கந்த புராணம் : பகுதி 1 B

தக்ஷன் நடத்திய யாகமும் தாக்ஷாயணி உயிர் நீத்தலும்

கோபத்தில் மதி இழந்த தக்ஷன் கயிலைவாசனை மட்டம் தட்ட எண்ணி, வேண்டுமென்றே ஒரு பெரிய வேள்வியை செய்யத் ஏற்பாடு செய்து அந்த யாகத்தில் ஈசனுக்கு அவிர்ப்பாகம் கிடையாதென்று முடிவு செய்தான். தேவர்கள் அனைவருக்கும், தன் பெண்களையும், மருமகன்களையும் யாகத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு சொல்லி அனுப்பினான். ஆனால் சிவனையும், ஸதி தேவியையும் மட்டும் அழைக்கவில்லை.

தன்னை மதியாது தட்சன் நடத்தும் யாகத்திற்கு ஈசன் செல்லவில்லை. ஆனால், தாட்சாயணிக்குத் தன் தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று தன்னையும் தன் பதியையும் மதியாது யாகம் நடத்துவது முறையல்ல என்று தன் தந்தையிடம் நியாயம் கேட்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஈசன் மறுத்தும் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயணி.

யாகசாலையில் தேவியை யாரும் மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. கணவன் தெரிவித்ததுபோல் அவமானம் ஏற்பட்டதைக் கண்டு சீற்றமடைந்த தேவி, கயிலயங்கிரி திரும்ப விரும்பாமல் அங்கேயே யாக குண்டத்தில் குதித்து தமது தேகத்தை விடுத்தாள்.

சிவன் ரௌத்ரம் : வீரபத்ரர், மகாகாளி தோன்றல்

உடலில் இருந்து உயிர் போனாலும் அக்னி அந்த புனித உடலைத் தீண்டவில்லை. இந்த நிகழ்ச்சிகளை நாரதர் கையிலையில் இருக்கும் ஈஸ்வரனுக்கு சொல்ல, ஈசன் தனது விரிசடையிலிருந்து சிறு கற்றையைப் பிடுங்கி எறிந்து தரையில் வீசினார். அதிலிருந்து வெளிப்பட்ட சிவபெருமானின் அம்சமான அகோர வீரபத்ரா் மூன்று கண்களுடனும், ஆயிரம் கைகளுடனும் தோன்றினார். உஷ்ணமான பெருமூச்சிலிருந்து மகாகாளி உதயமாயினாள். சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் இருவரும் அமர்ந்து மிகுந்த ரெளத்திரத்துடன் யாகசாலைையினுள் நுழைந்து, அதைப் பல விதங்களிலும் அழித்து நாசமாக்கினார்கள். வீரபத்ரா் சிவனுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்தப்படும் யாகத்துக்கு வந்திருந்த இதர தேவர்களையும் தண்டித்தார். தக்ஷன் தலையைக் கொய்து வேள்வித் தீயில் எறிந்தார்.

தண்டிக்கப்பட வேண்டியவன் தக்ஷனாக இருக்க, யாகத்துக்கு வந்திருந்த இதர தேவர்களும், முனிவர்களும் வீரபத்திரனால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்ட முனிசிரேஷ்டர்கள், கைலாசநாதனைச் சரண் அடைந்து அவரைத் துதித்தனர். ஈசனும் அவர்கள் பால் கருணை கொண்டு அனைவரையும் உயிர்ப்பித்து அவரவர் இருப்பிடம் செல்ல அனுமதித்தார். ஈசன் ஆணைப்படி, தலையிழந்து கிடந்த தட்சனின் உடலில் ஆட்டினுடைய தலையைப் பொருத்தி மீண்டும் உயிா் பெற்று எழச்செய்தாா் வீரபத்ரா். தக்ஷனும் தன் தவற்றை உணர்ந்து ஈசனிடம் மன்னிப்புக் கேட்டான்.

ஈசன் ஊழிக்கூத்து: 51 சக்தி பீடங்கள்

உயிரற்ற தேவியின் உடலைக் கண்ட ஈசன் கடும் கோபத்துடன் அவ்வுடலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு கூத்தாட ஆரம்பித்துவிட்டார். அது சாதாரணக் கூத்தல்ல, ஊழிப் பெரும் கூத்து, அண்டசராசரங்களும் ஆட ஆரம்பித்தது. சூரிய-சந்திரரும், மற்ற தேவர்களும் நிலைதடுமாறினர். ஈரேழு பதினாலு லோகங்களும் ஆடியது. நவக்கிரகங்களும், அஷ்ட திக்பாலகர்களும் அவர்களது திசை மாறினர்.

நிலையின் விபரீதம் உணர்ந்த மஹாவிஷ்ணு ஈசனது உக்ரதாண்டவத்தை நிறுத்த ஒரே வழி சதிதேவியின் (தாட்சாயணியின் இன்னொரு பெயர்) உடலை அவரிடமிருந்து பிரிப்பதுதான் என்று முடிவு செய்து தனது சுதர்சன சக்ரத்தை ஏவினார். ஈசனைத் தொடர்ந்த சக்ராயுதம் சதிதேவியின் புனித உடற்பாகங்களை துண்டு-துண்டுகளாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றது. இவ்வாறு வெட்டப்பட்ட அங்கங்களின் துண்டங்கள் விழுந்த இடங்களே நாளடைவில் அம்பாளின் சக்தி பீடங்களாகின. ஐம்பத்தொரு பீஜாக்ஷரங்கள் தோன்றிய இடங்களில் அங்கங்கள் விழுந்ததாகவும், அணிகலன்கள், ஆடைகள் விழுந்த இடங்களையெல்லாமும் சேர்த்து 108 என்பதாகவும் கூறப்படுகிறது.

உக்கிரம் தணிந்த சிவபெருமான் கயிலைக்கு சென்று கடும் தவத்தில் ஆழ்ந்தார்.

கந்த புராணம்: பகுதி 2

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே