நரையொடு பல் கழன்று | வயோதிகத்தால் முடிகள் வெளுத்தும், பற்களும் விழுந்து, |
தோல் வற்றி | தோலும் எண்ணெயின்றி வற்றிச் சுருக்கம் எடுத்து |
நடை அற மெத்த நொந்து கால் எய்த்து | நடக்கமுடியாது முடங்கிப் போய் கால்கள் வலி மிகுந்துக களைத்து விட |
நயனம் இருட்டி நின்று | கண்கள் ஒள் இழந்து பார்வை போய் |
கோல் உற்று நடை தோயா | கையில் கம்பு ஒன்று துணையாகி, (பழைய கம்பீர) நடை தொய்ந்து/ தளர்ந்து போய்விட |
நழுவும் விடக்கை | நாள் தோறும் நம் கைப்பிடியில் இருந்து தப்பி ஓடும் (நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்) இந்த மாமிச உடலை |
ஒன்று போல் வைத்து | அப்படி நேராமல் ஒரேபோல் (இளமையாக) வைக்க முயன்று |
நமது என மெத்த வாழ்வு உற்று | என்னுடையது என்று அபிமானித்த தேகமும் சேர்த்த செல்வங்களுமாக வாழ்ந்து, |
பின் நடலை படுத்தும் இந்த மாயத்தை | இயலாமையால் துன்பப்படும் இந்த மாயையான / நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை |
நகையாதே | நம்பி ஏமாறாமல் இதன் நிலையாமை கண்டு இது வெறும் விளையாட்டு என்று இகழாமல் (மெய் என்று எண்ணி) |
விரையொடு பற்றி | நல்ல தேன் உண்டு மலரின் மணத்துடன் |
வண்டு பாடுற்ற | தேனுண்ட களிப்பில் வண்டுகள் ரீங்காரமாய் வட்டமிடும் |
மிருக மதம் அப்பி வந்த ஓதிக்கும் | கஸ்தூரி பூசிய (மனதை மயக்கும் மணமுடைய) கூந்தலையும் |
மிளிரும் மையைச் செறிந்த | ஒளி பொருந்திய, மை இட்ட |
வேல் கண்கும் | வேலைப் போன்று அகன்றும் நுனியில் கூரியவையுமான கண்களையும் |
வினையோடு | மனதில் கபடத்தோடு |
மிகு கவின் இட்டு | மிகவும் அழகு செய்து கொண்டு |
நின்ற மாதர்க்கு | தெருவில் வந்து நிற்கும் விலை மாதர்கள் |
இடை படு சித்தம் ஒன்றுவேன் | நடுவே மனம் லயிக்கப்பெறும் நான் |
உற்று உன் விழுமிய | அவற்றில் மனம் செலுத்தி மேலான உன் |
பொன் பாதங்கள் பாடல்கு | பொன் போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடுவதற்கு |
வினவாதோ | முனையும்படிச் செய்வாயா |
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் | பொருளும் சொல்லும் நன்கு அறிந்த (சொற்களை அழகுறப் பொருள் படுமாறு கவி புனையும் திறன் உடைய) திருமுறைகள் அளித்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் |
ஒளி பெற | மிகுந்த புகழைப் பெறும் வண்ணம்/(ஞானம் அடையும்படி) |
நல் பதங்கள் போதித்தும் | அந்த மூவருக்கும் தானே தன் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்ததோடு, பாடல் முதலடியும் எடுத்துக் கொடுத்து ( திரு நாவுக்கரசரை சமணமதத்தில் இருந்து சூலை கொடுத்து மீட்டார். "கூற்று ஆயினவாறு" முதல் பாடலுக்கு முன் அவர் பாடியதே இல்லை. சம்பந்தரை 2 1/2 வயதில் உமை அன்னையின் பாலைக்கொடுத்து " தோடு உடைய செவியன்- என் உள்ளம் கவர் கள்வன்" என அக்குழந்தையைப்பாட வைத்தார். சுந்தரரை திருநாவலூரில் திருமணப்பந்தலில் ஓலை காட்டித் தடுத்து ஆட்கொண்டு, திருவெண்ணெய் நல்லூர் அருள் துறையில், அவர் தன்னைக்கூறிய வசைச்சொல்லான "பித்தா" என்றே தொடங்கப்பணித்தார்.) |
ஒரு புடை | தன் இடப்பக்கத்தில் |
பச்சை நங்கையோடு உற்று | பச்சை நிறத்து மங்கையான உமையோடு சேர்ந்து |
உறுபலி கொண்டு போய் உற்றும் | வீடு தோறும் பிச்சை ஏற்றுத் திரிந்தும் |
உவரி விடத்தை உண்டு சாதித்தும் | கடலில் (அமிர்தத்தை வேண்டி பால் கடலை தேவர் -அசுரர் கடைந்தபோது முதலில்) வந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு சாகாமல் வாழ்ந்து காட்டித்தன்னை நிலை நிறுத்தியும் |
உலவிய முப்புரங்கள் வேவித்தும்= | நில்லாமல் சஞ்சரிக்கக்கூடிய மூன்று மதில்களையும் ஒரே அம்பு எய்தி ஒரே சமயத்தில் அழிந்து போகும்படி எரித்தும் |
உறநாகம் அரையொடு கட்டி | தாருகா வனத்து ரிஷிகள் ஏவிய கொடிய விஷ நாகத்தை அடக்கித்தன் இடுப்பில் கட்டிக்கொண்டு |
அந்தமாய் வைத்தும் | அதையே தனக்கு அலங்காரமாக்கியும் |
அவிர்சடை வைத்த கங்கையொடு ஒக்க | விரிந்த தன் ஜடையில் தேவநதி கங்கையோடுகூட |
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் | அதை முடிந்து அழகாக அதன் மேல் பிறைச்சந்திரனையும் சூடி |
அரவு ஓடே அறுகு ஒடு நொச்சி தும்பை மேல் வைத்த | அங்கும் ஒருபாம்பும் அருகம்புல், நொச்சி, தும்பைப்பூ என்று எளிதில் எங்கும் கிடைக்கும் புல், இலை, பூ இவை சூட்டிக்கொள்ளும் (பரம வைராகி யான) |
அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் | (செல்வத்துக்கு அதிதேவதை லக்ஷமியின் கணவரான) திருமாலும் (கல்விக்கு அதிதேவதையான சரஸ்வதியின் கணவர்) பிரம்மாவும் தினமும் வந்து வழிபாடு செய்யும் |
அரன் நிமலர்க்கு | குற்றமே அணுகாத தூயவரான பரம சிவனுக்கு |
நன்றி போதித்த | நல்ல உயர்ந்த தத்துவங்களை உபதேசித்த |
பெருமாளே | எங்கள் பிரானே. |
Comments
Post a Comment