தரணியில் அரணிய | பூமியில் கோ ட்டைகளுடன் பாதுகாப்பாக இருந்து |
முரண் இரணியன் | தன்னிடம் பகை கொண்டு எதிர்த்த இரண்யகசிபுவின் |
உடல் தனை நக நுதி கொடு | உடலை தன் கூரிய கை நகங்களால் |
சாடு | தாக்கிக் கொன்ற |
ஓங்கு நெடும் கிரி | பெரிய நரசிம்ம அவதாரம் எடுத்தவள் |
ஓடு ஏந்து பயங்கரி | கையில் பிரம்ம கபாலமாகிய மண்டை ஓடு ஏந்திய அச்சமூட்டும் உருவம் உடையவள் |
தமருக பரிபுர ஒலி கொடு | உடுக்கை, கால் சிலம்பு, இவற்றின் ஓசைக்கு ஏற்ப (அதைத்தாளமாகக்கொண்டு) |
நடநவில் சரணிய | இனிமையாக நடனமிடும் திருப்பாதங்கள் உடையவள்; |
சதுர்மறை | நான்கு வேதங்களில் புரிகின்ற (தமருகத்துக்கு ஏற்ப அவள் நடம்புரிகிறபோது ஒலிக்கும் சிலம்போசையே வேதம்) |
தாதாம்புய | மகரந்தம் பொருந்திய (பாத) கமலங்கள் உடையவள் |
மந்திர | மந்திரங்கள் வடிவாகவும் (மந்திர மாத்ருகா ரூபிணி) |
வேதாந்த | வேதத்தின் முடிந்த முடிவான பரம் பொருளும் ஆன |
பரம்பரை | உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவள் |
சரிவளை | கைகளில் ஒலிக்கும் வளையல்களும் |
விரிசடை | விரிந்த சடாமுடியும் |
எரிபுரை வடிவினள் | நெருப்புக்கங்கு போல் சிவந்த நிறம் கொண்டு |
சததள முகுளித | தாமரை மொட்டுப்போல் குவிந்ததும் |
தாம | மாலைகள் அணிந்ததும் ஆன |
அம்குசம் | அழகிய தனங்களும் |
மென் திருதாளாந்தர | மென்மையான திருப்பாதங்களும் கொண்ட |
அம்பிகை | தாயானவள் |
தருபதி | கற்பக விருட்சம் உள்ள அமராவதிக்கு அரசனான தேவேந்திரனையும் |
சுரரொடு | மற்ற தேவர்களையும் |
சருவிய அசுரர்கள் | எதிர்த்த அரக்கர்களின் |
தட மணி முடி | பெரிய, ரத்தினங்கள் பதித்த கிரீடங்கள் |
பொடிதான் ஆம்படி | தூளாகப் பொடிந்து போகுமாறு |
செங்கையில் வாள் வாங்கிய | தன் அழகான (சிவந்த) கையில் வாளை வீசிய |
சங்கரி | சங்கரனின் துணைவி, (எப்பொழுதும் நன்மையே செய்பவள்) |
இரண கிரண | பொன்னிறக் கதிர் வீசும் |
மட மயில் | மெல்லிய, மயில் போன்ற சாயல் உள்ளவள் |
ம்ருகமத புளகித | கஸ்தூரி தடவப்பெற்று புளகாங்கிதம் கொண்ட |
இளமுலை இளநீர் | இளநீர் போன்றதும் (பருத்த) இளமையானதுமான தனபாரங்களை |
தாங்கி நுடங்கிய | சுமப்பதினால் வருந்துகின்ற (ஸௌ.ல. 79-நிஸர்க க்ஷீணஸ்ய ஸ்தனதடபரேன க்லமஜூஷோ.. இயற்கையாகவே மெலிந்த உன் இடை, இந்த ஸ்தனபாரத்தால் மிகுந்த வருத்தம் அடைகிறது.)
|
நூல் போன்ற மருங்கினள் | நூல் போல மெலிந்த இடைப்பாகம் உடையவள் |
இறுகிய சிறு பிறை | உறுதியான மெல்லிய பிறைச்சந்திரன் போல |
எயிறு உடை யம படர் | (கோரை)பற்களைக் கொண்ட எம தூதர்கள் |
எனது உயிர் கொள்ள வரின் | என்னுடைய உயிரை பறித்துப் போக வரும் பொழுது |
யான் ஏங்குதல் கண்டு | நான் அஞ்சி கலங்குவதைப்பார்த்து (இரங்கி) |
தான் ஏன்று கொளும் குயில் | என்னை ஏற்றுக்கொண்டு தன்னிடம் அழைத்துக்கொள்ளும் (ஆஸ்வாசப்படுத்தி) குயில் போன்ற இனிய பேச்சு உள்ளவள் |
இடு பலி கொடு திரி | உணவுக்காக பிச்சை வாங்கி உழலும் |
இரவலர் இடர் கெட | ஏழைகளின் துன்பம் தீரும்படி |
இடும் மன கர தல | கொடுக்கின்ற கொடை உள்ளமும் திருக்கரங்களும் கொண்ட |
ஏகாம்பரை | காஞ்சியில் அன்னபூனணியாக அமர்ந்திருக்கும் ஏகாம்பர நாதரின் துணைவி |
இந்திரை | மோக்ஷம் அருள்பவள் |
மோக அங்க | மனதைக்கவரும் அழகான அங்கங்கள் உடையவள் (தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியது போல ஒவ்வொரு அங்கமும் அழகின் எல்லை) |
சுமங்கலி | நித்திய சுமங்கலி (நித்தியப் பரம் பொருளின் சக்தி அல்லவா?) |
எழுதிய படம் என | திரையில் வரைந்த சித்திரம் போல் அசையாமல், |
இருள் அறு | அஞ்ஞானமாகிய இருளே சற்றும் அணுகாத |
சுடர் அடி இணை தொழு மவுனிகள் | தன்னுடைய அறிவொளி ஆகும் திருப்பாதங்களை
தியானித்து வணங்கும் முனிவர்களுக்கு |
ஏகாந்த சுகம் தரு | அந்தரங்கத்தில் ஆனந்தம் அளிக்கும் |
பாச அங்குச சுந்தரி | பாசம் அங்குசம் கையில் ஏந்தி இருக்கும் பேரழகி |
கரணமும் | கை,கால்,வாக்கு முதலிய புறக்கரணங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிற அகக்கரணங்களும் (இவற்றால் நல்ல, தீய செயல் புரிகிறோம் அதன் விளைவுகள் பதிவாகி மறு பிறப்புக்குக்காரணம் ஆகிறது)
|
மரணமும் | இந்த உடல் அழிந்து விடும் நிலையும் |
மலம் ஒடும் | ஆத்மாவைப்பற்றிச் சுற்றி இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அழுக்குகளும் |
உடல் படு கடு வினை கெட | இவற்றால் ஏற்பட்ட உயிர்கள் படுகின்ற பிறவிச்சுழற்சி எனும் பெரும் துன்பத்தை அடியோடு போக்கிவிட (இல்லாமல் செய்ய) |
நினை காலாந்தரி | கருணை உள்ளம் கொண்ட காலத்தைக் கடந்தவள் |
கந்தரி நீலாஞ்சன | மை போல் கருத்த கழுத்தை உடையவள் (சிவனோடு கலந்திருப்பதால்) |
நஞ்சு உமிழ் | வாயில் விஷத்தை உடைய |
கனல் எரி கணபண | நெருப்பு கக்குகின்ற கூட்டமான படங்களையும், |
குண மணி | உயர்ந்த ரத்தினங்கள் |
அணி பணி | (பதித்த ஆபரணம், முகுடம்) அணிந்த (ஆதி சேஷனாகிய) பாம்பை |
கன வளை | பெருமை மிக்க கங்கணமாகவும் |
மரகத காசாம்பர கஞ்சுளி | பச்சைவண்ண ரவிக்கையும், காயாம்பூ வண்ண புடவையும் |
தூசு ஆம் படி கொண்டவள் | தனது ஆடைகளாக அணிந்திருப்பவள் |
கனை கழல் | (சிலம்பு) ஒலிக்கின்றன தன் திருவடிகளை |
நினை அலர் | நினைக்காதவர்கள் (கர்வம், அகங்காரம் மிக்கவர்களை) |
உயிர் அவி பயிரவி | உயிரை அழிக்கின்ற பயங்கர வடிவுடையவள் |
கவுரி | வெள்ளை நிறம் கொண்டவள் (சரஸ்வதி போன்ற ரூபங்களில்) |
கமலை | கமலாம்பாள் (திருவாரூரில் இந்த ரூபம்) |
குழை காதார்ந்த செங்கழுநீர் தோய்ந்த | காதில் குண்டலங்கள் செங்கழுநீர் மலர்களாக விளங்க, |
பெரும் திரு கரை | மிகுந்த அழகின் எல்லையாகின்ற |
பொழி திருமுக | திருமுகங்களில் இருந்து பெருகும் (தவ வதன சௌந்தர்ய லஹரி என்று ஆதி சங்கரர் வரிகள் நினை கூரத்தக்கது) |
கருணையில் உலகு எழு கடல் நிலை பெற | உயிர்கள் பால் இரக்கம் எனும் காருண்யத்தால் ஏழுகடல்களால் சூழப்பட்ட உலகங்கள் நிலையாக நிற்குமாறு |
காவு ஏந்திய | காப்பாற்றும் பொறுப்பைத் தாங்கிய ("நீ கண் திறந்ததால் தோன்றிய உலகங்கள் கண் மூடினால் அழிந்து விடும் என்கிற பயத்தால் எப்போதும் இமைக்காமல் விழித்து இருக்கிறாய்" - "நிமேஷோன் மேஷாப்யாம்" சௌந்தர்ய லஹரி 55 வது ஸ்லோகம்)
|
பைங்கிளி | பசும் கிளி போன்றவள் |
மா சாம்பவி தந்தவன் | பெருமை பொருந்திய சம்பு எனும் சிவனின் மனைவி பெற்ற குழந்தை |
அரண் நெடு வரை | கோட்டை போல வடதிசையில் படர்ந்து இருக்கும் நீண்ட மேரு மலையை (க்ரௌஞ்சம் அதன் பகுதி) |
அடியொடு பொடி பட | மிச்சம் இல்லாமல் தூளாகிப் போகும்படி |
அலைகடல் கெட | அலைகளை உடைய கடல் காணாமல் போகும்படியும் (தண்ணீர் இருந்தால் தான் கடல், இல்லை என்றால் வெறும் பள்ளம்தானே) |
அயில் வேல் வாங்கிய | கூர்மையான வேலைப் பின் இழுத்து வேகமாக ஏவிய |
செந்தமிழ் நூலோன் | சிறந்த தமிழ் மொழி முற்றும் கற்றவன் |
குமரன் | என்றும் இளைஞன் |
குகன் | மனமாகிற குகையில் உறைகின்றவன் (எல்லார் இதயத்திலும் இருக்கின்றான் ஆனால் வெளிப்பட மாட்டான், வெளிப்பார்வை நீக்கி உள்முகமாக த்யானம் செய்பவருக்கு அல்லாமல்) |
அறுமுகன் | ஆறு முகங்கள் உடையவன் |
ஒரு பது ஒடு இரு புயன் | பத்தோடு இரண்டு அதாவது பன்னிரண்டு (புஜங்கள்) தோள்கள் உடையவன் |
பகை ஆம் மாந்தர்கள் | தன்னைப் பகைத்து எதிர்ப்பவர்களுக்கு |
அந்தகன் | எமன் போன்றவன் (அழித்து விடுவான்) |
அடல் மிகு | மிகுந்த வலிமை உடைய |
கட தட விகடித களிறு | மத நீர் ஒழுகும் வேடிக்கை விநோதம் மிகுந்த ஆனை முக விநாயகர் |
அனவரதமும் அகலாமாந்தர்கள் | எப்போதும் மனதை விட்டு நீங்காதவர்கள் |
சிந்தையில் வாழ்வாம்படி | மனதில் பெறும் பேறு (பாக்கியம்) ஆக |
செந்திலில் அதிபதி என வரு | திருச்செந்தூர் ஆண்டவனாக வந்து |
பொரு திறல் முருகனை | போர்த்திறமையில் வல்ல (சூரன் முதலியோரை வெற்றி கொண்ட) முருகப்பெருமானை |
அருள் பட மொழிபவர் | அவர் அருள் புரியுமாறு அவர்தம் பெருமை கூறுவார்கள்; |
ஆராய்ந்து வணங்குவர் | மிகுந்த சிரத்தையோடு தொழுபவர்கள் |
தேவேந்திர சங்கமே | தேவேரந்திரனுடைய உலகத்தைச் சேர்ந்தவராவார்கள் |
Comments
Post a Comment