கந்த புராணம் : பகுதி 1 A
விநாயகர் துதி
வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்துவாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை துவச
வாரணத்தானை துணைநயந்தானை வயலருணை
வாரணத்தானை திறை கொண்ட யானையை வாழ்த்துவனே
வாரணத்தானை ... ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும்,
அயனை ... பிரம்மனையும்,
விண்ணோரை ... ஏனைய தேவர்களையும்,
மலர்க் கரத்து வாரணத்தானை ... தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் (வாரணம் = சங்கு) என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும்,
மகத்து ... தட்ச யாகத்தில்,
வென்றோன் ... வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின்,
மைந்தனை ... குமாரனும்,
துவச வாரணத்தானை ... கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை,
துணை நயந்தானை ... சகோதரனாக பெற்றிருப்பவனும்,
வயல் அருணை ... வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில்,
வாரணத்தானை ... யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை,
திறை கொண்ட யானையை ... (யானைகளை) கப்பம் பெற்ற, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை,
வாழ்த்துவனே. ... வணங்குகிறேன்.
ஒரு காலத்தில் முகிலன் எனும் அரசனது கொடுமைகளால் துன்பப்பட்ட மக்கள், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயர் எனும் அருளாளரிடம் முறையிட, அவர் அருணாசலேஸ்வரரை வேண்டினார்; இறைவன் தன்னுடைய மூத்த புதல்வனாகிய யானை முகத்தானுக்கு ஆணையிட்டார். அன்றிரவே யானை வடிவாகச் சென்று முகிலனைப் பய முறுத்தினார் விநாயகர். தன் பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினான் முகிலன். கணேசமூர்த்தியும் கருணை கொண்டார். அவருக்கு திறையாக (கப்பமாக) சில யானைகளையும் அளித்தான். இதனால் திருவண்ணா மலை கோயிலில் அருளும் ஸ்ரீவிநாயகருக்கு யானைத் திறை கொண்டவர் எனும் திருப்பெயர் வந்தது.
தக்ஷன் தவம்
சிருஷ்டித் தொழிலைச் செய்ய தனக்கு உதவியாக பிரும்மா பதினொன்று மானச புத்திரர்களாகிய பிரஜாபதிகளை உருவாக்கினார். மரீசி, அத்ரி, ஆங்கீரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர், தக்ஷன் (இவர்கள் சப்த ரிஷிகள்), விஸ்வகர்மன், பிருகு, காஸ்யபர் என்பவர் 11 ப்ரஜாபதிகள். அவர்களில் தக்ஷ பிரஜாபதி என்ற தக்ஷன் ஈசனின் மீது தீவிர பக்தி கொண்டவன்.
பிரம்மாவின் அறிவுரையின் பேரில், தக்ஷன் தான் அழியாமல் இருப்பதற்காக சிவனைக் குறித்து நீண்ட தவம் செய்தான். அவன் முன்பு தோன்றிய சிவபெருமானிடமிருந்து அனைத்து அண்டங்களை ஆளும் பதவியையும் சிவபெருமானே தனக்கு மருமகனாக ஆக வேண்டும் என்ற வரத்தையும் பெறுகிறான்.
தாட்சாயிணி அவதாரம்
ஒரு முறை கயிலையில் சிவபெருமான், "சக்தியால்தான் அனைத்து உயிர்களும் இயங்குகின்றன" என்று கூறினார். இதனைக் கேட்ட பார்வதி, 'தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது' என்று பெருமைப்பட்டாள். இதை அறிந்ததும் சிவபெருமான், பார்வதியை விட்டு தனித்து நிற்க, உலகம் எந்தவித இயக்கமும் இன்றி நின்று போனது. தன் தவறை உணர்ந்த பார்வதி மன்னிப்பு வேண்டினாள்; சிவபெருமானும் பார்வதியை யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய்து வர கூறினார்.
ஆலமே புரை நிறத்ததாய் அமிழ்தினுஞ் சுவைத்தாய்
ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதி போய்
மூல மெய்யெழுத்து அன்னதோர் முதுவலம்புரியின்
கோலமாகி நோற்றிருத்தியால் உலகருள் குறிப்பால் — கந்தபுராணம் (உமை கைலை நீங்கு படலம், Song – 8515)
மேற்கண்ட வரிகளில் வலம்புரி சங்கின் தோற்றமும், அதன் உள்ளிருக்கும் வெளியும் நாதமும், 'ஓம்' என்ற பிரணவத்தை ஒத்திருக்கிறது என்கிறார்.
சிவனின் கட்டளைப்படி பார்வதி, யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது தட்சன், தன் மனைவியுடன் நதியில் நீராட வந்தான். அங்கிருந்த தாமரையில் வலம்புரி சங்கிருப்பதைக் கண்டெடுத்தான். அவன் கையில் எடுத்ததும், அது பெண் குழந்தை வடிவம் பெற்றது. அந்தக் குழந்தையை தன் பிள்ளையாக ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.
காலக்கிரமத்தில் கன்னிப் பருவம் அடைந்த தாக்ஷாயினி மனதில் ஈஸ்வரனையே பதியாக வரித்து, அனுதினமும் பூஜித்து, அவரை அடைய பல விரதங்கள் இருக்கிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தக்ஷன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் திருமணத்தன்று சிவன் முகூர்த்த நேரத்தில் மறைந்துவிட்டார். மீண்டும் ஒருமுறை வந்து தட்சன் அறியாத வண்ணம் கயிலைக்கு அழைத்துப் போனார்.
தக்ஷன் கோபம்
ஏற்கனவே தட்சனுக்கு வேதவல்லி என்ற மனைவி மூலம் ஐம்பது பெண் குழந்தைகள் இருந்தார்கள். தட்சன் பத்து பெண்களை தரும தேவனுக்கும், பதிமூன்று பெண்களை காசியபருக்கும், இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கும் மண முடித்து வைக்கிறான். சந்திரன் எல்லோரிடமும் சம அன்பு பாராட்டாமல் ரோஹிணி என்ற மனைவியிடம் மட்டும் அன்பு பாராட்டுகிறான்.
தட்சனிடம் வந்து இருபத்தாறு பெண்களும் முறையிட தட்சன் கோபம் கொண்டு மருமகனான சந்திரனைத் தேய்ந்து போகும்படி சாபமிடுகிறான். சிவபெருமானிடம் சந்திரன் சரணடைந்தான். சரணடைந்தவர்களை ஏற்றுக் கொள்வது இறைவனின் சிறந்த தத்துவம். தேய்ந்து போனாலும் மீண்டும் வளருமாறு அனுக்கிரகித்து அவனை தன் சிரசில் தரித்துக் கொண்டார். ஏற்கனவே வெறுப்புடனும் எரிச்சலுடனும் இருந்த தட்சனை இந்த நிகழ்ச்சி அதிகமாகக் கோபமடைய வைத்தது.
இருந்தும் தக்ஷன் பாசத்தின் காரணமாக மகளைப் பார்க்க கயிலை போனான். துவார பாலகர்கள் அவனைத் தடுத்தும் உள்ளே போனவனை சிவபெருமான் உட்கார்ந்தவாறே வரவேற்றார். மருமகனாக வந்தால் தன்னை வணங்குவார் என்ற எண்ணமும் மண்ணாகி விட சிவபெருமனை பரம எதிரியாக தட்சன் கருதினான்.
Comments
Post a Comment