அமுதுததி விடம் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song amutha uthathi (அமுத உததி) in English, click the underlined hyperlink.

முன்னுரை

அமுதுததி விடம் உமிழு ' என்று தொடங்கும் திருச்செந்தூர் பாடல். தர்மச் செயல்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது எதுவரை? அந்த தர்மதேவனே அழைத்துச் செல்ல வரும் வரையிலா? சிந்திக்கச் சொல்கிறார் அருணகிரியார். வாழ்வு முழுவதும் சுயநலக் கோட்டைகள் கட்டி சுகவாழ்வு வாழ்ந்து விட்டால் இறுதிக் கணங்கள் நெருங்க நெருங்கத் தினைஅளவு கூடத் தான தர்மமோ, மற்ற புண்ணியச் செயல்களோ செய்ய வில்லையே என்ற பதைப்பு வரலாம். அப்பொழுது எதையும் சொல்லவோ செய்யவோ முடியாதபடி காலம் கடந்து விடலாம். அதனால் இன்றே, இப்பொழுதே, நன்றே செய்யத் தொடங்கி விட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறார். இறுதிக் கணங்களை ஒளி, ஒலிக் காட்சி போல் விஸ்தாரமாய்ச் சொல்வது நம்மை நடுங்க வைப்பதற்காக இல்லை. அந்தக் கணங்களை நினைத்து, இந்தக் கணமே திருந்தத் தான். இதற்கு மாறாக ஒரு இன்பக் காட்சியாக, சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காட்டுவது நம் நெஞ்சில் நம்பிக்கை சேர்க்கத் தான். சிவனை நினைத்தாலே காலனை மறந்து விடுவோமே! அவருக்கே உபதேசம் செய்த ஞான குருவை நினைத்துவிட்டால், வாழ்க்கை முழுமை பெற வேறென்ன வேண்டும், என உணர்த்தும் பாடல்.

அமுதுததி விடம் உமிழு செங்கண் திங்கள்
பகவின் ஒளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையும் உடையவன் அரவ தண்டச் சண்ட சமன் ஓலை

விளக்கம்: பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைப் போன்ற கொடுமையும் கடுமையுமான விழிகள், நிலவின் பிறை போல் பளிச்சிடும் கோரப்பற்கள், விரிந்து பறக்கும் முடி என்ற பயங்கர உருவத்துடன் பேரொலி எழுப்பிக் கொண்டு, தண்டாயுதத்துடன் கோபக் கனல் வீசி வரும் காவன் கணக்கு முடிந்ததென ஓலையை நீட்டும் கலக்கமான நேரத்தில்,

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டிங்குப்
பறை திமிலை திமிர்தமிகு தம்பட்டம் பற்
கரைய உறவினர் அலற உந்திச் சந்தித் தெரு வூடே

விளக்கம்: பாச பந்தங்கள் ஒருபுறமும், கால தூதர் மறுபுறமும் இழுக்க, உடலைப் பிரிய மனமில்லாமல் உயிர் தவிக்க, தாரை, தப்பட்டை, அழுகுரல் இவையெல்லாம் அந்தத் துன்பியல் நாடகத்தின் உச்சக்கட்டமாய் அதிர்ந்து ஒலி எழுப்பிப் பதற வைக்க, அந்த இறுதிப் பயணத்தை தொடங்க வேண்டி வருமோ?

எமது பொருளெனு மருளையின்றி குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட்டுண் கைக்
கிளையமுது வசைதவிர இன்றைக் கன்றைக் கெனநாடாது
இடுக கடி தெனுெ முணர்வு பொன்றி கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
என அகலும் நெறி கருதி நெஞ்சற் கருதிப் பகிராதோ

விளக்கம்: அப்பொழுது நெஞ்சிலே என்னென்ன உணர்வுகள் தோன்றுமோ! தானதர்மங்கள் எதுவும் செய்ததில்லையே. தினை அளவு கூட எதையும் எவருடனும் பகிர்ந்து கொண்டதில்லையே. சுயநலக் கோட்டைக்குள் பாவச் சுமைகளைச் சேர்த்தது தானே மிச்சம்! அந்தப் பழி நீங்க, உடனே தான தர்மங்கள் செய்யக் கூட முடியாமல் காலம் கடந்து விட்டதே! இந்த டுடுடு, டுண்டுட்என்ற பறை ஒலியில் நெஞ்சம் செய்யக் பதைக்கிறதே எனக் காலம் கடந்து துடிக்கும் நிலை வராமல் காத்து விடு கந்தா! உடலும் மனமும் புத்தியும் ஒத்துழைத்து, இல்லை எனாது அள்ளி வழங்கும் தியாக உணர்வுகள் இதயத்தில நடமிட இதம் சேர்த்து விடு. ஞான விளக்கை ஏற்றித் தந்து விடு.

அடுத்த பகுதியில் தில்லைக் கூத்தனின் ஆனந்த நடனம் சொல்லி நம் உணர்வுகளைச் சமனப் படுத்துகிறார்.

குமுத பதி வகிர முது சிந்தச் சிந்தச்
சரணபரிபுர ச்ருதி கொஞ்சக் கொஞ்சக்
குடில சடைப் பவுரி கொடு தொங்கப் பங்கிற் கொடியாட

விளக்கம்: நீ சூடியிருக்கும் குமுதமலரின் நாயகனாம் திங்களின் பிறை அமுதமென ஒளிமழை சிந்த, பாதச் சிலம்புகள், வேதத்தின் நாதமாய் ஒலிக்க, ஜடாமுடி விரிந்து சுழன்று சுழன்று ஆட, பார்த்திருக்கும் பார்வதியாள், பரவசத்துடன் உடன் ஆட

குலதடினி அசைய இசை பொங்கப் பொங்க
கழவதிர டெகு டெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க தொகு தீதோ

விளக்கம்: புனித கங்கைப் பெண்ணாள் இன்பத்தால் பொங்க, இசை வெள்ளம் பெருக, டெகுடெ குட டெங்கட் டெங்கட் தொகுகுருகு தொகுகுகுகு என்ற தாளத்திற்கேற்ப-

திமிதமென முழவொலி முழங்கச் செங்கைத்
தமருகம் அதிர்சதியொடன் பர்க்கு இன்பத்
திறமுதவு பரதகுரு வந்திக்கும் சற் குருநாதா

விளக்கம் : முழவுகள் முழங்க, தொகுகுகுகு தொகுதுகு என உடுக்கை ஒலி எழுப்ப, அதே தாள கதிகளில், ஆனந்த தாண்டவம் ஆடி அகிலத்தை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் ஆடல் அரசனின் அருமை மைந்தா! அந்த மங்கள சிவனுக்கே ப்ரணவப் பொருள் சொன்ன பரம் பொருளே முருகா!

திரளுமணி தரள முயர் தெங்கிற் தங்கிப்
புரள எறி திரை மகர சங்கத் துங்கத்
திமிர சல மிதி தழுவு செந்திந் கந்தப் பெருமாளே

விளக்கம் : அலைகள் பொங்கிப் புரண்டு வந்து, தென்னையின் உச்சி வரை முத்துக்களை, சங்குகள,ை மகர மீன்களை வாரி இறைக்கும் கருநீலக் கடலின் கரையில் அமைந்த புனிதமான செந்திலம்பதியின் கந்தா! சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே