பஞ்ச பாதகன் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song pancha paathagan (பஞ்ச பாதகன்) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"பஞ்ச பாதகன் " என்று தொடங்கும் பழநித் திருத்தலப் பாடல். சிறிதாகவோ, பெரிதாகவோ பாவங்கள் செய்வதையே மனித குலம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கலி முற்ற முற்ற இது கூடிக்கொண்டே போகிறது. மனிதர்கள் திருந்துவதற்காக, மகான்கள் உபதேசம் செய்வதும், அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதுமாக இருக்கிறார்கள். அருணகிரியார் மனிதர்கள் செய்யும் ஒட்டுமொத்தப் பாவங்களையும் தன் மேல் இழுத்து போட்டுக்கொண்டு இறைவனிடம் மனித குலத்தின் சார்பில் மன்னிப்பு வேண்டுகிறார். தன்னைப் பஞ்ச பாதகன் என்றே சொல்லிக் கொள்கிறார். ஒரு தனி மனிதர், அதுவும்முருகனின் அருட்பார்வை பெற்றவர் அப்படி அத்தனை பாவங்களையும் செய்திருக்கவே முடியாது என்று நினைக்கிறார்கள் ஆன்றோர்கள். அவர் வேண்டுவதெல்லாம் மற்றவர்களுக்காகத்தான். கடந்த காலங்களில் கறைகள், குறைகள் அவருக்கும் இருந்தன. அவை கந்தன் கருணையால் களையப்பட்டன. அடிமனதில் அமைதியோடு தான் மேற்பரப்பின் கொந்தளிப்புகளை நாம் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்கிறார்.

விளக்கம்: சொல்லவே நா கூசும் பஞ்ச பாதகச் செயல்களாம் கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குருநிந்தை என்ற எதற்கும் அஞ்சாத பாதகச் செயல்கள் புரிந்த பாவி நான். தனக்கும் தெரியாத, பிறர் சொல்லியும் கேட்காத முழு மூடன். பேராசையால் வஞ்சகச் செயல்கள் புரியத் தயங்காதவன். நல்ல பண்புகளில் வாசனைகளை துறந்தவன். பாவக் கடலில் நுழையத் தயங்கியதே இல்லை. சூதும் கொலையும் கை வந்த கலையாகிப் போன கொடுமை. செருக்கும் ஆசையும் கொண்ட சிறியன்.

மண் பொன் பெண் எனும் மூவாசைகளால் தாக்கப்பட்டேன். ஆணவம் கன்மம் மாயை முதலான கறைகளும் பந்த பாசங்களும் மனதை ஆக்கிரமித்து அலைக்கழிக்கத் தயார் நிலையில் இருந்தன.

ஐம் பொறிகள் என்னும் கடைக்காரர்கள் தங்கள் வளங்களைக் கடை பரப்பி விளம்பரம் செய்து கயமை என்னும் வியாபாரம் நடத்தி என்னை விலைக்கு வாங்கி நரக வாயில் தள்ள காத்திருக்க, உன் அருள் பெற்ற அன்பர்கள் சத் சங்கத்தில் சேர்ந்து தற்காத்துக் கொள்ளவும் தெரியாத அறிவிலி நான். உன் கருணை ஒன்றுதான் இந்த நிலையில் என்னை கடைத்தேற்ற முடியும் கந்தா!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே