திடமிலி சற்குணமிலி—பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link thidamili saRguNamili

திடம் இலி நல்ல மன உறுதி இல்லாதவன்; இருந்தால் அன்றோ வலிமையான புலன்களை அடக்க முடியும்!
சத் குணம் இலிநல்ல குணங்கள், பகவத்கீதையில் "தெய்வீ சம்பத்" என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் வர்ணிக்கும் பொறுமை, கருணை, ஈகை போன்ற நல்ல பண்புகளில் ஒன்று கூட இல்லாதவன்
நல் திறம் இலிவேறு ஏதாவது செயல் திறம், சாமர்த்தியம், கலை என்று ஏதாவது உண்டோ என்றால் "இல்லை" தான் பதில்
அற்புதமான செயல் இலிபிறரால் செய்ய முடியாத அரிய காரியம் ஏதாவது செய்து இருக்கிறேனோ என்றால், அதுவும் இல்லை
மெய்த்தவம் இலிஉண்மையாக மனதை உன்னிடத்தில் செலுத்தித் தவம் செய்திருக்கிறேனோ என்று கேட்டால், அப்படிப் பாசாங்கு வேண்டுமானால் செய்திருக்கிறேன்
நல் செபம் இலிமனம் ஒருமித்து உன் திருநாமமோ, வேறு மந்திரச்சொற்களையோ ஜபித்து இருக்கிறேனோ என்று பார்த்தால், இல்லை தான் பதில்.
சொர்க்கமும் மீதே இடமிலிஎனவே, இப்படிப்பட்ட எனக்கு மேலான சொர்க்க லோகத்தில் இடம் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை.
கைக் கொடை இலிகர்ணனைப் போல உடம்பில் இருந்து கவச குண்டலங்களை அறுத்துக் கொடுப்பது இருக்கட்டும், கையில் இருப்பதைக்கூடத் தேவை என்று கேட்பவருக்குக் கொடுத்து அறியாத கருமி,
சொல்கு இயல்பு இலிபொருள் அறிந்து சொற்களை அழகாகக் கோர்த்து கவி இயற்றும் திறமை இல்லை என்னிடம்
நல் தமிழ் பாடஉன்னைத்தமிழால் அழகுறப் போற்றிப் பாடுவதற்கு
இருபதம் உற்று(இவை எல்லாம், இந்தக்குறைகளே என்னிடம் நிறைந்து இருந்த போதும், ஐயனே) உன் பொன்னார் இணை அடிகளைச் சேர்ந்து
இருவினை அற்றுநல்வினை (புண்ணியம்), தீய வினை (பாபம்) இவற்றைத் தொலைத்து, கடந்து சென்று
இயல் கதியைஆத்மாவின் இயல்பான நிலையை (கர்மம், மாயை அகங்காரம் அகன்ற முக்தி)
பெற வேண்டும்நானும் அடைந்து விட விழைகிறேன். (அது எப்படிச் சாத்தியம் என்பாயேல்)
கெடு மதி உற்றிடும் தீய புத்தி கொண்ட
அசுரக்கிளை மடியஅரக்கர்கள் கூட்டம் முழுதும் இறந்து படுமாறு
பொரும் வேலாபோர் செய்த வேல் வீரனே!
கிரண குறைப் பிறைகலைகள் குறைவான (16ல் இரண்டே கலை உள்ள இரண்டாம்) பிறைச் சந்திரனையும்,
அறுகுஎங்கும் காலின் கீழ் முளைத்து இருக்கும் அருகம்புல்,
அக்கு(எத்தனையோ கல்பங்களில் மடிந்த பிரம்மாதி தேவர்களின்) எலும்பு (அல்லது ருத்திராக்ஷம் என்றும் கொள்ளலாம்)
இதழ்வில்வ இலை
மலர்(வேறு தெய்வங்கள் சூடிக் கொள்ளாத எளிமையான) கொன்றை மலர்
கொக்கிறகுகொக்கின் இறகு (கொக்கிறகு என்பது கொக்கின் இறகை ஒத்த மலரை உடைய ஒரு தாவரம் என்றும் பல இடங்களில் வருகிறது). இப்படிக் குறைகள் உடைய எவரும் நாடாத பொருட்களை
படர் சடையில் புனை (மேலே முடியப்பட்டுக் கீழே) விரிந்திருக்கும் தன் சடாமுடியில் அணிந்து கொண்டு
நடனப் பரமர்ஆனந்த நடனம் புரியும் பரமசிவனுக்கு
ஒரு பாலாஒப்பற்றதொரு புதல்வன் அல்லவா நீ (எனவே என் குறைகளைப் பாராது, பாராட்டாது உன் திருப்பாதங்களில் ஏற்றுக்கொள்வாய் என்பதில் எனக்கு நம்பிக்கை)
பல வயலில்அங்குள்ள வயல்கள் பலவற்றில்
தரள(ம்) நிறைமுத்துக்கள் நிறைந்துள்ள (நீர் வளம் மிகுந்த)
பழனி மலைப் பெருமாளே= பழநி மலையில் குடி கண்டுள்ள எம் ஐயனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே