பாலோ தேனோ

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link paalO thenO

பாலோ தேனோஇதன் இனிமை பாலை ஒத்ததோ அல்லது தேனையோ
பலவு உறு சுளை அது தானோஅல்ல அல்ல பலாப்பழத்தின் சுளையையோ
வானோர் அமுதுகொல்இல்லை இல்லை இவ்வுலகத்துப் பொருள்களே அல்ல, தேவர்கள் உண்ணும் அமுதம் தான் ஒக்கும்,
கழை ரச பாகோ ஒருவேளை கரும்பின் சாற்றிலிருந்து எடுத்த சர்க்கரையின் பாகு எனலாமோ
ஊனோடு உருகிய மகன் உணதன் உடல் தசையும் உருகிவிடுகிறாற்போல வருந்தி அழுத திரு ஞான சம்பந்தக் குழந்தைக்குப் பசியாறும்படி
அருள் ஞானப் பாலோஉருகி சீர்காழிப்பதியில் அன்று உமை அன்னை கொடுத்தருளிய அவள் தன் திருமுலையில் ஊறிய ஞானப்பாலைக் கூறினாலும் தகுமோ
வேறோ மொழி எனஇல்லை அதைவிட மேலான ஒன்றோ என்னும்படியான இனிய சொல்லும்
அடு கொடு தாக்குகின்ற கொடுமையான
வேலோகூரிய வேல் படையோ
கோலோஅம்பு தானோ
விழி என இந்தப்பாய்கின்ற கூர்மையான விழிகள் என்றும்
முகம் அது (ஒளி பொருந்திய) இந்த முகம்
பானோ சூரியனைப்போன்றது எனலாமோ
வான் ஊர் நிலவு கொல்இல்லை (அது சுடும், கண்ணைக் கூசச்செய்யும்) மாலை வானில் மெள்ள ஊர்ந்து வரும் நிலவுக்கு ஒப்பிடலாம்
என மகள் மகிழ்வேனை என்றெல்லாம் பெண்மக்கள் அழகில், அனுபவத்தில் இதுவே சுகம் என்று திளைக்கும் ( மூடனான) நான்
நாலு ஆம் ரூபாநானாவித வடிவங்கள் எடுப்பவனே
கமல ஷண்முக ஒளி உனது ஓராறு முகத்தாமரைகளின் அழகு ஒளி
ஏதோ, மா தோம் எனது அகம் எதுவோ அது, குற்றங்கள் மிகுந்த என் இதயத்தில் ஒளி வீச
வளரொளி நானோ நீயோஉன் அருளால் குற்றங்கள் நீங்கி ஒளியாய் பிரகாசிக்கும் 'நானோ அல்லது நீயோ' என்று பிரித்துக் கூற முடியாத அது
படிகமொடு ஒளிரிடம் பளிங்கு (ஸ்படிகம்) போலான என் மனத்தில் பிரகாசிக்க
அது சோதி இப்போது, இந்த ஜோதி, நீ அற நான் அற, நீ இன்றி நான் இன்றி, நீ வேறு எனாதிருக்க நான் வேறு எனாது இருக்க என்ற இந்த நிலை
நாடோ திருநாடாகிய ஸ்வர்கமோ
வீடோ முக்தி என்கிற மோட்சமோ
நடு மொழி பாரபட்சம் இல்லாமல் நடு நிலையில் இருந்து சொல்வாயாக ('காமம் செப்பாது கண்டது மொழிமோ' என்று சொக்கநாதர் தருமிக்குக் கொடுத்த பாடலில் கூறியவாறும்)
என என்று நான் உன்னோடு சல்லாபம் செய்யவும்
நடு தூண் நேர் தாங்கிப்பிடிக்க பூமியில் நடப்படும் தூணைப்போன்ற உறுதியான தோளை உடையவனே (விதௌக்லுப்ததண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான் / நிரஸ்தேப சுண்டான் த்விஷத் கால தண்டான்/ ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத்ராண சௌண்டான் / ஸதா தே ப்ரசண்டான் ச்ரயே பாஹூ தண்டான் - ஆதி சங்கரரின் சுப்ரமணிய புஜங்கம்) )
சுர முக கன சபை நாதா தேவர்கள் முதலியோர் கூடும் அரங்கிற்குத் தலைமையில் வீற்றிருப்பவனே
தாதா (दाता) கொடை வள்ளலே
என உருகிட அருள் புரிவாயே என்றெல்லாம் உன்னைப் போற்றிப் புகழ்ந்து உன் அன்பிலே திளைத்து உருகுகின்ற நிலை தந்துஎனக்கு அருள் செய்வாய் (முருகா)
மாலாய் வானோர் மலர் மழை பொழி தேவர்கள் மிகுந்த அன்போடு புஷ்பங்களை வர்ஷிக்க
அவதாரா பூமியில் இறங்கி வந்தவனே
சூரா என இவனல்லவோ மஹா வீரன் என்று
முனிவர்கள் புகழ் மாயா ரூபா தவம் உடைய முனிவர்கள் கொண்டாடும் யாவர்க்கும் புலப்படாத ஆச்சர்யமான வடிவு கொண்டவனே!
அரகர சிவ சிவ ஹரஹரா சிவ சிவா என்று
என ஓதா உன் தந்தையைப் போற்றி வணங்காத
வாதாடு ஊரோடுசண்டை இடுகின்ற அவர்களைச் சேர்ந்தவர்களும் (துணை போனவர்கள்)
அவுணர் ஒடு அந்த சூரபத்மன் முதலிய அசுரர்களும்
கடல் அவன் ஒளிவதற்கு இடமான கடலும்
கோ கோ கோ கோ என கூக்குரல் இடும்படியாகவும்
மலை வெடி படஅவன் ஒளிந்திருந்த க்ரௌஞ்ச மலையும் பிளந்து தூளாகவும்
வாளால் வேலால் (புகழ்பெற்ற) வாள் (துணைவரான வீரபாஹூத் தேவருடைய) மற்றும் உன் வேல் ஆயுதத்தால் மடிவு செய்து அருளிய= அனைத்து அசுரர்களையும் கொன்று முடித்த
முருகோனே அழகு படைத்தவனே,
சூலாள் திரிசூலி என்று சூல் ஆயுதம் தாங்கிய
மாலாள்பெரிய நாயகியும்
மலர்மகள்திருமகளாம் லக்ஷ்மியும்
கலைமகள்கல்வியின் தலைவி சரஸ்வதியும்
ஓது ஆர் சீராள்வருணித்துப் போற்றும் புகழ் உடையவளும்
கதிர் மதி குலவிய தோடாள்ஒரு (வல) காதில் சூரியனும் ஓர் காதில் (இட) சந்திரனும் தோடுகளாய் அமைந்தவளும்
கோடு ஆர் மலைகளை ஒத்த
இணை முலை இரு திருத்தனங்கள் பெற்றவளும்
குமரி என்றும் கன்னிகையானவள் (அழகி என்றும் பொருள்)
முன் அருள் பாலாமுன்பு பெற்ற குழந்தையே
தூயார் மனத்தூய்மை உள்ளவர்களும்
ஆயார் நல்ல நூல் ஆய்ந்தவர்களும் (விஷயம் தெரிந்தவர்களும்)
இது சுக சிவபத வாழ்வாம்இந்த இடம் சிவபதம் எனும் கயிலாயத்தில் வாழ்வதற்குச் சமம்
ஈனே வதிவம்இங்கேயே வசிப்போம்
எனும் உணர்வொடு சூழ் என்னும் எண்ணத்தோடு வந்து கூடுகின்ற (திருவாரூர்ப்பிறந்தார் அனைவர்க்கும் அடியேன் என்பார் சுந்தர மூர்த்தி நாயனார். காரணம் அவ்வூர் வாசிகள் எல்லாம் தம் சிவ கணங்களே என்று திருச்சாத்த மங்கை திரு நீல நக்க நாயனாருக்கு சிவபெருமானே உணர்த்தினார்.)
சீர் ஆரூர் மருவிய புகழ் பெற்ற திருவாரூர் தலத்தில் வந்து குடி இருக்கின்ற
இமையவர் பெருமாளேதேவர்கள் தலைவனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே