திருவாதவூரார் வரலாறு

By Mrs Devaki Iyer, Pune.

மாணிக்கவாசகர் என்று அறியப்படுகிற சைவ சமயக்குரவர்களில் காலத்தால் கடையவர், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கூடற்பதிக்கருகில் வாதவூரில் அவதரித்தார். திருவாதவூரார் என்றே பெயர் காணப்படுகிறது. ஆமாத்திய ப்ராம்மணகுலத்தில் பிறந்து கல்வி கேள்விகளில் சிறந்து மதி நுட்பத்திற்கும் நெறி திட்பத்திற்கும் பெயர்பெற்று விளங்கினார்.

திருவாதவூரார் அரிமர்த்தன பாண்டிய மன்னனால் மதிமந்திரியாக வரிக்கப்பட்டு அப்பதவியைச் சிறந்த முறையில் வகித்து வந்தார். ஆனால் மனம் ஈசனையே நாடிற்று. பணியிலிருந்து ஓய்வு விரும்பியவருக்குக் குதிரை வாங்கி வரும் பணி கொடுத்துச் சோழ நாட்டுத்துறை முகத்துக்கு அனுப்பினான் அரசன்.

பொன்னைக் கையிலும் பொன்னம்பலத்தானை சிந்தையிலும் சுமந்து சென்றார் மந்திரியார். வழியில் மறித்து சிவ மந்திரம் அருளினார் குருந்தை மரத்தடியில் தன் சீடர்களுக்கு மோன உபதேசம் செய்து கொண்டிருந்த தவசீலர். அவரே சிவ பெருமான் என்பது அவர் திருவடி தீட்சை பெற்று உணர்ந்தார். தன் உடல், உயிரோடு பாண்டியனளித்த பொருளையும் அவர்க்கே அர்ப்பித்தார். கண்ணீரால் திருமுழுக்காட்டி நிலவுலகை மறந்து பரவெளியில் மிதந்தார். பாமாலைகள் சூட்டி அங்கே ஒரு ஆலயம் எழுப்பப்பணித்து மறைந்தார் ஈசன்; வேறெங்கும் இல்லை, வாதவூரார் இதயத்தில் புகுந்தார். அப்பணியை நிறைவேற்றி ஈசன் பூசனையில் தனை மறந்திருந்தார்.

பாண்டிய மன்னனைச்செய்தி எட்டிற்று. வந்த குதிரைகளெல்லாம் விலை போய் விட்டன; மந்திரியார் துறைமுகம் போய்ச்சேரவே இல்லை; வழியில் தங்கி வேறு வேலை செய்கிறார். அவர் மீதிருந்த மரியாதையால் ஓலை அனுப்பினான். குதிரைகளோடோ அல்லாமலோ திரும்பி வருமாறு. அடிகளார் இறைவனடி வணங்க, 'நீர் முன்னே போம் நாம் குதிரைகளோடு அடுத்த முழு நிலவன்று வருவோம்' என உத்தரவு வந்தது.

மகிழ்ச்சியுடன் மதுரை அடைந்தார்; மன்னனும் மகிழ்ந்து அவருக்கு வரிசைகள் செய்தான். பௌர்ணமி வந்தது. புரவிகளைப்பற்றி செய்திகூட இல்லை. 'யோக்கியர் என நினைத்தேன் போக்கிரியாக அல்லவோ இருக்கிறீர். ஒன்று குதிரைகள் அல்லது நான் கொடுத்த பொன் திரும்பி வரும் வரையில் இரும் சிறையில்' என அடைத்துவிட்டான்.

வாதவூரார் சிவநாமந்தவிர வேறு சிந்தனை இலாது இருந்தார். ஆனால் தான் பொய்யன் என்றால் இறைவனும் அவ்வாறே என்றாகிவிடுமே. அடியார் துயரம் பொறுப்பாரோ இறைவன்; புறப்பட்டார் ஆவணி மூலத்தன்று மதுரைக்கருகில் இருந்த காட்டு நரிகளைப் பரிகளாக்கிக்கொண்டு தேவர்களை அவற்றின் மீது அமர்த்திக்கொண்டு தானும் நான்கு வேதங்களாகிய புரவியில் ஆரோகணித்து மதுரை மாநகர் சேர்ந்தார். ஆரவாரம் கேட்டு மன்னனும் மற்றோரும் வந்து பார்க்க, அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்

அதிலும் அந்தப் புரவிப்படைக்கு தலைவனானவனைப் பார்த்தால் காமன் நாணுவது திண்ணம். கம்பீரமான குரலில் மன்னனுக்கு ஒவ்வொரு குதிரையின் பூர்வீகம் லட்சணம் சாமர்த்தியம் என்று அஸ்வ சாஸ்திரம் படிப்பித்துப்பின் அக்குதிரைகளை வெவ்வேறு விதமாக நடத்தி அதாவது செலுத்திக் காட்ட அரசன் அயர்ந்து போனான். 'பார்த்துக்கொண்டீர்களா! இனி ஏதும் ஐயம் இல்லையே! எனவும் அவர் நோக்கிலும் பேச்சிலும் மிடுக்கிலும் மதி மயங்கியிருந்த மன்னன் இல்லை எனக் குறிப்பு காட்ட, 'இதோ பிடியுங்கள் கடிவாளம். இனி நமக்குள் ஒரு வழக்குக்கு இடம் இல்லை' என்று வேறொரு குதிரைக் கடிவாளம் கொடுத்து இளமுறுவல் செய்தார். இதில் இன்னும் சொக்கிய மாறன் மேலும் நல்லாடைகளும் முத்தாரங்களும் பரிசளித்து விடையளித்தான். மணிவாசகரும் விடுவிக்கப்பட்டதோடு கௌரவிக்கப்பட்டார்.

கரிமுகக்கடகளிற்று என்னும் திருவருணைச்சந்தத்தில் அருணகிரி நாதர் இதை நினைவு படுத்துகிறார். "நரிமிகுக் கிளைகளப் பரியெனக்கடிவளக் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்" என்று. கிளை என்றால் கூட்டம். 'மிகுந்த நரிகளின் கூட்டத்தைக் குதிரைகளாக்கிக் கடிவாளத்தைப்பிடித்து பாண்டியனுக்கு முன் பலவாறு நடத்திக்காட்டிய சிவ பெருமான்' என்று.

அது போல "ஆசை நாலு சதுர" சோலைமலைப்பாடலிலும் "வாசி வணிகன் எனக்குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமைக்கொளு க்ருபைக்கடவுள்" என குதிரை வணிகனாக வந்து குதிரை விற்று வாதவூர் அடிகள் எனும் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட கருணை தெய்வம் என்று ஈசனைக்கொண்டாடுகிறார். "தந்ததோ தன்னை கொண்டதோ என்தன்னை; ஆர் கொலோ சதுரர்" என்றும் கேட்ட மாணிக்கவாசகர் 'சிவனே' என்றிருந்தார்.

பரமனின் காலக்கெடு முடிந்தது போலும்! நடுநிசியில் 'கள்ளக்' குதிரைகள் மீண்டும் குள்ள நரிகளாயின. வழுதியைப்பழிப்பது போலே ஊ என்று ஊளையிட்டு கட்டவிழ்த்து அங்கிருந்த பழைய குதிரைகளையும் கடித்துக்குதறி வெளியேறின. இது "திரை வஞ்ச இருவினைகள்" என்கிற பொதுப்பாடல் வரிசையில் அருணகிரியாரால் "பரியென்ப நரிகள்தமை நடனங்கொடு ஒரு வழுதி பரி துஞ்ச வரு மதுரை நடராஜன்" — அதாவது பரியாக்கிக் கூட்டி வந்த நரிகளைப் பலவிதமாக நடத்திப் பாண்டிய மன்னனுக்கு ஆட்டுவித்து காட்டி பின் அந்நரிகள் தம் சுயரூபமெடுத்து அந்த பாண்டியனுடை லாயத்தில் இருந்த அவன் குதிரைகளைக் கடித்து இறந்து விடுமாறு மதுரையில் அன்று வந்த ஆடல் அரசன் (சிவ பெருமான்) தானே நாடகத்தில் வல்லவன்; அவனே ஒரு நாடகத்தை இயக்கி நடத்தினான் என்று கூறுகிறார்.

பெருமகிழச்சி போதையில் உறங்கிய மன்னன் பெருஞ்சினத்தோடு எழுந்தான். அடுத்து என்ன வாதவூரார்தான் அந்த குதிரை படைத்தலைவனை எங்கே சென்று பிடிக்க முடியும்? மீண்டும் சிறை மட்டும் இல்லை இப்போது சித்ரவதையும் கூட. அடி உதை அன்னம் நீர் ஒன்றும் இல்லை. வறுத்து கொட்டினாற் போல நெல் போட்டால் பொரியாகிவிடும் வைகையோர சுடுமணலில் கைகால் கட்டி நிற்க வைத்தனர்.

இறைவனைத்தவிற வேறொன்றையும் உணராத வாதவூராருக்கு உறைத்ததோ இல்லையோ; பரமேசனுக்கு உறைத்தது. பறந்தது ஆணை வைகைக்கு. 'பெருக்கெடுத்து ஓடு; தணலான மணல் தண்ணென்றாகட்டும்; மன்னன் கண் திறக்கட்டும்' என்று. 'ஊனைச்சுடும் ஆனியில் ஆற்றில் வெள்ளமா? ஓடுங்கள்!! வீட்டுக்கு ஒருவராக உடைப்பை அடைக்கச்செய்யுங்கள். கரையை உயர்த்திக் கட்டுங்கள்' என்றான் அரையன்.

ஆங்கோர் வந்தி என்பாள் கை பிசைந்தாள். 'எங்கோன் ஆணையை எங்ஙனம் நிறைவேற்றுவேன். கைம்பெண், பொன்போல் பிள்ளையும் பெற்றிலேன், உனயன்றித் துணையறியேன் ஈசா!' எனக் கை குவித்தாள். கருணையின் சிகரமாம் பெருமான் விரைந்தார் மண் வெட்டியும் கூடையுமாக. 'கூலிகொடுத்து வேலை கொள்வார் உண்டோ' என்று கூவிக்கொண்டு வந்தியின் வாயிலில் நின்றார். மட்டில்லை மகிழ்ச்சிக்கு. 'என் பங்குக்கரை கட்ட என்ன கூலி கொள்வாய்' என்ற அவள் கேள்விக்கு, 'நீ விற்கும் குழல் பிட்டில் உதிர்ந்ததை மாத்திரம் கொடுத்தால் போதும்' என்றார். 'கட்டுடல் கொண்ட கட்டிளம் காளை! பாவம், சற்று மதி மந்தம் போலும்' என நினைத்தாள் கிழவி. 'முதலில் கூலி கொடு, பின்னர் வேலைக்குச் செல்வேன்' என்றார் வந்த கூலியாள். சுடச்சுடப் பிட்டு உதிர்ந்து கொண்டே வந்தது. வர வர அவனும் உண்டான் மாவு தீரும் வரை. இத்தனை நாள் வந்தி தனக்குப் படைத்து வந்த பிட்டு எல்லாவற்றையும் அன்று உண்டு தீர்த்தார் போலும்.

ஒருவழியாக நதிக்கரைக்குப்போனார். மண்ணை எடுத்துக்கூடையில் போடுவதும் அதிக கனம் என்பது போல் திரும்ப கொட்டுவதும் நிறைப்பதும், சற்று நடப்பதும், களைத்தது போல் நிற்பதும், என்று போக்குக்காட்டி காவலர்களின் கவனத்தை ஈர்த்தார். இவனிடம் இருந்த ஏதோ ஒன்று அந்த கள்ளமின்மை, அந்த வசீகரம், அவர்களுக்கு அவனிடம் கடுமை காட்டத் தோன்றவில்லை.

பகல் பொழுது அரசனே வந்தான் பார்வையிட. பார்வை சென்றது அடைபடாத உடைப்பில். 'அது யார் பங்கு ஏன் அடைக்கவில்லை அதனால் அங்கம் பக்கமும் கரை உடைந்து வருகிறதே, அழைத்து வா அவனை' - சினந்தான் அரசன்.

கூட்டி வந்தனர் காவலர். 'இதோ இவன் வந்தியின் ஆள். வேலை செய்யாமல் பொழுது போக்கினான்' என்றனர். சீறினான் மன்னன், குதிரை ஓட்டும் சாட்டையைச் சொடுக்கினான் சொக்கனாம் வந்தியாள் முதுகில். பளீறென்று அவன் முதுகில் விழுந்தது அடி. பிளிறிற்று அவன் குதிரை அடி தாங்காமல்; ஈ எறும்பு முதல் யாவர் முதிகிலும் அடி விழுந்ததால் ஆ வென்ற பெருங்குரல் எழுந்தது. தொடர்ந்தது பெரும் நிசப்தம். இன்னதென்று அறியுமுன்பு கூடை மண்ணை உடைப்பில் கொட்டி மறைந்தார் முக்கட்பிரான்.

செழியன் விழித்தான்; ஐயோ பிழைத்தேனென்று சார்ந்தான் அங்கயற்கண்ணி நாதனை. பலவாறு புலம்பிப் பிழை பொறுக்க வேண்டவும், 'என் அடியவன் வாதவூரனை விடுவி; அவன் பொருட்டே இவ்வாடல்' என உணர்த்தினார். அவரை விடுவித்து அவரிடமும் மன்னிப்பு வேண்டினான் பாண்டியன். அவரோ 'எல்லாம் எனையாளும் ஈசன் செயல்' என இருந்தார்.

திருவாதவூரார் பின் பல சிவத் தலங்கள் சென்று பலப்பல பக்திப்பாமாலைகள் பலவித ப்ரபந்தங்கள் பாடினார். அவை திருவாசகம் எனப் பெயர் பெற்றது. அவருக்கு மணிவாசகர்/ மாணிக்க வாசகர் என்கிற திருநாமம் அவரைக் குருவாக வந்து ஆட்கொண்ட சிவபிரானால் அளிக்கப்பட்டது. அவருடைய சிவ புராணம் எனும் ப்ரபந்தம் ஓதப்படாத சிவாலயம் இல்லை. யாவரும் அறிந்த திரு எம்பாவை உறங்குகிற ஆன்மாக்களை எழுப்பி இறைவனிடம் சேர்ப்பதாகும். திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் இவை ஆன்மாவின் இறைதாகத்தை வெளிப்படுத்துவது. திருப்போற்றிச்சதகம் இறைவன் பெருமையையும், அச்சோப்பதிகம் கருணை யை வியப்பதும் ஆகும். திரு அம்மானை, பொன்னூசல் முதலியன பெண்கள் விளையாட்டில் பாடுவதாக அமைந்திருக்கிறது.

மாணிக்க வாசகர் சிதம்பரம் சென்றபோது ஈழத்திலிருந்து ஒரு பௌத்த மதம் சார்ந்த ஒரு அரசனும் பரிவாரங்களும் வந்திருந்தனர். அவர்கள் சிவபெருமானைப்பற்றிக் கேட்ட குறும்பான விகல்பமான கேள்விகளைத்தான் கேட்பது போலக் கேட்டு அந்த அரசனின் ஊமைப்பெண் வாயில் இருந்தே விடை சிவனைப் போற்றும் விதமாக வரச்செய்து பாடியது திருச்சாழல். எனவே வஞ்சப்புகழ்ச்சியாக அமைந்திருப்பது. இதன்பின் அந்த ஈழத்து அரசனும் அவனைசாசேர்ந்தவரும் சைவத்தை ஏற்றனர்.

சிதம்பரத்தில் இருந்து அவர் திருப்பாதிரிப்புலியூர் செல்லும் வழியில் கெடிலை நதி பெருக்கெடுத்து ஓடத் தவித்து நின்றார். அடியவர் இடர் நொடியும் பொறாத இறைவன் ஒரு சித்தராய்த்தோன்றி என்ன வேண்டும் எனக்கேட்டு, தென்புறம் ஓடிய நதியை வடபுறமாக திசை மாறி ஓடச்செய்தார்.

உத்தர கோசமங்கையில் இறைவன் அவர் உடன் இருந்தவர்களைக்கைலாயம் தன்னுடன் அழைத்துச்சென்று, வாதவூரரை அங்கேயே இருக்கும்படிப் பணித்துச்சென்றார். பிரிவுத்துயர் தாங்காது தன் நிலைக்கு இரங்கி அவர் பாடினவை கல்லையும் கரையச்செய்யும். எனவே திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார். திருவாசகம் இறைவன் இடத்தில் வைத்துப்பூஜிக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் சிவபெருமானாகவே கருதப்படுகிறார். அவர் இறைவனை மதுர பாவம் எனப்படும் நாயகி பாவத்தில் வணங்கினார் என்கிற கருத்தும் உண்டு.

பின் சிதம்பரத்துக்கு வர உத்தரவாயிற்று. அங்கு ஒரு சைவப்பெரியவராகத்தோன்றி அவர் பாடல்களைக் கேட்க ஆவலுற்று, தன் கைப்பட ஓலையில் எழுதினார். மறுநாள் சந்நிதி திறந்த அந்தணர்கள் அங்கே ஓலைச்சுவடிகள் கண்டு திறந்து பார்த்த பொழுது மணிவாசகன் சொல்ல தில்லை அழகிய சிற்றம்பலவன் எழுத்து என்று ஸ்வாமி கையொப்பம் இட்டிருப்பது கண்டு வியந்தனர். இவ்வோலை இன்றும் தில்லைக்கோவில் கருவறையில் இருப்பதாகத் தெரிகிறது. அந்தணர்கள் வாதவூரரை அழைத்து மிகுந்த மரியாதையுடன் அழைத்து அவர் பாடல்களுக்குப் பொருள் உரைக்குமாறு கேட்டனர். அவர் பஞ்சாட்சரப்படிகள் ஏறி மூலவரைக்காட்டி இதோ இதுவே பொருள் என்று கூறி சோதி வடிவாகி இறைவனுடன் கலந்து விட்டார். அது ஓர் ஆனி மக நாளாகும். அவர் மண்ணில் வாழ்ந்தது 32 வருடங்களே.

இன்றும் மாணிக்க வாசகர் சிவபெருமானாக வணங்கப்படுகிறார். திருவாசகமும் இறைவனைப்போலவே பூஜிக்கப்படுகிறது. காந்திஜியும் தில்லையாடி வள்ளியம்மை என்கிற 14 வயதுச்சிறுமி தன் வாழ்நாளின் கடைசித்தருணத்தில் அச்சோப்பதிகத்தின் முதல்பாட்டைக்கேட்டு முறுவலுடன் உயிர்நீத்தது கண்டு தமிழ் கற்றுக்கொள்ள முயன்றார். ப்ரிட்டானியரான ஜி.யு. போப் என்பவரும் திருவாசகத்தில் மிக ஈடுபட்டு உருகியிருக்கிறார். மேலை நாட்டு தத்துவஞானிகளின் அத்தனை நூல்களும் கூட திருவாசகத்தின் ஒரு எழுத்துக்கு ஈடாகாது என்று சொல்லியிருக்கிறாரா. அதோடு சிவ புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். உலகம் உள்ளவரை வாதவூராரின் வரலாறும் அவர் மணிவாசகமும் ஒலித்துக் கொண்டு வழிநடத்திக்கொண்டும் இருக்கும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே