திருஞானசம்பந்தர் வரலாறு

By Mrs Shyamala, Pune.

திருஞானசம்பந்தர் சைவம் தழைக்க பாடுபட்டவர்களில் ஒருவர். மிக சிறு வயதிலேயே பதிகம் பாட ஆரம்பித்தார். நமக்கு 368 பதிகங்களே கிடைத்துள்ளன.

திருஞானசம்பந்தர் சீர்காழியில் சிவபாதருக்கும் பகவதி அம்மாவுக்கும் கிபி 637ல் மகனாய் தோன்றினார். மூன்று வயது குழந்தையாக இருந்த போது தந்தை தோணியப்பர் ஆலய குளக்கரையில் குழந்தையை அமர்த்தி விட்டு நீராடச் சென்றார். குழந்தைக்கு பசி. அம்மா அம்மா என்று அழ உமையவள் பாலுடன் சேர்த்து ஞானத்தையும் ஊட்டினாள். திரும்பி வந்த தந்தை குழந்தை வாயில் பால் வழிவது கண்டு பிள்ளையிடம் வினவ "தோடுடைய செவியன்" என பாடி, மேலே கை தூக்கி பரம் பொருளை அடையாளம் காட்டினார். இவர் முருகனின் அவதாரம் என்கிறார் அருணகிரிநாதர்.

ஞானசம்பந்தர் நடத்திய அதிசயங்கள் பெரிய புராணத்தில் கூறப்பட்டவை.

  1. பொற்றாளம் பெறுதல்
    ஞானசம்பந்தர் திருக்கோலக்காவு என்ற ஊருக்குச் சென்றார். கையால் தாளம் போட்டு "மடையின் வாளை " என்ற பதிகம் பாடினார். குழந்தைக்கு கை வலிக்குமே என்று சிவபெருமான் ஐந்தெழுத்து மந்திரம் பொறிக்கப்பட்ட பொற்தாளத்தை தந்தார்.
  2. முத்து சிவிகை பெறுதல்
    திருநெல்வாயில் துறை சென்றார். களைப்பினால் சோர்வடைந்தார். குழந்தை மேல் வெயில் அடிக்கிறதே என்று இறைவன் முத்து சிவிகை, முத்து குடை அளித்தார்.
  3. உபநயனம்
    ஏற்ற வயதில் பூணூல் சடங்கு. வந்த அந்தணர்களின் வேத ஐயங்களை நீக்கி, மறையின் முடிவான பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமையை "துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் " என்ற பதிகம் பாடி உணர்த்தினார்.
  4. முத்து பந்தல் பெறுதல்
    பட்டீஸ்வரத்தில் வெயில் அதிகமாதலால் சிவபெருமான் ஒரு பூதகணத்திடம் முத்து பந்தல் கொடுத்து அனுப்பினார்.
  5. விஷ ஜுரம் நீக்குதல்
    திருப்பாச்சிலாசிராமம் என்ற ஊரில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்ற நோயை பதிகம் பாடி நீக்கினார். திருச்செங்கோட்டில் பலர் விஷ ஜூரத்தால் பீடிக்கப்பட்டு இருந்தனர். திருநீலகண்ட பதிகம் பாடி ஜுரம் போக்கினார்.
  6. பொற்காசு பெறுதல்
    அப்பர் இவர் பெருமை அறிந்து சீர்காழி வந்தார். இருவரையும் பக்தர்கள் அன்புடன் அருட்கடல், அன்புக்கடல் என கொண்டாடினர். திருவீழிமிழலைக்கு அப்பருடன் சென்றார். அங்கு பஞ்சம். "வாசி தீர்வே காசு நல்குவீர்" என பதிகம் பாட சிவன் பொற்காசுகள் அளித்தார். பஞ்சம் போக்கினார்.
  7. புனல் வாதம்
    மங்கையர்க்கரசியின் அழைப்பின்படி சமணர் ஆதிக்கம் ஓங்கியிருந்த மததுரையில் சமணர்களை புனல் வாதம் செய்து வென்றார். கூன் பாண்டியனின் வெப்ப நோயை "மந்திரமாகும் நீறு " என பதிகம் பாடி போக்கினார்.
  8. மற்ற அதிசயங்கள்
    பாம்பு தீண்டி இறந்த வணிகனை "படையா யெனுமால் சரண் நீ எனுமால்" எனப்பாடி உயிர்ப்பித்தார். திருமறைக்காட்டில் அப்பர் பதிகம் பாடி கோயில் கதவை திறந்தார். பின் இரவு இவர் பாட கதவு மூடிக் கொண்டது. கிரஹ தோஷத்திலிருந்து மக்களை காக்க கோளறு பதிகத்தை காந்தார பண்ணில் பாடினார். இறந்து சாம்பலான பூம்பாவையை "மட்டிட்ட புன்னையன் கானன்" எனப் பாடி எழுப்பினார். திருவோத்தூரில் உள்ள ஆண் பனைகளை பெண் பனையாக்கி காய்க்க வைத்தார்.

திருப்பெருமணம் கோவிலில் இவருக்கு வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் 16ம் வயதில் திருமணம் நடந்தது."கல்லூர் பெருமாள் வேண்டா குழுமம்" என பதிகம் பாடி திருமணத்திற்கு வந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு இறை ஜோதியில் கலந்தார்.
திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே