திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான கூடல்மாநகராம் மதுரையில் நிகழ்த்திய 64 அற்புத லீலைகளைப் பற்றிக் கூறும் நூலாகும். இறைவனார் உலக உயிரிகளிடத்து அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் செய்த கருணையை இந்நூலில் வரும் கதைகள் அழகாக விவரிக்கின்றன. இது வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலிலிருந்து பரஞ்சோதி முனிவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஒன்று. திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய் காண்டம் என்று மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கி.பி.16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

திருவிளையாடல் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் (பெரிய புராணத்தில் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறுதொண்டராகிய பரஞ்சோதியார் அல்ல) வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன். தந்தையிடம் சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயின்று, திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், புனித யாத்திரை மேற்கொண்டு, மதுரைக்கு வந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் 64 படலங்களைக் கொண்ட 3363 செய்யுள்களாக வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம்.

சிவபெருமானிடம் உபதேசம் பெற்று தெளிந்த நந்திஎம்பெருமான் அதனை சனகர் குமாரருக்கு உணர்த்த, அவரும் அன்போடு அதை ஆய்ந்து வியாசனுக்கு உணர்த்தினர். வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவர்க்கு பதினெட்டு புராணங்களாக எடுத்துரைத்தார். சிறப்பு மிகுந்த இந்த இவ்வடநூல் தன்னை தமிழில் சொல்ல வேண்டுமெனப் பெரியோர் கூறினர். அதனால் ஈச சங்கிதை, சங்கர சங்கிதை என்ற வடநூலில் உள்ளதை மொழிபெயர்த்துத் தமிழில் பாடுகிறேன் என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் கூறுகிறார்.

தமிழ் மொழியில் உள்ள புராணங்களுள் மூன்றினை சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றுகின்றனர். சேக்கிழாரின் பெரியபுராணம் சிவனின் வலக்கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் சிவனின் நெற்றிக் கண்ணுடன் போற்றி சிறப்பிக்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே