கந்த புராணம் : 3

கந்த புராணம் பகுதி 2A கந்த புராணம் 2 B

சூரனின் திக்விஜயம்: தேவர்கள் சேவகம்

சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன. தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். தேவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க அசுரர்கள் முதலில் சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை. குபேரன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்தான்.

குபேரபுரியை அடுத்து அவன் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றான். அந்த திசைக்கு அதிபதி முக்கண் ஈசானனை பார்த்த சூரன் எச்சரிக்கையுடன் ஒதுங்கிக் கொண்டு விட்டு கிழக்கு நோக்கி திரும்பினான். கிழக்கு திசையில் தான் தேவர்களின் தலைமை இடமான இந்திரலோகம் இருந்தது. எல்லாரையும் விட்டு விட்டு, இந்திரன் ஓடோடிச் சென்று ஆகாய மேகக் கூட்டங்களிடையே தலை மறைவாகி விட்டான். தேவலோகத் தலைநகரான அமராவதி பட்டணத்தை சூறையாடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தேவமாதர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். ஒளிந்திருந்த தேவர்களை கைது செய்து, அவர்களின் தலையில் அமராவதி பட்டணத்து செல்வங்களை ஏற்றி, சுமந்து வரச்செய்தார்கள்.

இதையடுத்து அசூர் சேனை அக்னியின் கோட்டைக்குள் புகுந்தன. தைரியசாலியான அக்னி அசுரர்களை நோக்கி தன் ஜ்வாலையை வீசி அருகில் நெருங்க விடாமல் செய்தான். ஆனால், சூரபத்மனின் தம்பி தாரகன் அக்னியின் மீது பாசுபதாஸ்திரத்தை எய்தான். இது அவனுக்கு சிவபெருமான் கொடுத்த பரிசு. சிவனின் அஸ்திரத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் அக்னி. காரணம், அந்த அஸ்திரம் நெருப்புக்கே நெருப்பு வைக்கக்கூடியது. தன் அக்னிலோகம் மட்டுமின்றி சர்வலோகங்களும் அந்த அஸ்திரத்தால் அழித்து போய்விடும் என்பதால். அக்னி வேறு வழியின்றி சூரனிடம் சரண்புகுந்தான். தாரகன் அவன் மீது இரக்கப்பட்டான். 'அக்னியே, நீ மற்றவர்களை போல பயந்து ஓடவில்லை. முடிந்தளவு என்னிடம் போராடினாய். எனவே, இந்த பட்டணத்துக்கு நீயே ராஜாவாக தொடர்ந்து இரு. ஆனால், ஒரு பணியாளனாக நாங்கள் வரச்சொல்லும் இடத்துக்கு வர வேண்டும்,' என்று ஆறுதல் சொன்னான்.

இதையடுத்து தென்திசை நோக்கி எமலோகம் திரும்பியது அசுரப்படை. யமன் தாரகனின் தாழ் பணிந்து, 'ஐயனே ! நான் உங்கள் ஆணைப்படி நடக்கிறேன். என் பட்டணத்தை மட்டும் ஏதும் செய்து விடாதீர்கள்,' என்றான். எமன் மீது இரக்கம் கொண்ட தாரகன், படைகளை ஊருக்குள் போகக்கூடாது என சொல்லி விட்டான். இப்படியாக நிருதி, வாயு, வருண லோகங்களுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டினர் அசுரப்படையினர்.

அசுரர்களுடைய அடுத்த இலக்கு மகாவிஷ்ணு. நாராயணன் சூரர்களுடன் 12 ஆண்டுகள் கடும் போராட்டம் நடத்தினார். கடைசியில் தாரகனுக்கு சக்ராயுதத்தை பரிசாய் தந்தார். அடுத்ததாக சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகிய சகோதரர்கள் நந்திகேஸ்வரரின் அனுமதியுடன் சிவபெருமானைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

பின் சூரர்கள் வீரமகேந்திரபுரம் என்ற நகரத்தை ஸ்தாபித்தனர். பிரம்மா சூரபத்மனுக்கு முடிசூட்டினார். விஷ்ணு முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அவரை சூரபத்மன் வைகுண்டத்துக்கே அனுப்பி விட்டான். தேவர் தலைவரான இந்திரன், அசுரன் உமிழும் வெற்றிலை எச்சிலை பிடிக்கும் பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டான். வாயு சாமரம் வீசினான். இப்படி தேவர்களெல்லாம் ஆளுக்கொரு வேலை செய்ய உத்தரவிட்டான்.

அசுரர்களின் மக்கள்

பிறகு பத்மாசுரன் மகேந்திரபுரியை நிர்மாணித்த விஸ்வகர்மாவின் மகளான பத்மகோமளயை திருமணம் செய்து கொண்டான். சந்திரனின் உதவியுடன் உலகிலுள்ள அழகிகளை மயக்கி, தன்னுடன் சேர்த்துக் கொண்டான். பத்மாசுரனுக்கும் கோமளைக்கும் நான்கு மகன்கள் பிறந்தனர். பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என அவர்களுக்கு பெயர் சூட்டினர் அசுரதம்பதியர். இதை தவிரவும், சூரன் பல இன கன்னிகைகளுடன் கூட மூன்றாயிரம் மகன்களை பெற்றான். இங்கே இப்படியிருக்கும் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் ஆசுரபுரி என்ற நகரை அழைத்துக் கொண்டான். அவன் எமனின் மகள் விபூதிகையை திருமணம் செய்தான். இன்னும் பல பெண்களை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றான். தாரகன் மாயாபுரி என்ற நகரை அமைத்தான். அவன் நிருதியின் மகளான சவுரிகை என்பவளைத் திருமணம் செய்ததுடன் மேலும் பல பெண்களையும் சேர்த்துக் கொண்டான். சவுரிகைக்கு அசுரேந்தின் என்ற மகன் பிறந்தான்.

ஆட்டுமுகம் கொண்ட அஜாமுகி அழகுள்ளவனோ, அழகில்லாதவனோ யாராயிருந்தாலும் அவள் விரும்பி விட்டால் தன்னை அனுபவித்தாக வேண்டும் என கட்டளையிட்டாள். போதாக்குறைக்கு தன்னோடு பிறந்த அசுர சகோதரர்களுக்கு லோகத்திலுள்ள அழகான பெண்களை எல்லாம் பிடித்து வந்து இரையாக்கினாள்.

துர்வாசரும் அஜமுகியின் மக்களும்

ஒருநாள் கோபக்கார முனிவரான துர்வாசரை அஜாமுகி சந்தித்தாள். அவரை மறித்து தன் இச்சைக்கு அடி பணியச் சொல்லி பலவந்தப்படுத்தினாள். இதன் விளைவாக அவளுக்கு இல்வலன், வாதாபி என்ற மக்கள் பிறந்தனர். அவர்கள் தன் தந்தையின் தவப்பயன் முழுவதையும் தங்களுக்கு தரவேண்டினர். அவரோ மறுத்தார். எனவே அவரைக் கொல்லவும் துணிந்தனர் மகன்கள். படுகோபக்காரரான துர்வாசர், 'என்னைப் போன்ற முனிவர்களை துன்புறுத்துவதாலேயே நீங்கள் அழிவீர்கள்,' என சாபமிட்டார். இல்வலன் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து தன் தம்பி வாதாபியை வெட்டி அக்னி குண்டத்தில் போட்டான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மனிடம், 'பிரம்மனே ! நான் எத்தனை முறை என் தம்பியைக் கொன்றாலும், நான் அழைக்கும் போது உயிர் பெற்று வரும் வரம் தர வேண்டும்,' என்றான். அந்த வரம் அவனுக்கு கிடைத்தது. இல்வலன் அந்தணர்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து, தங்கள் இல்லத்தில் திதி நடப்பதாகவும், தான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும் என்றும் சொல்வான். வாதாபி உணவு வடிவில் அந்தணர்களின் வயிற்றுக்குள் போய், அவர்களின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். இப்படி வேதம் கற்ற அந்தணர்கள் பலரைக் கொன்று குவித்தான். இப்படியாக அசுர வம்சம் செய்த அட்டூழியம் பெருகியது. பிற்காலத்தில் அகஸ்த்தியர் தனக்கு பரிமாறப்பட்ட வாதாபியை ஜீரணித்து ஏப்பம் விட்டு அவன் கதையை முடித்தார்.

ஒரு சமயத்தில் இந்திரனின் மனைவி இந்திராணியை பார்த்த சூரபத்மன் அவளை அடைய விரும்பினான். அவர்கள் ஓடி ஒளிந்தனர். பின்னர் சாஸ்தாவின் அருளால் அவள் தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்திராணியைக் காப்பாற்ற, சிவ மைந்தரான சாஸ்தாவின் காவலர் மகாகாளர், சூரனின் தங்கையான அஜாமுகியின் கையை வெட்டி விட்டார். இப்படி சூரர்களுக்கும், தேவர்களுக்கும் பகைமை வளர்ந்தது.

கந்த புராணம்: பகுதி 4

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே