நாதம் அர்ப்பணமாகும் போது — அருணகிரிநாதரின் திருப்புகழில் நாத யோகம்
திருப்புகழ் — நாதத்தின் வழி திருப்புகழை வெறும் இலக்கியமாக மட்டும் அணுக முடியாது. அதை கவிதையாக ரசிக்கலாம்; இசையாகப் பாடலாம்; முருகப் பக்தியின் உச்ச வெளிப்பாடாக அனுபவிக்கலாம். ஆனால் அதை முழு மனதுடன் தொடர்ந்து பாடுபவர்கள் ஒரு கட்டத்தில் வேறொரு அனுபவத்தை உணரத் தொடங்குகிறார்கள். பாடல் மெதுவாக உள்ளே நகர்கிறது. மூச்சின் ஓட்டம் மாறுகிறது. எண்ணங்கள் தளர்கின்றன. கால உணர்வு மங்குகிறது. வெளியில் உச்சரிக்கப்படும் சொல், உள்ளத்தில் இயங்கும் அதிர்வாக மாறுகிறது. அங்கேதான் நாத யோகம் தொடங்குகிறது. “நாத விந்து கலாதி நமோ நம” என்று தொடங்கும் திருப்புகழ். நாதம், விந்து, கலை — படைப்பின் காரண நிலைகள். नादो बिन्दुः कलाश्चैव सृष्टेः कारणमुच्यते।