கட்டி முண்டக : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune.

For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : கட்டி முண்டக

எட்டு இரண்டு என்ற இரண்டு எண்களை வைத்துக் கொண்டு அருணகிரியார் சொற்சிலம்பம் ஆடி இருக்கிறார். அர்த்தம் பொதிந்த தரமான பகுதி. எட்டும் இரண்டும் பத்து என்பது கூட தெரியாத பேதையாக நான் இருந்தேன். உன் அருளால் எண்ணும் எழுத்தும் கற்ற பின், அடியார்களின் பக்தியின் வெளிப்பாடாக வரும், பரவசம், குரல் தழுதழுத்தல், விழிநீர் அரும்புதல், மெய் விதிர்விதித்தல், முதலான எட்டும் இரண்டும் ஆன பத்து பேரின்ப நிலைகள் பற்றி அறிந்தது இல்லையே முருகா ! எட்டும் இரண்டும் சேர்ந்த பத்து என்ற எண்ணுக்கு உரிய எழுத்து "ய". அது பஞ்சாட்சரத்தில் – நமச்சிவாய நாமத்தில் – ஆன்மாவைக் குறிக்கும் என்பதை அறிந்தவன் இல்லையே! அப்படி ஏதும் அறியாதவனாய் இருந்தவனை படிப்படியாய் உயர்த்தினாய். இந்த ஏழையின் செவியில், எட்டிற்கு உரிய எழுத்து அ, இரண்டிற்கு உரிய எழுத்து உ, இரண்டும் சேர்ந்து தருவது அ+ உ+ ம் – ஓம் என்னும் பிரணவப் பொருள், அதுதான் லிங்கம் எனப்படும் சிவலிங்கக் குறி, என்று தெளிந்த தேனாக ஞான உபதேசம் தந்து விட்ட பேரருளே என் குருநாதா! முருகையா!

அன்று போர்க்களத்தில் புயலாக நுழைந்தாய். எட்டு திசைகளிலும், மேலும், கீழுமான இரண்டு திசைகளிலும் எங்கும் உன் உருவம் தான். சிவசுதன், காங்கேயன், சரவணபவன், தேவசேனாபதி, சக்திவேலன், முருகன், ஸ்கந்தன், செவ்வேள் என்றெல்லாம் பத்துத் தித்திக்கும் நாமங்கள் கொண்ட நீ, பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து, வஞ்சக அசுரர்களைப் பதற வைத்தாயோ! பத்துத் திக்குகளிலும் அவர்கள் செங்குருதி பொங்கி வர, அழித்து வெற்றி வாகை சூடிய வேலவா!

அந்த சிவகாமி நேசனான உன் தந்தையே சுந்தரேசனாக மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை வந்து வளையல் செட்டியாக வேடம் பூண்டு செங்கைகள் மேலும் சிவக்க வளையல்களை சுமந்து மதுரை வீதிகளில் விற்று திருவிளையாடல் புரிந்தவர் அல்லவா !அப்படி விந்தைச் செயல்கள் புரிய வல்ல உன் தந்தையே சிந்தை மகிழும் படி அவருக்கு ஆதியான பிரணவம் சொன்ன ஐயனே!

திருவிளையாடல் புரிந்து பக்தர்களைக் காப்பதில் தந்தைக்கேற்ற தனயன் அல்லவா நீ !அவரைப் போலவே வளையல் செட்டியாய் தினைப்புனம் வந்து, அந்த இச்சாசக்தியாம் வள்ளிமயில் உன்மேல் கொண்ட அன்பில் உருகி நிற்க, அவளை காந்தர்வ மணம் புரிந்து ஆட்கொண்ட அருள் அமுதே! பொன்னம்பலத்தின் புனிதச் சுடரே! சரணம் .

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே