகிறார்களாம். அண்டம் சுற்றி முதலில் யார் வருகிறார் என்று பார்க்க வேண்டும். சிவ பார்வதியைச் சுற்றி வந்து விடுகிறார் விநாயகர். அதே நொடியில் மயில் ஏறி அகிலம் முழுதும் சுற்றி வந்து விடுகிறான் அறுமுகவன். ஏகமான பரம்பொருள், அன்னை தந்தையருக்குள் அடக்கம் என இவர் உணர்த்த, சர்வ வியாபகமும், அந்த பிரம்மம் தான் என இளையவன் உணர்த்தி விடுகிறான். இந்த ஞானத்தை ஊட்டி விடுவதில் இருவருக்குமே வெற்றி. அப்படி வேகமாய் நொடியில் உலகைச் சுற்றி வந்து பிரமிக்க வைக்கிறது வேலவன் மயில்.
இந்த ஞானமயமானவன் லோக ஷேமத்துக்காக, ஆறு அக்னிப் பொறிகளாக உதித்து, மந்தாகினியாம் கங்கையால் தாங்கப்பட்டு, சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டு, ஆறு தாமரைப் புஷ்பங்களில் ஆறு குழந்தைகளாக தவழ்ந்து, ஆறு கிருத்திகைப் பெண்களை மகிழ்விக்கும் வகையில் வளர்கிறான். இவன்தான் பின்னால், இந்திரனையும், தேவர்களையும் துன்பச் சிறையிலிருந்து மீட்டு, இந்திராணியின் மாங்கல்யம் காத்து, அசுரர்களை அடியோடு அழித்து விநோத வீரச் செயல் புரிந்த சக்திவேலன். அவன் ஏறிவரும் வண்ணமயிலே! அவன் போர்க்களம் புகும் பொழுது சண்டமாருதமாய், அவன் சாந்தமாய் இருக்கும் பொழுது, அவனை இணைபிரியாமல் இருக்கும் எழில் மயிலே! உன் நீல மயமான கழுத்தைப் பாலமுருகனாய் அவன் அன்புடன் கட்டிக் கொள்கிறான். ஒளி வீசும் தோகை நீ விரிக்க, அவன் உன் மீது ஏறிப் பவனி வருகிறான். அவன் ஏறும் ஏறு மயிலே, சரணம் சரணம்!!
முன்னுரை :
வண்ண மயிலுடனே பிறந்து விட்டானோ என்னும் வண்ணம், மின்னும் மயிலுடன் பின்னிப் பிணைந்து விட்டானோ பால முருகன்!
அன்று கணபதியுடன் போட்டியிட்ட திருவிளையாடலில், மயில் ஏறி ஒரு நொடியில் அகிலம் சுற்றி வரவில்லையா!
அழகனுக்கு ஓர் அழகு மயில். ப்ரணவப் பொருளோனுடன் இணைந்த ப்ரணவ வடிவாம் "ஓம்" என்பது போல் கலாபம் விரிக்கும் மந்திர மயில். அழகாகத்தான் அடி எடுத்து வைக்கிறது. ஆனால் அகிலம் அதிரச் செய்யும் வலிமை. அது குமரனின் சக்தி.
விளக்கம் :
இசைப்ரியனுடன் இணைந்து, அசைந்து, அசைந்து தான் வருகிறது, அந்த மரகதக் கலாப மயில். ஆனாலும் பூவுலகுடன், மூவுலகும் அஞ்சி விடுகிறது. உலகத்தைச் சூழ்ந்திருக்கும் சக்கரவாள கிரி, அது வந்து முட்டி விடுமோ எனப் பயந்து வீழ்ந்து விடுகிறது. சூரனின் கிரவுஞ்ச மலை, அயில் தொடவும், மயில் பார்க்கவும் பொடிந்து போகிறது.
தங்கமயமாய்த் தகதகக்கும் சிகரங்களுடன் நிமிர்ந்து நிற்கும் மேருமலையும், தங்களுக்குக் காவல் என்று ஆணவச் சூரன் பெருமை கொண்ட ஏழு குலகிரிகளும், எழில் கொஞ்சும் பூவுலகமும், எட்டுத் திக்கின் பர்வதங்களும், சேர்ந்து குலுங்கச் செய்து விடும் விந்தைதான் என்ன மயிலே! ஓவியத்தின் அழகு பூக்கும் ஒய்யாரத்துடன் நீ உன் எழிலான பாதம் பதித்து நடந்து வரும் பொழுதே இத்தனை விளைவுகளா!
ஆதி சேஷனின் ஆயிரம் முடிகளும், திண்டாடி அசைகின்றன. போர் புரியத் துணிந்து வந்து விட்ட சூரன் படை திடுக்கிட்டுத் திகைத்துப் பதற, நீ போர்க்களத்தில் புகுந்து வருகின்றாய்.
நீ யாருடைய மயில் என்று இன்னுமா அவர்களுக்குப் புரியவில்லை!
இடப்பாகம் கொண்டுவிட்ட எழில் மங்கையாம், பச்சைக்கிளியாம் பார்வதியாள் கங்கை கொண்டவன் மேல் சின்னக் கோபம் கொண்டாளோ! அதனால் ஜகத் ரட்சகன், ஜகதாம்பிகையின் பாதம் பணிந்தானோ! அதனால் அவள் தாமரைப் பாதங்களில் சிவனார் ஜடா முடியின் சுகந்தமோ, என வியக்கிறார் அருணகிரியார்.
அவனோ யோகீஸ்வரன், ஜகதீஸ்வரன், வேதங்களால் போற்றப்படுபவன், அந்த மகாதேவனுக்கே ப்ரணவ உபதேசம் செய்வதற்கு, உதித்து வந்த ஞானச்சுடராம் முருகனின் மயில் அல்லவா நீ! சரவணத்தில் அறுவராய்த் தவழ்ந்து, ஒருருவாகிய ஸ்கந்த ஸ்வாமியின் மயிலே!
செங்கழுநீர் மலர்கள் செழிக்கும் திருத்தணி மலையே ஆனந்தத்தில் உருக, மரகதத் தோகை விரித்து, மயக்கும் எழிலுடன் வருகின்ற மயிலே சரணம், சரணம்.
விளக்கம் : முருகன் நடத்துகின்ற மயிலின் அருமை பெருமைகளைச் சொல்லி சொல்லி வியக்கிறார் அருணகிரியார்.
நாமும் பிரமித்துத் தான் போகிறோம். அது மந்திர மயில் அல்லவா! அது நடந்து வரும்பொழுது அண்ட பகிரண்டமும் ஆடித்தான் போகிறது.
தன் ஆட்டத்தால், நடராஜரையும், சிவகாமியையும் மயக்கி விடுகிறது. வள்ளி மயிலாளின் நாயகன் ஏறிவரும் ஏறு மயிலின் அளவிட முடியா வனப்பை, வண்ணத்தைச் சொல்லி முடியுமோ! அருணகிரிநாதர் சொல்லோவியத்தை ரசிக்கத் தான் முடியும்.
ஆதார பாதாளம் பெயர அடி பெயர
மூதண்ட முகடது பெயரவே
விளக்கம் : அடி எடுத்து வைத்து,,கொள்ளை எழில் கொஞ்ச நடந்து வருகிறது குமரனின் மயில். பூவுலகிற்கு ஆதாரமாய் இருக்கும் பாதாள உலகம், அசைந்து விடுகிறது; ஆதாரமான தனக்கே ஆதாரம் இல்லா நிலையோ என அஞ்சுகிறது. கீழே ஆதாரம் அப்படி என்றால், அண்ட சராசரத்தின் மேற்கூரை அசைந்து, வீழ்ந்து விடுமோ எனக் கலங்குகிறது.
விளக்கம் : பூமியைத் தாங்கும் ஆதிசேடனின் ஆயிரம் தலைகளும் அசைந்து பதைக்கின்றன. எட்டுத் திக்குகளும் இடம் பெயர்வது போல் நடுக்கத்துடன் அசைகின்றன. மத நீர் வழிய நின்று, எண் திசைகளைக் காத்து நிற்கும், ஐராவதம், வாமனம், புண்டரீகம் போன்ற அஷ்ட திக் கஜங்கள் கலங்கி இடம் பெயர்ந்து விடுகின்றன.
வேதாள தாளங்களுக்கிசைய ஆடுவார் மிக்க ப்ரியப்பட
விடா விழிபவுரி கவுரி கண்டுள மகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்.
விளக்கம் : அப்படி அண்ட சராசரத்தை ஆட்டிப் படைக்கும் மயில் ஆட்டம் என்று வந்து விட்டால், காட்டுகின்ற நடன வகைகளைச் சொல்லவா, ஆடற்கலையின் நுணுக்கத்தை, முழு அழகைச் சொல்லவா! ஆடல் அரசனாம் தில்லைக் கூத்தனே, வியந்து பார்த்து களிக்கும்படி ஆடுகிறது அறுமுகவன் மயில். ஆடல் அரசியாம் கெளரியும், வைத்த விழி எடுக்காமல் அதன் ஆட்டத்தை ரசிக்கிறாள்.
மாதாநு பங்கியது மாலது சகோதரி
மகீரதி கிராத குலி
மாமறை முனி குமாரி சாரங்க நம் தனி வந்த
வள்ளி
விளக்கம் : அது வள்ளி நாயகனின் மயில் அல்லவா! அந்த வள்ளி எப்பேர்ப்பட்டவள்! மாதாநுபங்கியாய் அறத்துப் பால் பொருட்பால், காமத்துப் பால் எனும் திருக்குறள் எழுதி மனிதகுலத்தின் தாய் போல் வழிகாட்டிய மாமனிதராம் திருவள்ளுவராய் அவதரித்த பிரம்மாவின் சகோதரி அல்லவா அவள்! ஆம், துர்வாசரின் சாபத்தால் சிவமுனிவராய் வந்த திருமாலுக்கும், மானாய்ப் பிறந்த திருமகளுக்கும், பிறந்த மான் மகளாம் வான் மகள் அல்லவா அவள்! திருமால் பார்வையால் திருமகளாம் மானின் கர்ப்பத்தில் உதித்து, வள்ளிக் கிழங்குகள் எடுத்த பள்ளத்தில் குழந்தையாய் வந்து தவழ்ந்த தனித்துவம் கொண்டவள். மலையில், வேடர் குலத்தில் வளர்ந்தவள். நமக்கு அருள் செய்ய வந்த தேவி.
மணி நூபுர பாதாரவிந்த சேகர நேய
மலரும் உற்பவ கிரி அமர்ந்த பெருமாள்
விளக்கம் : அவள் முருக பக்தை. குழநதையாயிருந்த பொழுதே, தன் அன்பின் ஆழத்தால், செய்த பூஜனைகளால் அவன் உள்ளம் கவர்ந்து விட்டவள். பேதையைத் தேடி வந்தான் பெருமான். ஜீவாத்மாவாம் வள்ளி காலால் இட்ட பணியைத் தலையால் செய்து விடும் அளவுக்கு இறங்கி வரும் பரமாத்மா! கருணை மழை பொழிய வென்றே, நீலோத்பல மலர்கள் செழிக்கும் திருத்தணி மலையில் வந்து இறங்கியிருப்பவன். அவன் தன் வாகனமாய் ஆக்கிக் கொண்ட அரிய மயிலே!
படை நிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே!
விளக்கம் : முருகன் நடத்தி வருவதாலே, அபரிமிதமான சக்தியுடன், போர்க்களம் புகுந்து, சண்டமாருதம் போல் அங்குமிங்கும் சாடி, சாரி சாரியாய் வந்த அசுரர் படையை நிர்மூலமாக்கிச் சிதற வைத்த மயிலே! பச்சைப் பசுந்தோகை எனும் வாகை விரித்து வரும் வேகப் புயலே சரணம்.
முன்னுரை : "யுககோடி முடிவின்" என்று தொடங்கும் மயில் விருத்தம். காலக் கணக்குகளைத் துல்லியமாக வைத்துக்கொண்டு படைப்புத் தொழில் நடத்தும் பிரம்மனே ஒரு கணம் திகைக்கின்றான். அதற்குள் யுகங்களின் இறுதியே வந்து விட்டதா! அதுவும் தான் அறியாமலா! ப்ரளய காலத்தின் சண்டமாருதமாக, பெருங்காற்று வீசி வருகிறேதே! ப்ரபஞ்சம் தடுமாறிக் கரைவது போல் தவிக்கும் காரணம் என்ன! 'வேலனின் மயில் சிறகை வீசிப் பறப்பதன் விளைவா இது!' என்று அருணகிரியார் பிரமிக்கும் பாடல். மயிலின் மிகுந்த வலிமையை உணர்த்தத் தானோ, வலிமையான சொற் பிரயோகம்!
யுககோடி முடிவின் மண்டிய சண்டமாருதம்
உதித்த என்று அயன் அஞ்சவே
விளக்கம் : தனக்குத் தெரியாமலே சதுர் யுகங்கள் முடிகின்றனவா! ப்ரயளமே வந்து விட்டதா! அந்த ப்ரளயத்துக்கு முன்னோட்டமாக வீசி வரும் சண்டமாருதம் போல், ப்ரபஞ்சத்தை ஆட்டும் பெருங்காற்று வீசி வருகிறதே! இது என்ன வீபரீதம் என்று பிரம்மன் பயந்து போய் பார்க்கின்றான்.
ஒரு கோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்
வெகு கோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பில் பறக்க
விளக்கம் : கோடி கோடியான அண்டங்கள் இடித்துக் கொள்வது என்பது இல்லாமல் தத்தம் இடத்தில் பொருந்தி இருக்கும் நிலைமாறிப் போய், அவை பெயர்ந்து, பொடிப் பொடியாக, தங்கச் சிகரங்களுடன் தகதகக்கும் கோடிக்கணக்கான மலைகள் சரிந்து, தூள் தூளாகி விண்வெளியில் பறக்கச் செய்யும் புயல் வீசி வருகிறதே! பாதாள லோகமே எழும்பிப் பறந்து பொடியாகும் விந்தையும் நடக்கிறதே!
விரி நீர் வேலை சுவறச்சுரர் நடுக்கங் கொளச் சிறகை
வீசிப் பறக்கும் மயிலாம்
விளக்கம் : எங்கெங்கு காணினும் நீராய்ப் பரந்து விரிந்திருக்கும் சமுத்திரங்களின் அத்தனை நீரையும் வற்றச் செய்து விடும் அளவுக்கு வீசி வரும் வலிமை கொண்ட காற்று எப்படி உண்டானது! தேவர்களே நடு நடுங்கிறார்களே! ஒரு வனப்பான மயில் சிறகை வீசிப் பறந்து வரும் பொழுதா இப்படிப்பட்ட எண்ணிப் பார்க்க முடியாத விளைவுகள்! ஆம், அது சாதாரண மயிலா! சரவணனின் மயில் அல்லவா! பரம் பொருள் ஏறி வரும் அந்த மயிலின் ஆற்றல் அல்லவா அண்ட சராசரத்தைக் கிடுகிடுக்க வைக்கும் அணுவின் சக்தியாய் சிதறி வருகிறது!
விளக்கம் : தன் அபரிமித சக்தியைத் தன் மயிலுக்கும் ஊட்டி விட்டானே அந்த அறுமுகவன்! அவன் நடத்தும் வாகனமாக அது இருக்க வேண்டுமல்லவா! அவன் எப்பேர்ப்பட்ட ஆற்றலுள்ள திருமாலின் மருகன்! ஆயுதங்கள் எதுவும் எடுக்காமலே, கோடி நகங்களால், அசுரர்களைக் கிழித்துப் போட்ட நரசிங்க மூர்த்தியின் மருமகன் அல்லவா! பாற்கடலில் பள்ளிகொண்ட, அந்தத் திருமகள் தலைவன், முரன், கேசி என்ற அரக்கர்களைப் பாடாய்ப் படுத்தவில்லையா! தேவகியின் பரமானந்தமாய் அவதாரம் செய்து, பலப் பல அசுரர்களை பந்தாடவில்லையா!
இகத்திலும் சுகம் தந்து, மோட்ச வாசலும் திறக்கவில்லையா! அத்தகைய திருமாலே மெச்சுகின்ற அருட்கடலே ஆறுமுகா!
முக கோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரி வாழ்
முருகன் உமை குமரன் அறுமுகன் தடவு விகடதட
மூரிக் கலாப மயிலே
விளக்கம்: ஒரு கோடிக் கிளை நதிகளாய்ப் பரவி அகிலம் புரக்கின்ற கங்கை நல்லாளின் புனிதக் கரங்களால் ஏந்தப்பட்டு, சரவணத்தில் தவழ்ந்த அறுமுகா, பக்த கோடிகளைக் காக்கவென்று, முகிலெட்டி எழில் கொஞ்சி, நீலோத்பல மலர்கள் கொழிக்கும் திருத்தணி மலையில் கோயில் கொண்ட கொற்றவா! முருகா! உமா சுதனே! ஷண்முகா சரணம். அவன் நடத்தி வரும், அழகு மயிலே! வண்ணத்தை, வலிமையை வாரி இறைத்து வரும் இணையிலா ஏறு மயிலே! சரணம்!!
முன்னுரை : வனப்பாய் ஆடி வந்து, பக்தர்க்கு உதவ ஓடி வந்து, பகைவரைச் சாடி வந்து,
வெற்றி வாகை சூடி வந்து, வேலனுக்கு, இணைபிரியா வாகனமாய், அவன் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுப்பதல்லவா அவனுடைய மந்திர மயல்! அவன் ஆணைப்படியே இன்னொரு அரிய செயலையும் செய்கிறது. தன் பிரம்மாண்டமான தோகையால், அண்டங்களையே மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லி, மானுடர் மனஅமைதிக்கும். நம்பிக்கைக்கும் விதை விதைக்கிறார் அருணகிரிநாதர்.
வேலும், மயிலும் துணை என்பதன் பொருளை அல்லவா விளக்கி விடுகிறார்!
விளக்கம் : ஜோதிமயமான சுந்தரக் கந்தனின் அன்னை அன்று இமவானின் மகளாய், ஒளிவடிவாய், பார்வதி தேவியாய் வந்து உதித்தவள்.
தோழியர் புடைசூழ்ந்து அரண் அமைக்கப் பாதுகாப்பாய் வளர்ந்தவள். களங்கமில்லா மதி வதனியாய் எழில் சிந்துபவள். தவமிருந்து பரமேஸ்வரனை அடைந்து, அவன் இடப் பாகம் கொண்டு, த்ரிசூலம் ஏந்தி, எலும்பு மாலைகள் அணிந்து, அவன் தொழிலில் எல்லாம் துணை நிற்பவள். அவள் படைத்ததல்லவா பிரமிக்க வைக்கும் இந்த ப்ரபஞ்சம்.
ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவும் கொடுஞ்சிறகினால்
அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்கும் கலாப மயிலாம்
விளக்கம் ; அந்த ப்ரபஞ்சம் என்பது அண்டங்கள் எல்லாம் ஒழுங்கு முறையாய், கணக்கான தொலைவுகளில் சுற்றுப் பாதைகளில், சுற்றி வரும் அற்புத இயக்கம். மேற் கூரையாய் அமைந்த பிரம்மாண்டப் பெருவெளி.
இந்த அண்ட பகிரண்ட அமைப்பையே, தன் தேரகையால் மூடிக் கண்ணும் கருத்துமாய்க் காக்கும் அளவுக்கு
விஸ்வரூபம் எடுத்து விடுகிறது, வேலனின் ஏறு மயில்.
பெண்மயிலின் முட்டைகளைத் தம் சிறகினால் மூடிப் பாதுகாப்பாய் அடைகாக்கும் பக்குவத்தை இந்த மந்திர மயிலிடம் இருந்துதான் ஆண்மயில்கள்
கற்றுக் கொண்டனவோ!
விளக்கம் :
நீதிநெறியாம் தர்ம வழியை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லும் மறைகள் போற்றுகின்ற,
எட்டு வசுக்கள், பதினொரு ருத்ரர், பன்னிரண்டு ஆதித்யர், இரண்டு அசுவனி தேவர் ஆகிய முப்பத்தி மூன்று தேவர்களும், அவர் ஆணைக்கு அடங்கிய கோடிக்கணக்கான உபதேவர்களும், பாடிப் பரவிக் கொண்டிருக்க, நீலமலர்கள் பூத்து நிறைந்த தணிகைமலையில் கோயில் கொண்டிருக்கும் வேலவனின் மயில் அல்லவா அது!
எல்லோருக்கும் ஆதாரமாய் இருக்கும் அவன் பற்றுக்கோடு எதுவும் தேவைப்படாத பரம்பொருள்.
அச்சம் என்பதே அறியாத
தீரன். தீயோருக்கு அச்சுறுத்தலாய் வருபவன். கவலையே இல்லாதவன். மற்றவர்களின் மனக்கவலை தீர்ப்பவன்.
சங்கு வாள் மா திகிரி கோதண்ட தண்டந் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரி திரு
மருகன் முருகன் குமரன் வர முதவு வாகை மயிலே
விளக்கம் : இவன் மாமனோ காக்கும் கடவுளாம் திருமால். பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கு, நந்தனம் என்னும் வாள், சுதர்சன சக்கரம், சாரங்கம் என்னும் வில், கௌமேதகம் என்ற கதை என்ற ஆயுதம் தரித்தவன், அன்று முரன், மதுகைடபர் என்ற அசுர சக்திகளை அழித்தவன் — அந்த அகிலம் காக்கும் திருமாலுக்கும், சௌபாக்கியம் தரும் திருமகளுக்கும் மருகனாம் முருகன், அறுமுகனாய் காட்சி தந்து அண்ட பகிரண்டங்கள் காக்கின்றான். அவன் வாகனமாய் வந்து அன்பர்களுக்கு வர மழை பொழிகின்ற, கருணையின் வடிவமே, வண்ண மயிலே, சரணம் சரணம்.
முன்னுரை : முருகப் பெருமானின் அழகான மயில் தோகை விரிக்கிறது. அந்த விஸ்வரூபத்தில் விஸ்வமே விதிர்விதிர்க்கிறது.
சூரிய சந்திரர் அச்சத்தால் ஒளிந்து கொண்டு விடுகின்றனர். 'அன்னையும் அத்தனும் ஊழி நடனம் செய்யும் காலமே வந்து விட்டதா? ஏன் இந்த பெரும் இருட்டு?' என்று பார்த்தால் வானப் பெருவெளியின் கூரையும், அண்டத்தின் கூரையும் மறையும்படி குமரனின் மயில் பச்சைப் பசுந் தோகை விரித்திருப்பதல்லவா காரணம், என்று சித்திர விசித்திர மயிலைப் பயபக்தி மிஞ்சத் துதிக்கிறார் அருணகிரியார். அந்த தெய்வானை மணாளன். அதன்மேல் ஆரோகணித்து வரும் அழகைக் கண்டபின் அச்சம் மறைந்து ஆனந்தம் பொங்குகிறது.
சங்கார காலமென அரி பிரமர் வெருவுற
சகல லோகமும் நடுங்க
விளக்கம் : முத்தேவர் வகுத்திருப்பது துல்லியமான காலக் கணக்கு. மகா ப்ரளயத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது என மூவரும் நினைத்திருக்க, அந்தகாரம் கவிந்து வந்தவுடன் அரியும் பிரம்மனும் பயத்துடன் பார்க்கின்றனர். ஏழேழு புவனமும் ஏறுகின்ற அச்சத்துடன் நடுநடுங்குகின்றன.
சந்திர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப் பட
விளக்கம் : யுகக் கணக்கே தப்புமானால், பருவங்கள் என்ன, பட்சங்கள் என்ன, நாளும் கோளும் என்ன, என்று கலங்கித் தங்களை மறைத்துக் கொண்டு விடுகின்றனர் சூரிய சந்திரர். தேவராஜனும், தேவர்களும் ஒன்றும் புரியாமல், அலைபாய்கின்றனர்
உமையுடன் கங்காளர் தனி நாடகம் செய்த போது
அந்தகாரம் பிறந்திட
விளக்கம் : ப்ரபஞ்சம் முழுவதையும் தன்னுளே இழுத்துக் கொண்டு, எலும்பு மாலைகள் அணிந்து கொண்டு, சிவன் சக்தியுடன் ஆடும் ஊழிக்கால நடனம் தானோ! அதனால் தான் இந்த அடர்ந்த அந்தகாரமோ!
விளக்கம் : இது ஊழிக் காலம் இல்லை என்றால், பிரம்மாண்டத்தின், அண்டங்களின் கூரையை மறைத்துக் கொண்டு இருள் மூடியதன் காரணம் தான் என்ன! புரிந்து விட்டது முருகா! உன்னை ஏற்றிக் கொண்டு வரும் உற்சாகத்தில், உன் மந்திர மயில் , தன் சுந்தரத் தோகையை விரிக்க, இந்த ப்ரபஞ்சமே மறைந்தது போல் ஒரு தோற்றமோ! எதையும் தோன்றச் செய்வதும், மறையச் செய்வதும் உனக்கு விளையாட்டோ முருகா! அதைப் புரிந்து கொண்டு களிநடம் புரிந்துகொண்டு வருகிறதோ உன் கலாப மயில்!
விளக்கம் : கோடி சூர்ய ப்ரகாசனாய் முருகன் உதித்து விட்ட பின்னே இருள் என்பது ஏது? மங்களச் சந்தன, குங்குமம் அலங்கரிக்க, இணையிலா லாவண்யத்துடன், ஐராவதம் வளர்த்த அந்த தெய்வானை தன் மணவாளனுடன் வரும் பொழுது, அது மோட்ச வாசலே திறக்கும் சுகமல்லவா ! அவன் மாசுகள் மறைக்க இயலாத பரிசுத்தனல்லவா! என்றென்றும் இளமையின் எழில் கொண்ட குமரன் அல்லவா!
விளக்கம் : எளியோரைக் காக்கவென்று, முக்கண்ணரின் நெற்றிக் கண் பொறியிலே உதித்தவனின் வெம்மையை உலகம் தாங்குமோ!
கங்கை வாங்கித் தாங்கிக் கொண்டாள். சரவணத்தில் அவள் தவழ விட்ட காங்கேயன், ஆறு கார்த்திகைப் பெண்டிர் இன்பமாய் வளர்த்த கார்த்திகேயன், வலிமை கொண்ட அசுர சக்திகள் அழிந்துபடக் கிரவுஞ்சம் துளைத்த அதிதீரன் சினம் தணிந்து, தணிகைமலையில் தண்மையாய் கோயில் கொண்டிருக்கும் தயாபரன் நடத்துகின்ற மயிலே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
முன்னுரை : அண்டம், பிரம்மாண்டம் என்று ப்ரபஞ்சம் ஒரு அழகான நிலையான அமைப்பு. ஒரு ஒழுங்கு முறையில் தான் கோள்களின் சுழற்சியும் இருக்கும். ஆனால், இது என்ன? 'எல்லாமே எப்படி எப்படியோ நிலை தடுமாறி சுழல்வதுபோல் உள்ளதே! பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, நிலச்சரிவு போல் பொலபொலவென்று சரிவது ஏன்!
ஆதிசேடன் ஏன் பதைக்கிறான்! ஓ, புரிந்தது. வேலனின் ஏறுமயில் ஆடி வருகிறது. முருகா, உன் திருவிளையாடலா, மயிலின் ஆட்டம்!' என்று மந்திர மயிலின் மகிமையைச் சொல்லில் வடிக்கப் பார்க்கிறார் அருணகிரியார். வாக்குக்கு ஒரு அருணகிரியால் தான் இதை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியும்.
தீரப் பயோததி (க) திக்குமா காலமும்
செகதலமும் நின்று சுழல
விளக்கம் : அது அது அதனதன் இடத்தில் அமைந்து இருக்கும் ப்ரபஞ்சத்தில், அண்டங்களும், திசைகளும், பெருவெளியும், கடல்களும், நிலைதடுமாறிச் சுழலும் விபரீதம் நடக்கிறது.
திகழ்கின்ற முடி மவுலி சிதறிவிழ
வெஞ்சிகை தீக்கொப்புளிக்க
விளக்கம் : உலகைத் தாங்கி நிற்கும் ஆதிசேடனின் சிரசெலாம் ஆடும் ஆட்டத்தில், மாணிக்கங்கள் சிதறி விழுகின்றன .
வாய்கள் வேதனையில் நெருப்பை உமிழ்கின்றன.
வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க
விளக்கம் : ஆதாரமான அநந்தனுக்கே அந்த கதி என்றால், சிறிதும், பெரிதுமாய் அத்தனை அரவங்களும் பயத்தால் பதை பதைக்கின்றன. நாகலோகமே நடுநடுங்குகிறது.
விளக்கம்: பூவுலகம் முழுவதையும் சுற்றி வளைத்துப் படர்ந்திருக்கும் சக்ரவாளகிரி என்ற அரணே பொடிப் பொடியாய்ச் சிதறுகின்ற அபாயம். இவையெல்லாம் அபாயமே இல்லை என அபயக் கரத்துடன் வருகின்றான் வேலன். பச்சையும், சிவப்புமாய் வண்ணத்தை வாரி இறைத்துக் கொண்டு வரும் அவன் ஏறுமயில் ஆடி வரும் பொழுது , அண்டமெலாம் ஆடுகின்ற ஆட்டம், நிலையாக அவன் இருக்கையில் எதற்காக நடுக்கம் எனக் கேட்காமல் கேட்டு வருகிறதோ அவன் கோல மயில்!
விளக்கம் : எப்பேர்ப்பட்டவன் மயில் ஏறி வருகின்றான்! அன்று ஞானசம்பந்தனாய் அவதரித்த கந்தனுக்கு, ஞானப்பால் ஊட்டினாள் அன்னை. அதனால் ஜகத்தில் மெய் ஞானம் பூத்தது. தமிழிலும் விளையாடினான் முருகன். பக்தி பெருகியது.
விளக்கம் : சிவபெருமானின் கண்டமெனும் நீலமேகத்தைப் பார்த்துக் களி கொண்டு, பரமானந்த சுகத்தில் இணையற்ற எழிலுடன் ஆடும் அபிராமியைக் கண்டுதான் இந்த ஏறுமயிலும் ஆடக் கற்றுக் கொண்டதோ! "ஓம்" என்று பதில் சொல்கிறதோ, ப்ரணவப் பொருளானின் தனி மயில்!
விளக்கம் : மௌனகுருவான அந்த த்ரிசூல பாணியாம் முக்கண்ணர், அந்த ஜடா முடிச் சிவனார் தந்த அருமைச் செல்வன், தணிகையில் கோயில் கொண்டு நம் தாபங்கள் தணிக்கும், தயாபரன் ஏறிவரும் அற்புத மயில் அல்லவா அது !
கொடிய நிசிசரர் எரி புகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே
(பச்சைப் பிரவாள மயிலாம் வையாளி வரு பச்சைப் பிரவாள மயிலாம்)
விளக்கம் : அன்று கொடிய அசுரர் உள்ளத்தில் நெருப்பாய் புகுந்த வெம்மையாய்த் தகித்து அமரர் தம் லோகம் திரும்பத் செய்த தண்மையாய்த் தணிந்த கருணை வேள் நடத்தி வரும் வண்ணமயிலே!
முன்னுரை : பக்தர்களுக்கு உடனே ஒரு நம்பிக்கைப் பாதையைக் காட்டி விடத்தான் விரைந்து மயிலேறி வருகிறான் கந்தன். அந்த மயிலின வேகத்தை, உக்ரத்தை அண்ட சராசரம் தாங்குவதில்லை. பரம்பொருளை ஏற்றி வரும் மயில் என்பது சாமான்யப்பட்டதா !
ஆனால் அதே மயில் திருத்தணியில் உலவும் பொழுது என்ன வனப்பாய், நம் இதய சிம்மாசனத்தில் நர்த்தனமிட்டு ஆடுகிறது ! எப்படித் தன் பழவினையையெல்லாம் பன்னிரு கையோன் ஓட்டி விட்டான், இன்ப துன்ப பேதம் பார்க்காமல் இருக்கும் அமைதியை ஆனந்தத்தை நிரப்பி விட்டான் என எண்ணி எண்ணி, அந்த மயில் போலவே, அருணகிரியார் உள்ளமும் ஆட, நம்முள்ளேயும் அந்த இனிய உணர்வை பரப்பி விடுகிறார் பைந்தமிழ்க் கவிஞர்
செக்கரள கேச ரத்னபுரி ராசி நிரை
சிந்தப் புராரி அமிர்தம்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீ விஷம் கொப்புளிப்பச்
விளக்கம் : செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் பொக்கிஷத்திலிருந்து ஒளியை வாரி இறைக்கும் வைர, வைடூரிய ரத்தினங்கள் சிதறுகின்றனவோ! இல்லை, இல்லை, இது வரிசை கட்டி நிறகும் வாசுகியின் ஆயிரம் படங்களிலிருந்து சிதறுகின்ற ரத்தினங்களின் ஒளி அல்லவா! அன்று, தேவாசுரர்கள் அமிர்தம் கடையும் பொழுது, பகதர்களைக் காக்கவென்று பரமன் எடுத்து உண்ட ஆலகால விஷத்தை அல்லவா வாசுகியின் படங்கள் அனல் பெருமூச்சுப் போல் கக்குகின்றன!
சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயன
தறுகண் வாசுகி பணா முடி எடுத்து உதறுமொரு
சண்ட ப்ரசண்ட மயிலாம்
விளக்கம் : தீயசக்திகளை ஒடுக்க வரும் பொழுதெல்லாம், முருகனின் ஏறு மயிலின் வேகத்தில் எப்பொழுதும் சண்டமாருதத்தின் வலிமை உண்டு. ப்ரபஞ்சம் இதற்கு தப்பிவிடுவதில்லை. சக்ரவாள கிரிசூழ்ந்த ப்ரதேசங்கள், அதிரகின்றன. ப்ரயள காலம் வந்துவிட்டது போல் அதன் கோர நயனங்கள் தீ உமிழ, வாசுகியின் ஆயிரம் படங்கள் அனைத்தும் தாண்டவம் ஆடுகின்றன. அந்தப் படங்களை எடுத்து உதறுகின்ற உக்ரத்துடன் முருகன் மயில் வாசுகியை நெருங்குகிறது. இத்தனை காலம் விஷம் கக்காமல் சேர்த்த ரத்தினங்கள் அனைத்தும் வாசுகியின் படங்களிலிருந்து சிதறுகின்றன. இவையெல்லாம் உன் திருவிளையாடலோ முருகா! ப்ரபஞ்சமே உன் விளையாட்டு அரங்கம் தானோ-என அருணகிரியார் மலைக்கும் அளவுக்கு மயிலின் ஆட்டம்.
விக்ரம கிராத குலி புன மீது உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழவினைத் துயர் அறுத்தெனை
வெளிப்பட உணர்த்தி அருளி
விளக்கம் ; அந்தப் பரமாத்மன் அல்லவா, அருள் கோலம் எடுத்து அழகாய் ஏறுமயில் மீது ஏறி வருகின்றான்!
அன்று, கிழவனாய் உருவம் எடுத்து வந்து தினைப்புன வள்ளியைக் குழப்பிப் பின் தெளியவைத்து மணம் முடித்த இனிய மணவாளன் அல்லவா திருத்தணி மலையில் கோயில் கொண்டிருக்கிறான்!
தொடர்ந்து வந்த பழைய வினைகளை அறுத்து விட்டான். உள்ளொளியாய், என்னுளே பரவி "நான்" என்பதை எனக்கு உணர்த்தி விட்டான் -
இன்ப துன்பமற்ற, அலைகள் எல்லாம் அடங்கிய, பேரானந்த அமைதி நிலையை என்னுளே நிரப்பிய கந்த ஸ்வாமியின் மயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
அன்று, தேர்ப்படை, குதிரைப் படை, யானைப் படை, காலாட்படை போன்ற பெரும்படைகளை நடத்திக் கொண்டு முருகனை எதிர்க்க வந்த சூரர்களை, ஏனைமும் சினமும் பொங்க நீ பார்த்த பொழுதே அவர்கள் அழிவு காலத்தை ஆரம்பித்து வைத்து விட்டாய். உன் பராக்ரமத்தைப் பார்த்துப் பார்த்து மலைக்கின்றேன். சரணம் சரணம் மயிலே
முன்னுரை :
ஆயிரமாயிரம் வண்ண ஜாலங்கள் காட்டுகின்ற வடிவழகன் வாகனத்தின் வடிவை, வனப்பை, அருணகிரிநாதர் இன்பத் தமிழில் வர்ணிப்பது கொள்ளை இன்பம். அதில் ஏறி வரும் பேரழகனின் அழகைச் சொல்ல வார்த்தைகளுக்கு எங்கு போவது என்று அருணகிரியாரே திகைக்கும் விநோதன் அல்லவா அந்த வேலன். அடுக்குத் தாமரை மடல் விரிப்பது போல் அவர் அவனை வரணிக்கச் சொற்களை அடுக்குவது பக்தியின் தனி மணம்.
சிகர கமனிய மேரு கிரி ரசதகிரி நீலகிரியெனவும்
விளக்கம் : எத்தனை எத்தனை வண்ணங்களை வாரியிறைத்துக் கொண்டு வருகிறது அழகனின் அற்புத மயில்!
ஒரு சாயலில், தங்கச் சிகரம் தகதகக்கின்ற மேரு மலையின் அற்புத அழகு. இன்னொரு சாயலில் வெள்ளியை உருக்கி வார்த்தது போன்ற கைலாய மலையின் பிரமிக்க வைக்கும் எழில். மற்றொரு சாயலில் நீலோத்பல மலர்கள் அடர்ந்து செழிக்கும் தணிகை வேளின் திருத்தணி மலைபோல் தோகை விரித்து வரும் கலாப மயில்.
ஆயிரமுகத் தெய்வநிதி காளிந்தி யென நீழல் இட்டு வெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா நிகரெனவும்
விளக்கம் :
பூமியெங்கும் கிளை பரப்பி ,பரவாகம் எடுத்து, வளம் கொழிக்க வைக்கும் புனித கங்கை போலும்,
அதன் வேகத்.துடன் போட்டியிடும் யமுனையின் பரப்புப் போலும் அல்லவா இந்தக் கருணை மயில் தண்மையை வீசிக் கொண்டு விரைந்து வருகிறது ! அது வாரி இறைக்கும் ஒளி மழையை பூரண நிலவின் அமுதப் பொழிவென்பதா! சங்குக் கூட்டங்களின் அடர் தொகுதி என்பதா!
விளக்கம் : அபரிமித இறை ஆற்றலை உள்ளடக்கி நிமிர்ந்து நிற்கும் கோயில் சிலைகளின் இருவாச்சி போன்று — அந்த ஒளிச் சக்கரம் போன்று — தோகையை அற்புதமாய் விரித்து வீசிக் கொண்டு, உலகையே மறைத்து விடும்
முகில் கூட்டம் போல், ஆதியில் தோன்றிய அண்டங்களின் மேற்கூரையை உரசிக் கொண்டு பறக்கின்ற அற்புதத்தைச் சொல்லவா! நீலக் கோல மயிலே! பேரழகன் தந்தானோ இந்தப் பேரெழிலை!
விளக்கம் : பேரழகனின் தனி மணமாய் அவன் வருகைக்குக் கட்டியம் கூறி வருவது, தணிகை மலையானின்
கருணையின் மணம் அல்லவா! வறுமையாம் துயரில் வாடும் ஏழைகளின் இடர்கள் களைய வென்றல்லவா வேக மயில்
ஏறி வருகின்றான்!
அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களின்
அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக்குண்டலம் பல அசைய
வல்லவுணர் மனம் அசைய
விளக்கம் : ஞானவேல் கரத்தில் ஆடி வர, பன்னிரு தோள்களில் வகைவகையாய் வாச மலர் மாலைகள் புரண்ட சைய
மகர குண்டலங்கள் எழிலாய்ச் செவிகளில் அசைந்தாட வருவது பக்தர்களின் இதயங்களை அசைத்து உருக்க மட்டும் தானா! அசுரர் குழாத்தை அச்சத்தால் நடுங்க வைக்கவும் வருகின்றான்.
மால் வரை அசைய உரகபிலம் அடைய எண்டிசை அசைய
வையாளி ஏறு மயிலே
விளக்கம் : வேல் ஏந்தி அவன் வண்ணமயில் ஏறியவுடனேயே கிரவுஞ்சம் அசைந்து கொடுத்து விட்டது. பாதாள லோகமும் பதைபதைத்து விட்டது. எண்திசைகளும் கலங்குகின்றன. அந்த வீரத்துக்கு ஈடு கொடுக்க வல்லவா இப்படி அவன் நீல மயில் வேகம் எடுக்கிறது! குமரன் பவனி வரும் கோல மயிலே சரணம்.
முன்னுரை :
"நிராஜத" என்று தொடங்கும் மயில் விருத்தம். எம்பெருமான் முருகனின் உன்னதமான கல்யாண குணங்களை அர்ச்சனைப் பூக்கள் போல் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி அவன் பாதங்களை நெஞ்சில் பதிக்கும் பாடல். எப்படி தெய்விக குணங்களை நோக்கி நம் வாழ்வும் நகர வேண்டுமெனக் காட்டத்தான் மயிலேறி வந்து, குன்றேறிக் கோயில கொண்டிருக்கிறானோ குமரன்? அவன் மந்திர மயில் எடுத்து வைக்கும் அழகிய நடையும், அந்த வனப்பான வாழ்வுக்குத்தான் இலக்கணம் வகுக்குகிறதோ! பக்தியில் உருகும் அருணகிரியின் பாகு தமிழ் வளத்தில் மயங்குகிறோம். முருகன் முழுவதுமாய் ஆட்கொள்கிறான். வேலோடும், மயிலோடும் இதய மேடையில் காட்சி தருகிறான்.
நிராஜத விராஜத வரோதய பராபரன்
நிராகுல நிராமயன்
விளக்கம் : குணங்கள் அனைத்தும் கடந்த அரும்பொருளே முருகா. ஆனாலும் லோகம் முழுவதும் எந்த குணத்தைக் கை கொள்ளக் கூடாது, எந்த குணத்தை கை கொள்ள வேண்டும் என்பதில் ஒரு தெளிவைத் தருகிறான். அவற்றையே தன் உன்னத குணங்களாக காட்டுகிறான். ரஜத குணமே அற்றவன். ஏனென்றால் அந்த ரஜதகுணம் மெதுவே, மெதுவே, ஆணவத்திலும், அசுர சக்திக்கும் வழி வகுத்து விடும். தவமிருந்து தான் ஆரம்பிப்பார்கள் அசுரர்கள். வரமெல்லாம் கைக்கு வந்தவுடன் அட்டகாசங்கள் ஆரம்பிக்கும். ரஜத்துக்கு எதிரான சாத்வீக குணம் கொண்டவன் எம்பெருமான். ஏனென்றால் அந்த சாத்வீகம், தெய்வப் பண்புகளின் பக்கம் கொண்டு சேர்க்கும். வரங்களை வாரி வழங்குபவன். அந்தக் கருணைக்கு எல்லை வகுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவன் பரமேஸ்வரன். ஆகுலம் என்னும் மனக்கிலேசமும் மனக்கவலையும் அற்றவன். அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மகிழ்ச்சியாய் இருக்கச் சொல்கிறான். எந்த நோயும் அணுக முடியாப் பரிசுத்தன். அப்படித்தான் மானுடரும், நோய் நெருங்க முடியா உடலும் உள்ளமும் கொண்டிருக்க வேண்டும் என்கிறான்.
தலைவா, உன் வழிகாட்டல் புரிகிறது.
விளக்கம் : நெறியில்லாத, அறவழி நடக்காத கீழோர் இவனை அணுகும் தூரத்தில் இல்லை. அதனால் ஆனந்தமயமாய் இருக்கிறான். உலகத்தோரும், தீயதை விலக்கிக் கொண்டே வந்தால், இதயம் சமன்பட்டு இன்பம் துளிர்க்கும் என்கிறான்.
குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல்
குரா நிழல் பராவு தணிகை
விளக்கம் : செழித்து அடர்ந்து வேர்பிடித்த குரா மரங்களின் கூட்டம் இருக்கும் திருத்தலங்களில் இவன் சானித்தியம் கொண்டிருக்கிறான். இவன் இருக்கும் திருவலஞ்சுழி போன்ற பக்தி ஸ்தலங்கள் ஓர் உதாரணம். குரா மர நிழல் பரவி நின்று இதம் தரும் ஒளிமயமான தணிகை மலையை இருப்பிடம் கொண்டான்.
விளக்கம் :
அந்தத் தணிகை மலைக்கு இணையான சிறந்த குன்றுகள் தோறும் குமரன் கோயில் கொண்டிருப்பதால் அவன் மயிலுக்கு ஒரே கொண்டாட்டம். அங்கெல்லாம் அது அழகு நடை பயின்று, ஆனந்த நடனம் புரியும். இன்ப உலா. குமரனுடன் கொஞ்சி நிற்கும் மயிலே சரணம்.
புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்
விளக்கம் :
திரிபுர சம்ஹாரியின் திருப்புதல்வன் சிவகுருநாதன், நித்திய யெளவனன்-- என்று உளம் உருகும் அடியாருக்காக, இரக்கத்தால் கசிந்து, வேண்டுகின்ற வரம் அளிப்பவன். மும்மூர்த்திகளில் முரன் என்னும் அசுரனை வதைத்துக் காக்கும் கடவுளாய் பெருமை கொண்டிருக்கும் திருமால் மருகன்.
பலாசன புலோமசை சலாமிடு
வலாரி புகலாகும் அயிலாயுதன்
விளக்கம் : இனிய கனிகளைப் புசித்துப் பசியாறும் அழகிய இந்திராணி போற்றி வணங்கும் முருகன்; இந்திரன் சரணாகதி செய்த வேலாயுதக் கடவுள்;
விளக்கம் : நீண்ட மலைத்தொடர்களை வாசஸ்தலமாகக் கொண்ட வேடுவர்களின் கடவுளாய், அவர்கள் மாப்பிள்ளையும் ஆகி விட்ட அழகன், வள்ளி மணாளான். தினைப்புனத்தில் வேடன், வேலன், விருத்தன் என்ற திருவிளையாடல்கள் நிகழ்த்தியவன்.
விளக்கம் : அப்படி அன்பர்களுடனும், அடியார்களுடனும், விளையாடுபவன் தான் அன்று, க்ரௌஞ்சம் தூள் தூளாக்கியவன், சூரபன்மன் குடலைக் கோடரி போல் பிளந்தவன். பக்தர்களுக்கு பன்னிரு கையனாய், பன்னிரு விழி அழகனாய் கருணை புரிபவன். அவன் நடத்துகின்ற ஏறுமயிலே! அவன் சங்கல்பத்துக்கு ஏற்ப அருள் மயமாய், ஆனந்த மயமாய், உலவுகின்ற உன்னதமான மயிலே! சரணம் சரணம்.
முன்னுரை : வேல் விருத்தத்திற்கும், மயில் விருத்தத்திற்கும் பலஸ்துதியாக அமைந்த பாடல். முருகனின் அளப்பரிய கருணையால், அருணகிரிநாதர் இயற்றிய
வேல் விருத்தம், பத்தையும், மயில் விருத்தம் பத்தையும், பொருளுணர்ந்து, பக்தியுடன் பாடுவோருக்குக் கிடைக்காத பேறும் உண்டோ எனக் கேட்கிறார் அருணகிரிநாதர்.
திருத்தணி முருகனின் வேலும் மயிலும் அனைத்துப் பேறுகளையும் தந்துவிடும் என உறுதி கூறுகிறார். வேதம் ஓதும் பலனும், அலைமகள், கலைமகள் கடாட்சமும், பதினாறு வகையான சௌபாக்கியமும், கிடைக்கும் என்கிறார். இறுதியில் மோட்ச வாசலே திறந்து விடும் என்னும் பொழுது உள்ளங்கள் ஆனந்தக் கடலாடும் அற்புதம்.
எந்தாளும் .ஒரு சுனையில் இந்த்ர நீலப்
போது இலங்கிய திருத்தணிகை வாழ்
விளக்கம் : அன்று தேவருலகம் மீட்டுத் தந்த தேவசேனாபதிக்குக் காட்டும் நன்றியாக, திருத்தணியில் கோயில் கொண்டிருக்கும் எம்பிரானுக்குத் தினமும் சமர்ப்ப்பிக்க, இந்திர லோகத்திலிருந்து தேவராஜன் கொண்டுவந்த நீலோத்பல மலர் தினமும் ஒப்பற்ற எழிலுடன் மலர்கின்ற திருத்தணி மலை.
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்
ஒரு நம்பிரான் ஆன மயிலைப்
பன்னாளும் அடி பரவும் அருணகிரிநாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல் தரு மாசறு வேல் விருத்தம் ஒரு பத்தும்
மாசறு மயில் விருத்தம் ஒரு பத்தும் படிப்பவர்கள்
விளக்கம் : அங்கே கோயில் கொண்டிருப்பவன் முழுமுதற் கடவுளான முருகன் அல்லவா!
விண்ணோரும், மண்ணுலகத்தாரும், துதித்து நிற்கும் இணையறு தலைவன் அல்லவா !
அவன் ஏறிவரும் ஏறுமயில் அவன் அம்சமாகவே விளங்கும், தெய்வம் அல்லவா ! அவன் அருளை விள்ளாது,விரியாது, குறையாது அள்ளி வரும் வேலையும், மயிலையும், அனவரதமும் துதித்து உருகும் ஏழை பக்தனான அருணகிரநாதன், அந்தக் கநதன் கருணையால் வேல் விருத்தம் பத்தும், மயில் விருத்தம் பத்தும் சுந்தரத் தமிழில் இயற்றி அவனுக்கு சமர்ப்பிக்கும் பேறு பெற்றேன்.
அவற்றை தூய பக்தியோடு உளம் உருகிப் பாடும் அன்பர்கள் அடையப் போவது இகபர சுகம் அல்லவா !
ஆதி மறைநூல் மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
விளக்கம் : அந்தத் தூய பக்தர்களைத் தேடி பதினாறு பேறுகளாம் சௌபாக்கியங்களும் வந்து சேர்ந்து விடும். வேதனாம் பிரம்மனோ இவன் என மற்றவர் வியக்கும் வண்ணம், வேதங்களில் பாண்டித்யம் பெற்று விடுவார்கள். தான தர்மங்களில் சிறந்தவராய், வந்தோரை எல்லாம் முகமலர்ச்சியுடன் வரவேற்று குறைவில்லாமல் அன்னதானம் செய்யும், மனமும் வளமும் பெறுவர்.
கலைமகள் கடாட்சம் அபரிமிதமாய் கிடைத்து விடும்.
விளக்கம் : கடலையும் கடந்து பல நாடுகளும் சென்று பேரும் புகழும் பெறுவர். வான்வெளியில் சிறகடிக்கும் யோக சித்திகள் கூடக் கிடைத்துவிடும். பாக்யலட்சுமியின் பார்வையில் வாழ்வு சிறக்கும். ராஜயோகங்கள், போகங்கள் நாடிவரும்.
அமுதாசனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறை தொழுவர் சீர்பெறுவர், பேர்பெறுவர்
அழியா வரம் பெறுவரே
விளக்கம் : அமுதம் உண்டவர் போல் ஆயிரம் பிறை காணும் நீண்ட ஆயுளும், நோய் நொடியற்ற சீரான வாழ்வும், உலகில் நல்ல பேரும் பெற்று நிறைவாய் வாழ்வார்கள். முருகனின் வரம் பொழியும் கரங்கள் வேலோடும், மயிலோடும் என்றென்றும் துணை நிற்கும்.
மோட்ச வாசல் திறக்கும்.
You may read the Vel Vaguppu post for the meaning in English. Here's the Tamil explanation of the same. வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும். அவை: 1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு, 2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு. முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகை மற்றும் உட்பகைகளான வினைகளை வேரோடு அழிக்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார். வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லம
Comments
Post a Comment