கந்த புராணம் : பகுதி 5B
கந்த புராணம் : பகுதி 1 B | கந்த புராணம் : பகுதி 2 A |
கந்த புராணம் : பகுதி 2 B | கந்த புராணம் பகுதி 3 |
கந்தபுராணம் : பகுதி 4 |
பார்வதி திருமண ஏற்பாடு
கைலையை அடைந்த ஈசன் சப்த ரிஷிகளை நினைத்தார். அவர்கள் ஈசனின் எதிரில் வந்து தமக்குரிய ஆணை என்ன என்று வினவ பரமேசுவரன், 'பர்வதராஜன் மகள் பார்வதியை மணக்க விரும்புகிறேன். ஆதிபராசக்தியான அவளே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாவாள். அவள் என்னையே கணவனாக அடைய தவம் செய்து வருகிறாள். நீங்கள் உங்கள் பத்தினிகளுடன் சென்று திருமணம் பேசி முடித்து வரவேண்டும். மற்றும் அவளுடைய தாய் மேனையையும் மனப்பூர்வமாக சம்மதிக்கச் செய்வீராக' என்று கட்டளை இட்டார்.
சப்தரிஷிகளும் ஈசனை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு இமயத்தை அடைந்தனர். இமவான் இச்செய்தி அறிந்து வெளிப்போந்து அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்கள் பர்வதராஜனிடம் உன் மகள் பார்வதியை எம்பெருமானுக்கு மணம் பேச வந்துள்ளோம். என்று தமது விசயத்தின் காரணத்தைக் கூறினார். உடனே இமவான் தனது சம்மதத்தைத் தெரிவித்திட, இமவானின் மனைவி மேனை ஓர் ஐயப்பாட்டை எழுப்பினாள். 'ஈசன் தாக்ஷாயணியை மணந்து, பின்னர் மாமனாராகிய தக்ஷனின் தலையை அறுத்து விட்டார். என் கணவர் கதியை நினைத்து கவலைப்படுகிறேன்,' என்றாள். முனிவர்களும் தக்க சமாதானம் தந்தனர். ஆங்கீரசர் கூறினார் 'தக்ஷன் தனக்கு ஈசன் அளித்த சகல ஐசுவரியங்களையும், பட்டத்தையும் மறந்து ஈசனை ஒதுக்கி வைத்து, மேலும் பரமனைப் பலவிதமாக ஏசினான். தாட்சாயினியும் வர அனுமதிக்கப்படவில்லை. இந்த அலட்சியமும், கர்வமும் தான் அவன் அழிவிற்குக் காரணம். இருப்பினும் மறுபடியும் அவனை உயிர்ப்பித்தருளினார்,' என்று கூறிட மேனையும் ஐயம் நீங்கினாள். சம்மதம் அளித்தாள். சப்த ரிஷிகளும் மனம் மகிழ்ந்தனர். இமவானையும், மேனையையும் ஆசிர்வதித்து, திருமணத்திற்கான நன்னாளை நிச்சயித்து விடை பெற்றுச் சென்று, கயிலை அடைந்து, எம்பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறி தம் இருப்பிடம் சென்றனர்.
பர்வதராஜன் அம்பிகையின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது இமவானின் மகன் மைனாகன் தன்னுடைய தந்தையாரிடம் தேவதச்சனான விசுவகர்மாவை வரவழைத்துச் சொன்னால் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார் என்று கூறினான். விசுவகர்மாவும் இது கேட்டு மனமகிழ்ந்து எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார்.
பர்வதராஜன் அனைவர்க்கும் மணஓலை அனுப்பி வைத்தான். கைலைக்குச் சென்று, இறைவனைத் தரிசித்து வணங்கி, மகளை ஏற்று தங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினான். திருமணத்தன்று பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இசைந்த பரமேசுவரன் சர்வாபரணங்களையும் அணிந்தவாறு தோன்றினார். பூதகணங்கள் புடைசூழ, மங்கலவாத்தியங்கள் முழங்க, தேவாதி தேவர்களுடன் இமயமலையை வந்தடைந்தார்.
அகஸ்தியர் தெற்கு போதல்
சிவன் பார்வதி திருமணம் காணப் பெரும்கூட்டம் கூடியதால் இமயம் உள்ள வடபால் கீழே அழுந்தி, தென்திசை உயர ஆரம்பித்தது. அப்போது ஈசன் அகத்தியரை அருகழைத்து தென்திசை சென்று பொதிகையில் தங்கி, அங்கிருந்தவாறே திருமணத்தைக் காணுமாறு அருள்பாலித்தோம் என்று கூறிட, அகத்தியரும் பொதியமலை சென்று அடைந்திடவும் பூமி சமமாகியது.
இமவானின் நகரமாகிய ஓஷதி பிரஸ்தத்தில் நகர்வலமாக வந்த போது ஐயனின் திருமேனி அழகு கண்டு அனைவரும் மயங்கி நின்றனர். திருமண மண்டபத்தை அடைந்தபோது இமவானின் மனைவி மேனை மகளிர் பலர் சூழ அவரை வணங்கி திருவடிகளைப் பாலால் கழுவி பக்திப் பெருக்குடன் விளங்கினாள். ஈசன் மண்டபத்தில் பிரவேசித்து சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தார்.
கலைமகள் துதி பாடி வர, திருமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு பார்வதி தேவியார் திருமண மண்டபம் அடைந்து சிவபெருமானை வணங்கி, பிறகு ஈசனுடன் ஆசனத்தில் அமர்ந்தார். பர்வதராஜன், தன் மனைவி மேனை நீர் வார்த்திட சிவனாரின் திருவடிகளை விளக்கி சந்தனம், மலர் சார்த்தி உபசரித்தான். பின்னர் பார்வதியின் கரத்தை, எம்பிரான் கரத்துள் வைத்து வேத கோஷங்களுடன் தாரை நீர் வார்த்து கன்னிகாதானம் செய்வித்தான். மங்கல வாத்தியங்கள் முழங்கின.
கந்தபுராணத்தில் சிவபெருமான், பார்வதி திருமணக் காட்சி :
எங்கு உள பொருளும் கோளும் ஈதலும் தானே ஆகும்
சங்கரன் உலகம் எல்லாம் தந்திடும் கன்னி தன்னை
மங்கல முறையால் கொண்டான் மலைமகன் கொடுப்ப, என்றால்
அங்கு அவன் அருளின் நீர்மை யார் அறிந்து உரைக்கற்பாலார்?
எங்கும் இருக்கிற பொருட்கள் அனைத்தும் சிவபெருமான் தான். அவற்றைக் கொண்டிருப்பவனும் அவன்தான், தருவதும் அவன்தான். அவன் மணந்த பார்வதியோ உலகம் அனைத்தையும் தருகிறவள். சிவபெருமானில் சரிபாதி. உண்மை இப்படியிருக்க, அவளை மகளாகப் பெற்ற மலையரசன் மங்கலமுறைப்படி சிவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறான். சிவனும் அவனது கன்னிகா தானத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். ஏன் என்றால், உலகம் உய்ய முருகன் பிறக்க வேண்டும் என்பதற்காகச் சிவபெருமான் அருள் செய்கிறான். அந்த அருளின் தன்மையை யாரால் உணர இயலும்? யாரால் சொல்ல இயலும்?
மன்மதன் உயிர்பித்தல்
அதுவே தக்க தருணம் என்று ரதிதேவி சிவபெருமானிடம் தனது கணவரைத் தனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள். எம்பெருமானும் கருணை கொண்டு மன்மதனை மன்னித்து ரதிதேவியின் வேண்டுகோளின்படி உனக்கு உயிர் பிச்சை அருளினோம். ஆனால் நீ அவளுக்கு கணவனாக, அவளுக்கு மட்டும் உருவம் கொண்டு விளங்குவாய். மற்றவர்களுக்கு நீ உரு வெளிப்படாமல் அதாவது அனங்கனாக இருப்பாய். உன் ஆட்சி இனி வழக்கம் போல் தொடரும் என்று அருளினார். கல்யாணத்துக்கு வந்திருந்தோருக்கு விருந்தளித்து, தக்க சன்மானங்கள் தந்திட்டான் இமவான். அனைவரும் பார்வதி, பரமேசுவரர்களிடமும், இமவான் மேனையிடமும் விடைபெற்றுத் தம் இருப்பிடம் சென்றனர். சிவபெருமானும் பார்வதி தேவியுடன் ரிஷபம் ஏறி திருக்கைலாயம் அடைந்தார்.
Comments
Post a Comment