கந்த புராணம் : பகுதி 2 A

கந்த புராணம் பகுதி 1 A
கந்த புராணம் பகுதி 1 B

தட்சனின் யாகத்தில் சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்குமாறு தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி சபித்திருந்தது அசுர குரு சுக்கிராச்சாரியர் கவனத்தை ஈர்த்தது. தேவர்கள் கூடிய சீக்கிரம் தங்கள் நலமெலாம் தொலையப்பெற்று அசுரரால் வருந்தப்பெற்று அடிமைகளாகும் வண்ணம் நந்தியம்பெருமான் சொன்ன சாபத்தைப் பற்றி எண்ணினார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அசுரர்களின் சக்தியையும் ஆதிக்கத்தையும் பெருக்க திட்டமிட்டார்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உள்ள பகை யுகம் யுகமாக தொடர்ந்து வருவது. மூன்று உலகங்களையும் தாங்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் விரும்பினார்கள். தேவர்கள் குல குரு பிரகஸ்பதி. பாற்கடலை கடைந்து அமுதத்தை அருந்திய தேவர்கள் அமரர்களாக திகழ்வதை கண்டு அசுரர்களுக்கு தலைவனாக விளங்கிய சுக்கிரன் சிவபெருமானிடம் வேண்டி இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் "மிருத சஞ்சீவினி" என்ற மந்திரத்தை உபதேசம் பெற்றார். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகை கூடிக்கொண்டே தான் இருந்தது.

கந்த புராணத்தில் உள்ள அசுர காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூரபத்மன், வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று, 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம்.

சுக்ராச்சாரியார் திட்டம்

தட்சனை குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால் பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும், அவரது தர்மபத்தனி திதிக்கும் பிறந்த 66 கோடி அசுரக்குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக்க விரும்பினார்.
இன்ன லெய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர்
மன்ன னாதியர் பெருமையும் வானநாட் டுறைவோர்
நன்ன லந்தொலைந் தசுரரால் மலிந்திட நந்தி
சொன்ன வாய்மையுங் கருதினன் புகரெனுந் தூயோன்.

இந்த காசியபர் யார்? காசியபர் சப்தரிசிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர். இவர் அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா மற்றும் விஸ்வா என்ற பிரஜாபதி தட்சனின் பதிமூன்று மகள்களை மணந்தவர்.

அசுரர் காண்டம் : மாயை படலம்

அதற்கான திட்டத்தைச் செயல்படுத்த சுக்கிராச்சாரியார் அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் - மங்களகேசினியின் தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து, பெயரையும் மாயா என மாற்றிவிட்டார். அசுரர்கள் சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்டி தங்கள் குலம் தழைத்தோங்க அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்று தன் திட்டத்தை விளக்கினார்.

காசிபருக்கும் மாயாவுக்கும் பிறந்த குழந்தைகள்

வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
ஆறு கோடிய தாகிய அவுணருக் கரசன்
மாறில் மங்கல கேசியாம் அரக்கியை மணந்து
பேற தாகவே சுரசையென் றொருமகட் பெற்றான்.
"வேகம் கொண்ட குணம் உடைய காசிபன் என்பவனிடத்திருந்து அவன் பிள்ளைகள் அறுபத்தாறு கோடி அசுரர் தோன்றினார்கள்.இந்த அசுரர் கூட்டத்திற்கு தலைவனாக அசுரேசன் என்பவன் அரசனானான். அசுரேந்திரன் மாறுபாடு இல்ல நெறியுடைய மங்கலகேசி என்னும் இராட்சத பெண்ணை திருமணம் செய்து அதன் பேறாக சுரசை என்னும் பெயருடைய ஒரு மகளை பெற்றான்"

இத்திட்டத்தின் படி, மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்று தன் மாயசக்தியால் புதிய மாளிகைகளை எழுப்பி சுற்றிலும் அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். அவள் எதிர்பார்த்தபடியே மாளிகைக்கு வந்த காஷ்யபர் அந்த பேரழகியை பார்த்து தன் மதி இழந்தார். மாயா சாதுரியமாக உடன் அங்கிருந்து மறைந்து விட்டாள். துன்பத்துக்கு ஆளான காஷ்யபர் நாள் கணக்கில் புலம்பிக் கொண்டு பசி பட்டினியுடன் மயக்க நிலையில் கிடந்தார்.

மீண்டும் காஷ்யபர் முன் தோன்றினாள் அப்பெண். அவர் அளவில்லா பரவசத்துடன் அவளை நோக்கி ஓடி அவளது காலிலேயே விழுந்து விட்டார்.

தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்து அவருடைய ஆசைக்கு இணங்குவதாக கூறிய மாயைு ஒரு நிபந்தனை விதித்தாள். தன் தவ வலிமையால் முனிவரை இளைஞனாக மாறி பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும்படி கூறினாள். காஷ்யபர் பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்து மாயாவை அடைந்தார். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு தாமரை போன்ற மலர்ந்த முகம் கொண்ட ஒரு மகன் பிறந்தான். அவன் பத்மாசுரன் என்றும் சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர்.

இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடினர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான சிங்கமுகன் பிறந்தான். அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள்.

மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர்.

நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர்.

மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி போன்ற பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர். காஷ்யபரின் தவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இவர்கள் இளைஞர்களாகவே பிறந்தனர்.

கந்த புராணம்: பகுதி 2B

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே