குரம்பை மலஜலம்: JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song kurambai malasalam (குரம்பை மலஜலம்) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"குரம்பை மலஜலம் வழுவழு நிணமொடு" என்று தொடங்கும் பழனி திருத்தலப் பாடல். அருணகிரியாரின் சரவண தரிசனம் பற்றிச் சொல்லும் அற்புதமான பாடல். அமுத முகமும், குமுத விழியும் கொண்டு, கருணா மூர்த்தியவன் அருணகிரியாருக்குக் காட்சி தருகின்றான். அந்த உன்னத தரிசனத்திற்கு முன், ஆன்மாவை மறந்த உடல் என்ற வெறும் குடிசை பற்றிச் சொல்கிறார்.குருதி, நிணம், கழிவுகள் நிரம்பிய ஒரு குடியிருப்பு அது; அங்கே புகுந்து அட்டகாசம் புரியும் ஐந்து கசடர்களாம் பொறிகள், என துன்பத்தின் நிலைக்களனைப் பற்றிச் சொல்லி எச்சரிக்கை விடுகிறார். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் முதல் பகுதி எச்சரிக்கையாகவும், பின்பகுதி நம்பிக்கை ஒளிவீசி வரும் கந்தன் கருணையாகவும் இருக்கக் காண்கிறோம். எச்சரிக்கை நிலைகுலையச் செய்கிறது; நம்பிக்கை தூக்கி நிறுத்துகிறது.

குரம்பை மலஜலம் வழுவழு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல் நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவை பலகசுமாலம்

விளக்கம் : உள்ளொளியாம் ஆன்மாவை விட்டு விட்டுப் பார்த்தால், மனித உடல் என்பது எலும்புகள் அடுக்கிவைக்கப் பட்டு, குருதி, தசை, எலும்பு, ஈரல், குடல், இவற்றால் நிரப்பப் பட்டு, ஒரு நியதின்றிக் கலைந்த மயிர், கழிவுகள் இவை கொண்ட அற்பமான வீடு.

குடின் புகுதுமவர் கடுகொடுமையர்
இடும்பர் ஒரு வழி இணையில்ர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறியிலர் இருகணை விறலான

விளக்கம் : மனித உடல் என்ற இழிந்த வீட்டில் குடியேறி இருக்கும் ஐம்பொறிகளாம் ஐவர் இன்னும் இழிந்தவர்கள். அகந்தை கொண்டு மனிதனை ஆட்டிப் படைக்கும் கொடுமைக்காரர்கள். அங்குமிங்கும் அலையும் சஞ்சலக்காரர்கள். குரங்குபோல் சில்மிஷம் செய்து தொல்லை கொடுப்பவர்கள். மிருகம் போன்ற வலிமை கொண்டவர்கள். விஷம் போல் விலக்க வேண்டியவர்கள்.

சரம்பர் உறவனை நரகளைத் துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை

விளக்கம் : அந்த அபாயகரமான ஐம்புலன்களுக்கும் நான் அடிமை ஆனேன். நரகத்துக்கு வழிகேட்டு நடக்கத் தொடங்கியவன் நான். அடங்காத குதிரை போன்ற மனதைக் கொண்டிருந்தேன். உடல் பற்றை விடாதிருந்தேன். நாலும் நடந்து முடிந்த பின்னால் தன்னிரக்கத்தில் அழுது புலம்பிய கோழை.

சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி
தழைந்த சிவகடர் தனையென மனதினில்
அழுந்த உரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே

விளக்கம் : நான் முழுவதுமாக முடிவதற்குள் என்னைத் தடுத்த கருணையின் வெள்ளமே கந்தா. இந்த ஏழைக்கு இரங்க மயிலேறி வந்த மாமணியே. பேரெழில் பொங்கும் அமுத முகத்தை எனக்குக் காட்டிய சரவணபவனே. தெளிந்த சிவஞானத்தை எனக்கு ஊட்டி, அதை அழுந்த என் உள்ளத்தில் பதித்தவனே! அதற்கான உபதேசத்தை வழங்கும் பொழுது, மின்னிய உன் புன்னகையை, என்மீது பரிவோடு படர்ந்து, பட்ட மரமான என்னைத் தளிர்க்க வைத்துச் சிலிர்க்க வைத்த உன் குளிர்ந்த நயனங்களை, உன் மலரப் பாதங்களை, நான் மறப்பதும் உண்டோ முருகா !

இரும்பை வகுளமொடு இயைபல முகில் பொழில்
உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வளநாடா

விளக்கம் : இலுப்பை மரம், மகிழ மரம் இவற்றின் சோலைகளில் நெடுமரங்கள் வான் முட்டி நிற்க, குயிலும் வண்டும் இசைபாட , மயில் அதற்கு ஏற்றவாறு நடம் புரிய வளம் கொழிக்கும் சிதம்பரத்தின் நாதனே!

இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு
எரிந்து மகரமொடு திசை கரி குமுறுக
இசைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும்வேளே

விளக்கம் : க்ரவுஞ்சம் பொலபொலத்து விழ, மலைகள் தவிடுபொடியாக, மகரமீன்கள் நிறைந்த நீலக்கடல் தீப்பிடித்து செந்நிறமாக, அஷ்டதிக் கஜங்கள் நடுநடுங்க ஆரவாரத்தோடு போர்புரிய வந்த அசுரரை, அவர் யானைப்படையை, குதிரைப் படையை, யமலோகம் அனுப்பி வைத்த வேலாயுதா!

சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள்
அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா

விளக்கம் : தங்கமகனாய் தாமரையில் அமர்ந்திருக்கும், ப்ரம்மன், முனிவர்கள், தேவர்கள், அரம்பையர் அனைவரும் கூடி நின்று, அரகர, சிவ சிவ, சம்போ ஸ்வயம்போ என ஆனந்த நடனமாடிப் போற்றும் சிவனாருக்கே குருவாய் அமைந்தவனே, முருகா

செழும் பவள ஒளி நகைமுக மதிநகு
சிறந்த குறமகள் இணைமுலை புதைபட
செயங்கொடு அணை குக சிவமலை மருவிய பெருமாளே

விளக்கம் : நிலவைப் பழிக்கும் முகமும், பவளம் பழிக்கும் இதழும், ஒளிவீசும் புன்னகையும் கொண்ட, குறமகளின் மனதை வென்று, மணம் முடித்து, அன்போடு அணைத்துக் கொண்ட மணவாளா! புனிதமான, மங்களகரமான சிவ மலையாம் பழனிமலையில் கோயில் கொண்டிருக்கும் குகா சரணம்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே