கந்த புராணம் : பகுதி 5 A
கந்த புராணம் : பகுதி 1 A | கந்த புராணம் : பகுதி 1 B |
கந்த புராணம் : பகுதி 2 A | கந்த புராணம் : பகுதி 2 B |
கந்த புராணம் பகுதி 3 | கந்தபுராணம் : பகுதி 4 |
சிவனின் மௌன உபதேசமும் தவமும்
திருக்கைலாயத்தில் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் மோன நிலையில் இருந்து சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரையால் சிவஞானம் அருளினார். சனகாதி முனிவர்கள் நால்வரும் பிரம்மாவின் மானச புத்திரர்கள். பிரம்மாவால் பிரஜா உற்பத்திக்காக படைக்கப்பட்டாலும், அவர்களுக்கு நித்தியமான பரம்பொருளை அடைவதிலேயே நாட்டம் கொண்டதனால் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய வாழ்க்கையிலேயே ஈடுபடுவதாக தீர்மானித்தனர். தியானத்தில் ஈடுபடுவதற்கு முன், முற்றும் உணர்ந்த சிவ பெருமான் முனிவர்களுக்கு அஷ்டாங்க யோகத்தையும், தியானத்தையும், பரமாத்மாவோடு சேரும் மோட்ச நிலையை போதிக்கும் வேளையில் கயிலாயத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் மேற்கு நுழைவாயில் வழியே மன்மதனை மட்டும் அனுமதிக்கவும் கட்டளை இட்டார்.
சிவபெருமான் சரியை, கிரியை மற்றும் யோகம் பற்றி சனக சகோதரர்களுக்கு விளக்கினார். எவ்வாறு கண்ணாடி சுத்தமாகவும் ஆடாமல் நிலையாக இருந்தால் தான் எதிரில் காணும் உருவத்தின் பிரதிபிம்பம் வெளிப்படுமோ, அதே போல் சித்தம் என்ற கண்ணாடியை தாமிரச் செம்பில் இருக்கும் களிம்பை தேய்த்து தூய்மை படுத்துவது போல அதன் அழுக்கை நல்ல கர்மாநுஷ்டானங்களால் போக்கி, எண்ணங்களை தூய்மைப்படுத்தி, அதை தியானங்கள் மூலம் ஒன்றிலேயே ஈடுபடுத்தினால், பரமாத்மா அதில் பிரதிபலிப்பார். இதை நன்கு புரிந்து, உணர்ந்து, செயல் படுத்திய முனிசிரேஷ்டர்கள் தங்களுக்கு ஞான போதம் கொடுக்க சிவபெருமானை பிரார்த்தித்தார்கள்.
பரமசிவன் வெறும் வார்த்தைகளினால் மட்டுமே ஞானத்தை உணர்த்தி விட முடியாது என்பதை தெரிவிக்க, கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சின்முத்திரையில் இணைய, தானே துரியாதீத நிலையில், ஆன்ம சொருபத்தில் முழுவதுமாக லயித்து, நிஷ்டையில் ஆழ்ந்தார். அவருடன் அந்த முனிவர்களும் தீவிர தியானத்தில் ஈடுபட்டனர். கைலாயத்து கணக்கில் சிவபெருமான் தியானத்தில் இருந்தது ஒரு விநாடியாக இருந்தாலும் பூலோகத்தில் அது பற்பல ஆண்டுகளாக பரிணமித்து அண்டமனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் காமம் தோன்றாமல் இயக்கம் தடைபட்டது. இதே நேரம் தான் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் சகல வரங்களையும் பெற்று இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தார்கள்.
பிரம்மன் மன்மதனை நாடுதல்
ஈசன் இமயபர்வதத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் சமயத்தில் அவருடைய பணிவிடைக்காக இமவான், தன் குமாரத்தியான பார்வதியை இரு தோழிமாரோடு நியமித்தான். சிவபெருமான் மோன நிலையை கண்ட பிரம்மாவும் இந்திரனும் அவர் மனதில் விரகதாபம் ஏற்படுத்த காமனை நாட தீர்மானித்தனர்.
காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார் (சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார்). காமதேவனின் துணை ரதி தேவி. கரும்பால் ஆன அவனது வில்லின் நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. உரிய பருவம் வசந்த காலம், வாகனம் கிளி.
தன்னை ரதியுடன் அனுப்பி ஈசனின் மோன நிலை நீக்கும்படி பணித்தவுடன், மன்மதன் நடுநடுங்கி மூடிக் கொண்டான் செவிகளை. 'அவர் அளித்த சக்தியை அவர் மேலேயே பிரயோகிப்பதா? நகைப்பினாலேயே முப்புரங்களை எரித்தவர் அன்றோ அவர்? கடவுள் நானே என்று சொல்லித் திரிந்த உம் நடு சிரசைக் கிள்ளி எடுத்ததையும், ஈசனை இகழ்ந்து செய்த வேள்வியால் மோசம் போன தக்ஷனையும் மறந்து விட்டீர்களா? என்னால் கரும்பு வில்லும் மலர்க்கணையும் ஏந்தி அவர் அருகே செல்ல இயலாது,' என்றான் பிரம்மனிடம். பலவாறு மறுத்த பிறகு, இறுதியில் பிரம்மனின் சாபத்துக்குப் பயந்து சிவபெருமான் மீது மலர்க்கணை செலுத்த இசைந்தான். திருக்கைலாயம் அடைந்தான் மன்மதன்.
காமன் தகனம்
ஈசன் ஆணைப்படி மன்மதனை நந்தி அனுமதித்தார். இதற்குள் பிரமாதி தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு மன்மதன் கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.
யோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க, கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் தோன்றியவுடன், 'அவள் இத்தனை அழகா,' என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்ட, தவம் கலைந்தது. உடலைச் சிலிர்த்து திரும்பி, தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அவனுடைய கரும்பு வில்லையும், மலர் அம்பையும் அம்பிகை எடுத்துக் கொண்டாள். அவற்றை சிவனின் பாதத்தில், அர்ப்பணித்து வணங்கினாள்.
அது கண்ட தேவர்கள் மேலும் இறைவனைப் பிரார்த்தித்து தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டதோடு காமனையும் உயிர்ப்பிக்க வேண்டினர். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட, 'ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல, பிரதியும்னன் சம்பாசுரனை அழித்து, அவன் மகளான மாயாவதியாகிய உன்னை மணப்பான்' என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் மறைந்தார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.
Comments
Post a Comment