ஆதிமூலமே என்று கஜேந்திரன் அலறிய பொழுது ....

To read the story in English, click Story of Gajendra and Lord Vishnu

பாற்கடலால் சூழப்பட்ட பர்வதம் த்ரிகூடம். அம்மலையின் அடிவாரத்தில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற ஒரு அழகிய தோட்டம். அதன் அருகில் மிக அழகிய குளம். அங்கு கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் பெண் யானைகளுடனும் குட்டிகளுடனும் வசித்து வந்தது.

முற்பிறவியில் அந்த யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது காண வந்த அகத்திய முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், தன்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்தலால் மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே அருளி, ஸ்ரீமந் நாராயணனே அவன் சாபத்தை தீர்ப்பார் என்று வரம் கொடுத்தார்.

இதே போல் முதலையும் முற்பிறவியில் ஹூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்குக் கால் கழுவ வருபவர்களின் விளையாட்டாக காலைப் பற்றி இழுப்பான். ஒரு சமயம் ஒற்றைக் காலால் தவம் செய்துகொண்டு இருந்த தேவலர் என்ற முனிவர் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் வெகுண்டு அவனுக்குத் தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாபவிமோசனம் வேண்ட, மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு அவனுக்குச் சாபவிமோசனம் ஏற்படும் என்றார்.

ஒரு நாள் தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பறிக்கப் பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக்கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுத்தது. கஜேந்திரன் தன்னை தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் மணிகணக்காக போராடியது. இறுதியில் மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதிமூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்து பூரண சரணாகதியுடன் "ஆதிமூலமே" என்று அலறினான். அடுத்த கணமே கருடன் மேல் ஆரோகணித்துக் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்தான் பக்தவத்சலனான மஹா விஷ்ணு.

பூரண சரணாகதியை விளக்குவதே இந்தக் கஜேந்திர மோக்ஷம். உலக இன்பமாகிய மலர்களை பறிக்க இறங்கிய யானை கஜேந்திரனை உலக பற்றும் கர்ம வினைகளுமாகிய முதலை பற்றிக் கொண்டு முக்தி அடைய முடியாமல் தடுக்கின்றது. சரணாகதி அடைந்த ஜீவாத்மாவான கஜேந்திரனுக்கு மோக்ஷம் அருள விரும்பும் பரம்பொருள் உலக பற்றாகிய முதலையை அழித்து மறைத்து இன்பமாகிய வீட்டை அருளுகிறது .

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே