நாதம் அர்ப்பணமாகும் போது — அருணகிரிநாதரின் திருப்புகழில் நாத யோகம்

திருப்புகழ் — நாதத்தின் வழி

திருப்புகழை வெறும் இலக்கியமாக மட்டும் அணுக முடியாது. அதை கவிதையாக ரசிக்கலாம்; இசையாகப் பாடலாம்; முருகப் பக்தியின் உச்ச வெளிப்பாடாக அனுபவிக்கலாம். ஆனால் அதை முழு மனதுடன் தொடர்ந்து பாடுபவர்கள் ஒரு கட்டத்தில் வேறொரு அனுபவத்தை உணரத் தொடங்குகிறார்கள். பாடல் மெதுவாக உள்ளே நகர்கிறது. மூச்சின் ஓட்டம் மாறுகிறது. எண்ணங்கள் தளர்கின்றன. கால உணர்வு மங்குகிறது. வெளியில் உச்சரிக்கப்படும் சொல், உள்ளத்தில் இயங்கும் அதிர்வாக மாறுகிறது. அங்கேதான் நாத யோகம் தொடங்குகிறது.

“நாத விந்து கலாதி நமோ நம” என்று தொடங்கும் திருப்புகழ்.
நாதம், விந்து, கலை — படைப்பின் காரண நிலைகள்.
नादो बिन्दुः कलाश्चैव सृष्टेः कारणमुच्यते।

ஆனால் அருணகிரிநாதர் இவற்றை விளக்குவதில்லை; வணங்குகிறார்.
நாதம், விந்து, கலை ஆகியவற்றின் காரணனையும், அதற்கு அப்பாற்பட்டவரையும் வணங்குகிறார்.

நாதம் இசைச் சப்தம் அல்ல. அது பிரபஞ்சத் தோற்றத்தின் முதல் அதிர்வு.
விந்து அதன் சுருங்கிய மையம்.
கலை அதன் விரிவு சக்தி.

நாதத்தை முன் நிறுத்தினால்:
நாதம் — அதிர்வின் தொடக்கம்.
விந்து — அதிர்வு சுருங்கி நிற்கும் மையம்.
கலை — மையத்திலிருந்து விரியும் செயற்பாடு.

விந்துவை முன் நிறுத்தினால்:
அமைதியில் மறைந்திருக்கும் மையம் விந்து.
அந்த அமைதியில் எழும் முதல் அலை நாதம்.
அந்த அலை உலகமாக விரியும் கலை.

இவ்வாறு அமைதியிலிருந்து நாதம், நாதத்திலிருந்து உலகம் — படைப்பு விரிகிறது.

உலகத்திலிருந்து நாதத்திற்கான உள் திரும்புதல்

பக்தனின் அனுபவத்தில் இந்த ஓட்டம் மாறுகிறது. அவன் உலகத்திலிருந்து தொடங்குகிறான். சொல் வழியாக நாதத்தை அடைகிறான். ராகம் மனதை ஈர்க்கிறது; அர்த்தம் உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது.

தொடர்ந்து பாடும்போது ஒலி வெறும் கேட்கப்படும் சப்தமாக இருக்காது; அது உடல்–மூச்சு முழுவதும் உணரப்படும் நாத அதிர்வாக மாறுகிறது.

அந்த அதிர்வு மனத்தின் வெளிப்புற பரவலைக் குறைத்து கவனத்தை மையப்படுத்துகிறது. இவ்வாறு சுருங்கும் உள் திரும்புதலே விந்து போன்ற நிலை. அங்கே ‘நான் பாடுகிறேன்’ என்ற முயற்சி தளர்கிறது. நாதம் தன் மூல அமைதிக்குள் கரைகிறது.

உலகம் நாதமாக வெளிப்பட்டது மட்டுமல்ல; நாதமாகவே அதே மூலத்திற்குத் திரும்பிச் செல்லும் பாதையும் அதிலேயே மறைந்துள்ளது என்பதே அனுபவமாகிறது.

நாத பிரபஞ்சம்

படைப்பு கட்டப்பட்ட ஒன்று அல்ல. அது உச்சரிக்கப்பட்டது. எழுத்துகள் மொழியாக மட்டும் இல்லாமல் பிரபஞ்ச வடிவங்களாக விரிகின்றன என்பதை அருணகிரிநாதர் பல இடங்களில் உணர்த்துகிறார்.
“ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் வெகுரூப…”

இங்கே கவிஞன் உலகத்தைப் பகுதிகளாகப் பார்க்கவில்லை. பஞ்சபூதங்கள், பல சமயங்கள், மந்திரங்கள், வேதங்கள், புராணங்கள், கலைகள் — இவைகளோடு மொழியின் ஐம்பத்தோர் எழுத்துகளையும் ஒரே ஓட்டத்தில் இணைக்கிறார்.

அண்டத்தில் சுழலும் சூரிய–சந்திர இயக்கமும், உயிரில் தானாக ஓடும் அசபை நாதமும் ஒரே மூல அதிர்வின் வெளிப்பாடுகள்:

“சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம…”

அண்டத்தில் சுழலும் சூரிய–சந்திர இயக்கமும், உயிரில் தானாக ஓடும் அசபை நாதமும் ஒரே மூல அதிர்வின் வெளிப்பாடுகள்:

அந்த அனுபவம் இறுதியில் சிவயோகமாக நிறைவடைகிறது — தனி உயிர் அழிந்து போகாமல், தன் தனித்தன்மையை இழக்காமல், பரம்பொருளின் முழுமை உணர்வில் தன்னை உணரும் நிலை.

“சம்ப்ரதாயமொ டேயு நெறியது பெறுவேனோ”
என்று குரு சம்பிரதாயத்தில் அருளால் கிடைக்கும் மார்க்கத்தையே அவர் ேண்டுகிறார்.

நாதம் – வெளிப்புற ஒலி மட்டும் அல்ல, உள்ளார்ந்த அதிர்வும்

நாதம் என்று சொன்னால் பலர் நினைப்பது இயற்கையில் கேட்கும் வெளிப்புற ஒலிகளை — காற்றின் சலசலப்பு, நீரின் ஓசை, இசை, மந்திர உச்சரிப்பு போன்றவற்றை. ஆனால் நாத யோகப் பார்வையில் நாதம் இவ்வளவிலேயே முடிவதில்லை. உடலிலும் மனத்திலும் நிகழும் நுண்ணிய அதிர்வுகளும் நாதமாகவே கருதப்படுகின்றன. சுவாசத்தின் ஓட்டம், இதயத் துடிப்பு, மனத்தின் அலைச்சல், மேலும் தியானத்தில் உணரப்படும் உள்ளார்ந்த நுண் ஒலிகள் — இவையும் அந்த ஒரே அதிர்வின் வெளிப்பாடுகளே.

இந்த பரந்த நாதத் தத்துவத்தை திருப்புகழில் அருணகிரிநாதர் மிகச் சுருக்கமாகச் சுட்டுகிறார். “தொல்லைமுதல்” திருப்புகழில் அருணகிரிநாதர் “பல்லபல நாதங்கள்” என்று சொல்லும்போது, அது வெளிப்புற ஒலிகளை மட்டுமே குறிக்கவில்லை. அதே அதிர்வுத்தான் பசு, பாசம், மொழி, இசை, உயிர் ஆகிய அனைத்தாக வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாடுகளின் அடித்தளமாகவே அவர் “அந்தமில்லா சொரூப ஆனந்த பெளவம்” என்று இறைவனைச் சுட்டுகிறார். இறுதியில் அவர் வேண்டுவது மிகத் தெளிவு: “பெளவம் உறவே நின்றது அருள்வாயே” — நீ நிலைபெற்றிருக்கும் அந்த ஆதிமூல ஆனந்த நிலையை எனக்கும் அருள்வாயாக. நாத யோகம் இவ்வாறு ஒலியைத் தாண்டி, உயிரின் அடிப்படை ஆனந்த ஆதாரத்தை உணர்வதற்கான உள்வழியாக மாறுகிறது.

சப்தாத்வா மற்றும் அர்த்தாத்வா — வெளிப்பாட்டின் இரு பாதைகள்

“adhvan” என்பது பாதை, விரிவு. அத்துவா என்பது பரம்பொருள் மௌன நிலையிலிருந்து ஒலி, அர்த்தம், வடிவு, உலக அனுபவம் என படிப்படியாக வெளிப்படும் பாதைகள். சைவ ஆகமங்கள் படைப்பை இரண்டு அத்துவாக்களாக விவரிக்கின்றன — சப்தாத்வா மற்றும் அர்த்தாத்வா.

சப்தாத்வா: வர்ணம், பதம், மந்திரம் என ஒலி விரிகிறது;
பரா அமைதி → நாதம் → வர்ணம் → பதம் → மந்திரம்.

அர்த்தாத்வா: தத்துவம், புவனம் என பொருள் விரிகிறது.
தத்துவம் → புவனம் → கலை.

ஒலி/சொல் மற்றும் பொருள் இரண்டல்ல. வெளிப்பாட்டின் இரண்டு நிலைகள். பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதியிலிருந்து ஒலியாகி, ஒலியிலிருந்து வடிவாகும் படைப்பின் முதற்படிகளை மீண்டும் நிகழ்த்துகிறது.

திருப்புகழ் பாடப்படும் போது இதே பயணம் மனிதனுக்குள் நிகழ்கிறது. “அகர முதலென ஐம்பத்தோர் அக்ஷரமும்” என்று அருணகிரிநாதர் பாடும்போது, அது ஒலியில் உறையும் பிரபஞ்ச வடிவத்தைச் சுட்டுகிறது. அக்ஷரங்கள் சொற்களாகின்றன; சொற்கள் மந்திரமாகின்றன; மந்திரங்களில் இருந்து தத்துவங்கள் தோன்றுகின்றன; அவற்றிலிருந்து உலகங்களும் அனுபவங்களும் உருவாகின்றன.

அபிராமி அந்தாதியில் கூறப்படும் சொல்லும் பொருளும் போல, ஒலியும் அர்த்தமும் இருப்பின் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். பேசும் ஒவ்வொரு சொல்லும் படைப்பின் முதற்படிகளை மீண்டும் நிகழ்த்துகிறது — அமைதியிலிருந்து ஒலி, ஒலியிலிருந்து வடிவு.

திருப்புகழ் பக்தியோடு பாடப்படும் போது அதே பயணம் மனிதனுக்குள் நிகழ்கிறது. அமைதி எழுத்துக்குள் எழுகிறது. எழுத்து ஸ்தோத்திரமாகிறது. ஸ்தோத்திரம் லயமாகிறது. லயம் அநுக்கிரகத்திற்கு வழி வகுக்கிறது.

அருணகிரிநாதரின் நாத யோகம் மூச்சை அடக்கும் சாதனை அல்ல. உள்ளம் அருளுக்கு திறக்கப்படும் நிலை. அங்கே திருப்புகழ் கோவிலாகிறது; மந்திரமாகிறது; மூச்சாகிறது; இறுதியில் சரணாகதியாகவே நிலைகொள்ளுகிறது.

முயற்சியின் முடிவில் முருகன் அடையப்படுவதில்லை. ஒலி தன் மூலத்தை நினைத்து அன்பாக திரும்பும் இடத்தில் அவர் ஏற்கனவே நிற்கிறார்.

“சரவணபவ” எனும் மந்திரம்

மந்திரம் பெயரிடப்பட்ட சொல் அல்ல; நாதம் உச்சரிக்கத்தக்க வடிவம் பெறும் நிலை.

அதே நாதம் யந்திரமாகும் போது, அதிர்வு கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய வடிவங்களாகத் திரள்கிறது.

கேட்கப்படும் போது மந்திரம். காணப்படும் போது யந்திரம். முருகப் பரம்பரையில் “சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரம் இதற்குச் சிறந்த சாட்சி.

ச — ர — வ — ண — ப — வ.
இந்த ஆறு எழுத்துகளும் வெறும் ஒலியல்ல; அலைபோல் நகரும் நாத நிலைகள். “ச” மென்மையாக வெளிப்படுகிறது. “ர” அதிர்வை எழுப்புகிறது. “வ” மூச்சோட்டத்தை விரிக்கிறது. “ண” உள்நாசியில் ஒலித்து சிந்தையை உள் திருப்புகிறது. “ப” மார்பக அதிர்வை எழுப்புகிறது. மறுபடியும் “வ” வெளிப்படும் ஓட்டமாக நிறைவடைகிறது. உச்சரிப்பில் மூச்சு மாறுகிறது; கவனம் மையமாகிறது; ஒலி ஒருமையிலிருந்து பலமுகங்களாகப் பிரிந்து மீண்டும் ஒருமையாகத் திரும்புகிறது. இது மூச்சடக்கம் அல்ல; நாத ஓட்டம்.

சரவணபவ என்றால் என்ன?
சரம் — தர்ப்பை.
வனம் — காடு.
பவன் — வெளிப்பட்டவன்.
சரவணபவ என்பதற்கு “நாணல் படுக்கையில் வெளிப்பட்டவன்” என்பதே பொருள்.

சித்தர்கள் நீண்ட தவத்திற்கு தர்ப்பாசனம் பயன்படுத்துவது போல, தர்ப்பை மின்சார ஓட்டத்தைத் தடுக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது. சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீவிர ஆற்றல் தர்ப்பையில் தங்கி, உலக நலனுக்காக முருகன் அவதரிக்கிறான் என்ற புராணக் காட்சி இதனைச் சுட்டுகிறது.

சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு இளம்பிள்ளைகள் ஒருமையாக முருகனாக விளங்குவது போல, இந்த ஆறு எழுத்துகளும் ஒரே நாதத்தின் ஆறு முகங்கள். மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் ஒலி ஒருமையிலிருந்து பல்வேறு முகங்களாகப் பிரிந்து மீண்டும் ஒருமையாக திரும்பும் சுழற்சி நிகழ்கிறது.

“சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரம் தனி சாதகரின் உள்ளார்ந்த அனுபவத்திற்காக மட்டும் அல்ல என்பதை அவர் தெளிவாக உணர்த்துகிறார். “சரவணபவநிதி அறுமுக குருபரா” என்று தொடங்கும் திருப்புகழில், அவர் அந்த மந்திரத்தை தன் நலனுக்காக அல்ல; உலக நலனுக்காக வேண்டுகிறார். மந்திரம் தனி முக்திக்காக அல்ல; ஒத்திசைவுக்காக.
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே

தனி உயிரின் முக்தியைத் தாண்டி உலகமே நாதத்தில் ஒத்திசைந்து அமைதியடைய வேண்டும் என்பதே அவரது உள்ளக் கண்ணோட்டம். அதனால் தான் அவர் முருகனை “குருபரா” என்று அழைக்கிறார். குருவின் அருளால் உயிர்ப்பெறும் மந்திரம் ஒருவரின் உள்ளத்தை மட்டுமல்ல; சமூகத்தின் மனோபாவத்தையும் மெதுவாக மாற்றும் சக்தியாகிறது. தனிப்பட்ட சாதனையைத் தாண்டி உலக நலனுக்கான பிரார்த்தனையாக உயர்கிறது.

மேலும்
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவ

ஷடுமை : ஆறுகோண சக்கரம்; முருகனின் யந்திரம். ஆறு அக்ஷரங்கள் அடங்கிய ஆறு கோணமாகிய யந்திரத்தின் இடையில் முருகன் ஒளிமயமாக விளங்குபவன்.

மந்திரம் ஒரு பெயர் மட்டும் அல்ல. நாதம் ஒழுங்குபெற்று விழித்தெழும் வடிவம். மனம் உருவாக்கும் சொல் அல்ல; அமைதியிலிருந்து ஒழுங்காக வெளிப்படும் அதிர்வு. அதே நாதம் வடிவமாகி காணப்படும் போது யந்திரம். கேட்கப்படும் போது மந்திரம். இரண்டிலும் மனிதன் செய்பவன் அல்ல; அதிர்வே தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்கிறது.

அசட்டு யோகத்திலிருந்து நாத யோகத்திற்கான மாற்றம்

“அனித்தமான” திருப்புகழில் அவர் ஒரு எச்சரிக்கையை முன்வைக்கிறார்:
“நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து
அவத்திலே குவால் மூலி புசித்து
வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல்…”

மூச்சைக் கட்டுப்படுத்தி உடலை வருத்தும் சாதனையில் சிக்கிக் கொள்ளும் நிலையை அவர் “அசட்டு யோகி” என்று கூறுகிறார். அதற்கு எதிராக அவர் வேண்டுவது:
“நிகழ்ச்சியா மனோதீத சிவச்சொரூப மாயோகி என ஆள்வாய்.”

மன அலைகளைத் தாண்டி சிவச்சொரூபத்தில் நிலைபெறும் யோகியாக அருளால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவரது ஏக்கம். யோகம் இங்கு கட்டுப்பாடு அல்ல; கரைவு. முயற்சியின் கடின வெற்றி அல்ல; சரணாகதியின் மென்மையான தன்னிழப்பு.

காரண–காரிய உலகத்தைத் தாண்டி ‘யான்’ கரைய வேண்டும் என்று அவர் பாடும் போது, அது தத்துவ உச்சரிப்பு அல்ல; நாதத்தில் கரையும் அனுபவம்.

அருணகிரிநாதரின் நாத யோகம் ஒரு பயிற்சி முறை அல்ல. அது அருளில் நிகழும் உள் மாற்றம். திருப்புகழ் பாடப்படும் போது பக்தன் தெய்வத்தை அழைக்கிறான் என்று மட்டும் சொல்ல முடியாது; நாதம் அவனைத் திரும்ப அழைக்கிறது. மூச்சு இசையோடு ஒத்திசைகிறது. மனம் தன் பிடியை விடுகிறது. ‘நான்’ மெதுவாக கரைகிறது.

தெய்வம் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஒலி அர்ப்பணமாகும் இடத்தில் அது வெளிப்படுகிறது.

ஒலி பக்தியாகிறது. பக்தி அமைதியாகிறது. அந்த அமைதியில் நாதம் தன் மூலத்திற்குத் திரும்புகிறது.

அந்த திரும்புதலை சாத்தியமாக்குவது — திருப்புகழ்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

ஏறுமயில்