கந்த புராணம் : பகுதி 4

கந்த புராணம் பகுதி 2 B
கந்த புராணம் பகுதி 3

தேவர்கள் முறையீடு

அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், மகாவிஷ்ணுவின் தலைமையில் கூடி, சூரர்கள் இந்தளவுக்கு வளரக் காரணமாக இருந்த சிவபெருமானால் தான் அவர்களை அழிக்கவும் முடியும். என்று நிச்சயித்து எல்லாருமாக கைலாயம் சென்றனர். நந்திதேவரின் அனுமதி பெற்று, சிவபெருமானைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை வைத்தனர். அசுரர்களிடம் தங்கள் பொருட்களை இழந்ததோடு, இந்திரனும் அவன் மனைவியான இந்திராணியும் பயந்து தலைமறைவாக இருப்பதையும், இந்திரன் மகன் ஜெயந்தன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும், அந்தணர்கள் தங்கள் பணி சரிவர செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பதையும் சொன்னார்கள்.

சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். 'தேவர்களே ! கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு, நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி, எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு உதவுவான்', என்றார். தேவர்கள் நிம்மதியுடன் தம்மிடங்களுக்கு திரும்பினர்.

பார்வதி தோற்றமும் தவமும்

தேவர்கள் தங்கள் நிலையை கருதி விசனப்பட்டு கொண்டிருக்கும் அதே நேரம், தான் தக்ஷனின் மகளாக பிறந்தது குறித்து விசனமுற்று, அது நீங்கிட மறுபிறவி எடுப்பதற்காக சிவனிடம் அருள் புரிய வேண்டினாள். மனம் மகிழ்ந்த எம்பெருமான் தேவியிடம், 'இமவான் வேண்டிய வரத்தின்படி நீ அவனுக்குத் திருமகளாகத் தோன்றி ஐந்து ஆண்டுகள் வளர்ந்து தவம் இருப்பாயாக. அப்போது உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அவ்வமயம் இமயமலையில் இமவான் அம்பிகை தனக்கு மகளாக வேண்டித் தவம் கொண்டிருந்தான். அங்குள்ள தடாகத்தில் ஆயிரத்தெட்டு இதழ்களுடைய தாமரை மலரில் வலம்புரி சஙஂகினஂ மேல் அம்பிகை குழந்தையாகத் தோன்றினாள். அதுகண்டு வியப்படைந்த இமவான் யாவும் இறைவன் செயல் என்று எண்ணி குழந்தையை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுக்க, அவளும் தாய்மை அடைந்தவருக்கான அறிகுறிகளுடன் குழந்தையை வாரி அணைத்து பார்வதி என்ற பெயரில் வளர்த்து வந்தாள்.

குழந்தைக்கு ஐந்து வயது ஆனவுடன், தாயாகிய மேனையிடம் அம்பிகை தான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்ய வேண்டுவதாகவும் அதற்கான அனுமதியும் வேண்டினார். மேலும் தந்தையிடம் தன் எண்ணத்தைக் குறிப்பிட்டு வேண்டிட இமவான் அம்பிகை தவம் ஆற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தாள்.

அம்பிகையின் தவத்தைக் கண்டு அருள்புரிய எண்ணிய சிவபெருமான் வயது முதிர்ந்த வேதியர் உருவில் அம்பிகையின் தவச்சாலையை அடைந்தார். அம்பிகையின் தோழியர்கள் அவரைத் தக்க உபசாரங்களுடன் அழைத்துச் சென்று அம்பிகையின் முன் நிறுத்தினார். அம்பாளின் தவக்கோலம் கண்ட ஈசன் அவள் ஏன் தன் உடலை வாட்டிக் கொள்கிறாள் என்றும், யாரை மணக்க விரும்புகிறாள் என்றும் வினவ, பார்வதியின் தோழிகள் அவள் குறிப்பறிந்து அம்பிகையின் தவத்தின் குறிக்கோளை எடுத்துரைத்தனர். சிவபெருமான் உடை தோல், வாகனம் எருது, ஆபரணங்கள் பாம்பு, எலும்பு; தலைமாலை பன்றிக்கொம்பு, உண்கலம் மண்டையோடு, உண்பது நஞ்சு, நடமாடுவது மயானம் என்றெல்லாம் கூறி, பார்வதியை அவ்வெண்ணத்தை விட்டுத் தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு கூறினார். "நீயோ ராஜாவின் மகள்; ஏன் ஏதும் இல்லாத, சுடுகாட்டில் வாழும் சிவனை கணவனாக அடைய நினைக்கிறாய்," என்றார்.

கோபம் கொண்ட பார்வதி, "பெரியவரே, அவர் வாழும் இடத்துக்கு (கோவில்) வராதவர்கள்கூட, சுடுகாட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும்; அங்கு வைத்து அருள்புரியலாம் என்ற தியாகத்தினால்தான் சிவன் சுடுகாட்டில் வாழ்கிறார்,' என்றாள். கிழ வேதியர் மேலும் எள்ளி நகையாடவே மிகவும் சினமுற்ற உமாதேவியார் கிழ வேதியரை அவ்விடம் விட்டு அகலுமாறு ஆத்திரத்துடன் கூற, சிவபெருமான் இறுதியில் ஈசனாகக் காட்சி தந்தார்.

எம்பெருமான் தரிசனம் கண்ட உமாதேவியார் தன் குற்றத்தை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டிட, சிவபெருமானும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறி திருக்கயிலாயம் திரும்பினார். செய்தியறிந்த பார்வதியின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுற்று அம்பிகையைத் தவச்சாலையிலிருந்து தமது அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

சூரபன்மன் கொடுமையால் வருந்திய இந்திரன் மேருமலையை அடைந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்ய, ஈசன் அவன் குறையைக் கேட்டு, விரைவில் குமரன் தோன்றி அரக்கர்களை அழித்து உங்களை எல்லாம் காப்பாற்றுவான் என்று கூறி மறைந்தார்.

கந்த புராணம் : பகுதி 5

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே