கந்த புராணம் : பகுதி 2 B

மாயை காரணமாகத் தோன்றிய நான்கு அசுரர்களும் ஆணவ மிகுதியால் இறுமாப்புடன் திரிந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், ‘குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறுங்கள்,’ என்று உபதேசம் செய்தார். அதற்கு மாறாக மாயை, 'இந்த ஜகத்தையே வென்று, தேவலோகமும் மற்ற எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டுமென்ற நோக்கத்துடன் சிவனை நோக்கி தவம் இருங்கள்' என்று கூறி ஆசீர்வதித்தாள்.

அசுரர்கள் பெற்ற வரம், தேவர்கள் துயரம்

இவர்கள் கடும் தவத்தை மெச்சி பரமன் தரிசனம் கொடுத்தார். அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், 'கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும்,' என்றான்.

சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். 'சூரபத்மனே! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் தருகிறேன். நான்கு வகை சேனைகளையும், இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால் நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய்', என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, 'ஈசனே ! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது,' என்று வரம் கேட்டான் சூரபத்மன். 'அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை', என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான்.

இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்றனர்.

கந்த புராணம்: பகுதி 3

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே