நால்வர் வரலாறு: விகடன் பத்திரிகையிலிருந்து

திருத்தொண்டர்கள் அறுபத்து மூவரில் சைவ நால்வர் எனும் சிறப்புக்கு உரியவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர். இந்த நால்வரில், தொண்டு வழியைக் காட்டியவர்- அப்பர் ஸ்வாமிகள். குழந்தையாக இருந்து, இறைவனை அடையும் வழியைக் காட்டியவர்- சம்பந்தர். தோழனாக இருந்து, தோழமை வழியைக் காட்டியவர்- சுந்தரர். அடிமையாக இருந்து, இறைவனை அடையும் 'தாஸ’ மார்க்கத்தைக் காட்டியவர்- மாணிக்கவாசகர்.

இந்த நான்கு வழிகளில் எந்த வழியைப் பின்பற்றினாலும், அங்கே நம்மை எதிர் கொள்ள ஆண்டவன் தயாராக இருப்பான். அதை நமக்கு உணர்த்துவதே நால்வர் வரலாறு.

மாணிக்கவாசகர்

முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க மாணிக்கவாசகர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். சைவம் போற்றும் பன்னிரு திருமுறைகளில் எட்டாவதாக இடம் பெறுவது திருவாசகம். இது, 656 பாடல்கள் கொண்ட அற்புதப் பாடல் திரட்டு. வாதவூரர் அருளிய பொக்கிஷம். மதுரைக்கு அருகிலுள்ள ஊர் திருவாதவூர். இங்கு பிறந்ததால் வாதவூரர் எனும் பெயர் பெற்றார் அந்த அடியவர்.

'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்’ என்பதற்கு ஏற்ப, வாதவூரரின் தகைசால் புலமையைக் கண்டு, அவரைத் தமது அமைச்சராக்கிக் கொண்டான் அரிமர்த்தன பாண்டியன். ஒரு முறை, குதிரைகள் வாங்கி வரும்படி வாதவூரரைப் பணித்தான் மன்னன். மாணிக்கவாசகர் அரசன் அளித்த செம்பொன் சுமந்து பயணப்பட்ட வழியில், திருப்பெருந்துறையில் இருக்கும் ஆவுடையார் கோவில் அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.

'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

இவ்வாறு ஐந்தெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கிய நூல் என்ற பெருமை, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்துக்கு மட்டுமே உண்டு. இப்படி, காதலாகிக் கண்ணீர் மல்கி, கசிந்துருகி சிவத்தைப் பாடிய மாணிக்கவாசகருக்கு, வந்த வேலை மறந்துபோனது. குதிரை வாங்க வைத்திருந்த செம்பொன்னை திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார்.

வெகுநாட்கள் ஆகியும் வாதவூரர் நாடு திரும்பாததால், அவர் குறித்து விசாரித்து வரும்படி தூதர்களை ஏவினான் மன்னன். அவர்கள் மூலம், திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் கோயில் கட்டும் தகவல் கிடைத்தது. உடனே, நாடு திரும்பும்படி மாணிக்கவாசகருக்குக் கட்டளையிட்டான். குதிரைகள் இல்லாமல் எப்படித் திரும்புவது என்று கலங்கியவர் இறைவனை வேண்டிட, 'ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும்’ என்று அசரீரி ஒலித்தது. மாணிக்கவாசகரும் அதையே தூதர்கள் மூலம் மன்னவனிடம் தெரிவிக்கச் செய்தார்.

ஆனால், அவர் நாடு திரும்பிய பிறகும் குறிப்பிட்ட நாளில் குதிரைகள் வராததால், மாணிக்கவாசகரைச் சிறையிலிட்டான் மன்னன். சிறையில் வாடிய மாணிக்கவாசகர், 'இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவது இனியே’ என்று சரணாகதியடைந்தார்.

சிவனாரின் திருவிளையாடல் ஆரம்பமானது. மானுட உருவம் தாங்கி வந்து, நரிகளைப் பரிகளாக்கி (குதிரைகளாக்கி) அழைத்து வந்து, அரண்மனை குதிரை லாயத்தில் சேர்ப்பித்தார். ஆனால், அன்று இரவே குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டபடியே ஓடி மறைந்தன. மன்னவன் கடும்கோபம் கொண்டான். மாணிக்கவாசகரை வைகையின் கரையில் சுடுமணலில் நிறுத்தித் துன்புறுத்தினான். இறை பொறுக்குமா?! வைகையில் வெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைப்பெடுக்க, வந்தி எனும் மூதாட்டியின் சார்பாக இறைவன் கரை அடைக்க வந்ததும், பிட்டுக்கு மண் சுமந்ததும், பிரம்படி பட்ட கதையும் நாமறிந்ததே!

இந்தத் திருவிளையாடல்களைத் தொடர்ந்து, சிவப்பரம்பொருளின் திருவருளை உணர்ந்த மன்னன், மாணிக்க வாசகரைப் போற்றிக் கொண்டாடினான். இறைத் தொண்டில் திளைத்த மாணிக்க வாசகர், திருக்கோவையார் என்னும் நூலையும் அருளினார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் எனப் பெயர் பெற்ற சுந்தரர், பிறந்த ஊர் திருநாவலூர். பாலபருவத்தில் இவரை நரசிங்கமுனையர் என்ற மன்னர் தத்தெடுத்து வளர்த்தார். உரிய பருவத்தில் சுந்தரருக்குத் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்தன. மண நாள் அன்று, பித்தன் போன்று தோற்றம் அளித்த முதிய அந்தணர் ஒருவர் வந்தார். சுந்தரர் தனக்கு அடிமை எனவும், அதற்கு அத்தாட்சி ஆவணமாக ஓர் ஓலை நறுக்கையும் ஊர்ச் சபையிடம் சமர்ப்பித்தார். சுந்தரரோ அது பொய்யான ஆவணம் என்று கூறி, முதியவரிடம் இருந்து அதைப் பிடுங்கித் துண்டு துண்டாக்கினார்.

அதைக் கண்டு புன்னகைத்த முதியவர், 'மூல ஓலை திருவெண்ணெய் நல்லூரில் உள்ளது. என்னுடன் வந்தால் காட்டுகிறேன்’ என்றார். அதன்படி மூல ஓலை சரிபார்க்கப்பட்டு, 'சுந்தரர் முதியவருக்கு அடிமையே’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. கலக்கமும் குழப்பமும் ஒருசேர, 'நீவிர் யார்?’ என அந்தணரிடம் கேட்டார் சுந்தரர். மறுகணம், திரு வெண்ணெய்நல்லூர் சிவாலயம் சென்று மறைந்தார் அந்தணர். ஊர் திகைத்தது. வந்தது சிவம் எனப் புரிந்துகொண்டது.

சுந்தரரும் தன்னிலை உணர்ந்தார். எல்லாம்வல்ல பரம்பொருளை 'பித்தா’ என்று இழித்துரைத்தார் அல்லவா? அந்தச் சொல்லையே முதலாகக் கொண்டு, 'பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா...’ என்று திருப்பதிகம் அருளி, இறைவனைப் போற்றிப் பாடி அகம் மகிழ்ந்தார். 'நமது அடியவர்களை வணங்கிப் பதிகம் பாடு’ என்று இறைவன் பணிக்க, சுந்தரர் 'தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கி, 'திருத்தொண்டர் தொகை’யைப் பாடி அருளினார். சுந்தரர் பாடல்கள் அனைத்துமே சுந்தரமானவை.

ஒருமுறை, சுந்தரருக்குக் கண்பார்வை மங்கிட, 'என் கண்ணுக்கொரு மருந்துரையாய் ஒற்றியூரெனும் ஊருறை வோனே’ என்று திருவொற்றியூர் இறைவனைப் பாடித் துதித்ததாகப் புராணங்கள் போற்றுகின்றன. 'மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே’ என்ற இவரது பதிகத்துக்கு இசைந்த இறைவன் கண்ணொளி தந்தார்.

மேலும், திருக்கண்டியூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் காவிரியாற்றில் வெள்ளம் விலகி வழிவிட்டது, பதிகம் பாடி முதலையின் வாயிலிருந்து மதலையைக் (சிறுவனை) காப்பாற்றி அருளியது... எனச் சுந்தரரின் வரலாற்றில் நிகழ்ந்த அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியில், அவனருளால் அவன் தாள் பணிய, நண்பர் சேரமான் பெருமானோடு சுந்தரர் திருக்கயிலையை அடைந்ததும் ஓர் அற்புதமே!

திருஞான சம்பந்தர்

ஞானம் மூன்று வகைப்படும். அணுவைப் பற்றியும், பரம்பொருள் மற்றும் வான மண்டலத்தைப் பற்றியும் ஆராயும் ஞானம் பாச ஞானம்; தானே தன் ஆன்மாவைப் பற்றி ஆராய்வது பசு ஞானம்; இறைவனைப் பற்றி ஆராய்வது பதி ஞானம். இவ்வாறு பதி, பசு, பாசம் என மூன்று ஞானங்களைப் பற்றியும் ஆராய்ந்தவர் திருஞானசம்பந்தர்.

இயற்பெயர் ஆளுடைப்பிள்ளை. சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், சீர்காழியில், சிவபாத இருதயருக்கு மகனாகப் பிறந்தவர் இவர்.

ஒரு நாள், குழந்தையைக் குளக்கரையில் விட்டுவிட்டு நீராடச் சென்றார் தந்தை. அவர் நீரில் மூழ்கிக் குளிக்க, அவரைக் காணாமல் அழ ஆரம்பித்தது குழந்தை. அதன் அழுகையை நிறுத்த, உலகாளும் நாயகியே நேரில் தோன்றி சிவஞானப்பாலை தங்கக் கிண்ணத்தில் வைத்துப் புகட்டினாள். திருஞானசம்பந்தருக்கு அபர ஞானம், பரம ஞானம் இரண்டும் தோன்றின. அபர ஞானம் என்பது, புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படுவது; பரம ஞானம் என்பது அனுபவத்தால் பெறப்படுவது.

நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர், குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டார். குழந்தைக்கு எப்படிக் பால் கிட்டியது என்ற வினா முன்னெழ, குழந்தையை அதட்டி விசாரித்தார். அந்த சிவஞானக் குழந்தை அழகாகப் பாட ஆரம்பித்தது. 'தோடுடைய செவியன் விடை யேறியோர் தூவெண் மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடி’ எனப் பாடி, கோபுரத்தில் இருக்கும் அம்மையப்பனைச் சுட்டிக்காட்டியது. சிவபாத இருதயர் நடந்ததை உணர்ந்து மெய்சிலிர்த்தார்.

அவர் மட்டுமா? தொடர்ந்து அந்த ஞானக்குழந்தை பாடிய பதிகங் களால் இந்த அவனியே சிலிர்த்தது; செழித்தது! திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் மொத்தமே 16 ஆண்டுகள்தான். அதற்குள்ளாக தமது திருப்பார்வை பட்டாலே போதும் எனும் அளவுக்குச் சிவன் அருளால் உலகை உய்வித்தார் அவர். விடந்தீண்டி இறந்த கணவரை நினைத்து அழுத அபலைப் பெண்ணின் துயர் தீர்க்க அவளின் கணவனை உயிர்ப்பித்தது, திருமறைக்காட்டில் சிவாலயக் கதவடைக்கப் பாடியது, பூம் பாவையை உயிர்ப்பித்தது, பாண்டிய மன்னனின் நோயைக் குணமாக்கியது என திருஞானசம்பந்தரின் மகிமை குறித்து ஏராளமான தகவல்களைச் சொல்லலாம்.

ஒரு வைகாசி மாதத்தின் மூல நட்சத்திரத்தன்று, 'காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே’ என்று பாசுரம் பாடி, அவர் ஜோதியில் கலந்தார் என்கிறது பெரியபுராணம்.

அப்பர்

திருவாமூரில் பிறந்தவர் மருள்நீக்கியார். சமண மதத்தில் பற்றுக் கொண்டவர். இவரின் சகோதரி திலகவதியாரோ சிவபக்தி மிகுந்தவர். தன் தம்பியின் சிந்தையிலும் சிவமே நிறைந்திருக்க வேண்டும் என விருப்பம்கொண்டு, இறைவனை வேண்டினார்.

சிவம் திருவிளையாடலை ஆரம்பித்தது. மருள்நீக்கியாரை சூலை நோய் பற்றியது. தீராத வயிற்றுவலியால் அல்லலுற்ற மருள்நீக்கியார், சகோதரியின் அறிவுரையால் சிவப்பரம்பொருளின் மகத்துவம் உணர்ந்தார். திருவதிகை தலத்துக்குச் சென்று, 'கூற்றாயினவாறு..’ எனும் பதிகத்தைப் பாடித் துதிக்க, அவரின் சூலை நோய் நீங்கியது. செந்தமிழில் சொல் வனப்பு மிகுந்திருந்த அவரது பாடலால் மகிழ்ந்த சிவனார் அசரீரியாக ஒலித்து, 'இன்றுமுதல் நீர் திருநாவுக்கரசர் ஆவீர்’ என அருள்புரிந்தார்.

ஒருமுறை, சில தீவினையாளர்கள் நாவுக்கரசர் மீது அரசக் குற்றம் சுமத்தி அவரைத் தண்டனைக்குள்ளாக்கினர். சுட்டெரிக்கும் சுண்ணாம்புக் கால்வாயில் இடப்பட்டார் நாவுக்கரசர். ஆயினும், சற்றும் கலங்காமல்,'மாசில் வீணையும்...’ எனத் துவங்கி பதிகம் பாடி, ஈசனின் திருவடி நிழலைத் தியானித்து, மீண்டு வந்தார். மற்றொரு முறை, சமணர்கள் திருநாவுக்கரசரைக் கல்லைக் கட்டிக் கடலில் ஆழ்த்தியபோது, 'சொற்றுணை வேதியன் சோதி வானவன்’ என இறைவனைப் போற்றி, 'நற்றுணையாவது நமச்சிவாயமே’ என மீண்டு வந்தார்.

தென்னாடுடைய ஈசனைப் போற்றி அப்பர் பாடிய பாடல்களில் திருத்தாண்டகம் மிகவும் உருக்கமானது; ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. அதில், 'அப்பன் நீ, அம்மையும் நீ; அன்புடைய மாமனும் மாமியும் நீ’ என்று இறைவனைப் போற்றும் அப்பர் பெருமான், தான் நீண்ட நாட்களாகச் சமணம் தழுவியிருந்ததால், 'போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே’ என்று தன்னையே நொந்துகொள்கிறார்.

உள்ளம் மகிழ்ந்து, உணர்வு நெகிழ்ந்து, கண்ணீர் பெருக்கி, அந்தக் கண்ணீரிலே மார்பு நனைய இறைவனை வழிபட்டால், நம் உள்ளத்திலே இறைவன் உறைவான் என்பது அப்பரது நம்பிக்கை. மனத்தால் இறைவனை தியானித்து, வாக்கினால் போற்றிப் பாடி, உடம்பால் உழவாரத் தொண்டு புரிந்து... என மனம், வாக்கு, காயம் மூன்றாலும் முக்கண் முதல்வனை வழிபட்டு வாழ்ந்தவர் அப்பர் சுவாமிகள்.

Comments

  1. சமய குர வர் 4 பேரின் வரலாறு படிக்கும் தோறும் மெய்சிலிர்க்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே