கந்த புராணம் : பகுதி 6 A
கந்த புராணம் : பகுதி 2 A | கந்த புராணம் : பகுதி 2 B |
கந்த புராணம் பகுதி 3 | கந்தபுராணம் : பகுதி 4 |
கந்தபுராணம் : பகுதி 5A | கந்த புராணம் : பகுதி 5 B |
தேவர்கள் வேண்டுகோள்
சிவன் பார்வதி மணம் நடந்தேறிய பின்னும் வாக்களித்தபடி சிவன் மைந்தன் தோன்றவில்லை. கவலையுற்ற தேவர்கள் ஒன்று சேர்ந்து பரமனை மீண்டும் அணுகினர்.
"வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்! நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும்," என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்ந்தது திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை
நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க
என்றார்.
சிவன் அவர்கள் முன்னிலையிலேயே, பார்வதியை ஆசையுடன் பார்த்தார். சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன.
ஆறு முகங்கள் விளக்கம்
சைவத்தில் ஐந்தொழில்களையும் சைவத்தின் கடவுளான சிவபெருமானே செய்வதாகும். தன்னுடைய ஐந்து முகங்களிலிருந்து ஐந்து மூர்த்தங்களாய் உருவெடுத்து மொத்தம் 25 முகங்களுடன் மகா சதாசிவ மூர்த்தியாக திகழ்ந்து, இந்த பிரபஞ்சத்தை ஐந்து தொழிலாக, திசைக்கு ஒன்றாக, செய்து வருகிறார். அவரது ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றை செய்வதாக சைவ நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு முகமும் பஞ்சாக்ஷரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஐந்தொழில்களில் ஒன்றையும் குறிக்கின்றன.
உலகில் இயங்கும் இயங்காப் பொருள்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாம் திருவைந்தெழுத்தான நமசிவாய மந்திரம். ‘சி’ சிவனையும், ‘வா’ சத்தியாகிய அருளையும், ‘ய’ உயிரையும், ‘ந’ அறியாமையாகிய ஆணவத்தையும், ‘ம’ மலங்களாகிய மாயை முதலிய அழுக்கு களையும் குறிக்கும். சி-வா-ய-ந-ம என்னும் ஐந்தெழுத்தில், ‘ய’ என்னும் உயிர், ‘சி’, ‘வா’ என்னும் சிவன்-அருள் ஆகியவற்றுக்கும், ‘ந’, ‘ம’ என்னும் ஆணவம்-மலங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் நிற்கிறது. அதாவது சார்ந்து நிற்கத் தகுந்த பொருளுக்கும், சார்ந்து நிற்கத் தகாத பொருளுக்கும் இடையில் நிற்கிறது. இந்தப் பக்கம் சாய்ந்தால் சிவனருள்; அந்தப் பக்கம் சாய்ந்தால் பிறவிப் பெருங்கடல்.
‘செம்முகம் ஐந்துளான்’ என்பர் கச்சியப்ப சிவாச்சாரியார். ஐந்து முகங்களுடன் சதாசிவ மூர்த்தியாக இருந்து ஐந்தொழில் செய்கின்றான். பொது நிலையில் இவ்வாறு ஐந்தொழில் நடைபெற்றாலும் நிலவுலகில் உள்ளவர் வழிபாட்டிற்கு இரங்கி அருள் செய்வதற்கு இறைவன் கீழ்நிலை முகம் (அதோமுகம்) கொள்கிறான். இம்முகம் சூட்சும முகம், வெளி தெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான்கு முனிவர்களுக்கு காட்சி தந்து அருளும் போது சாந்தமாகவும், சூரபதுமனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போது உக்கிரமாகவும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
முருகன் தோற்றம்
சிவபெருமானின் நெற்றிக்கண்களிளிருந்து கிளம்பிய நெருப்புப் பொறிகளின் அனலைத் தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர். பார்வதிதேவியாலும் அந்த வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் எழுந்து ஓடினாள். சிவனின் நெற்றியிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் ஜொலிக்கும் ஆறு நெருப்பு பந்துகளாக மாறின. அவற்றின் அருகே நெருங்க முடியாத தேவர்களை மறுபடியும் அழைத்து ‘தேவர்களே! நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்ப்பது வண்ண வடிவேலனின் நெருப்பு முகங்கள். அவன் ஆறுமுகம் கொண்டவனாக இருப்பான். இவனே உங்கள் வினை தீர்ப்பவன்,’ என்றார். தேவர்கள் இந்நெருப்பு பந்துகளை தங்களுடன் எடுத்துச் செல்வது எப்படி என ஆலோசித்தனர். சிவபெருமான் அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, அத்தீபொறிகளை தாங்கும் அளவு சிறியதாக்கி, பிரமனையும் அக்னித்தேவனையும் அதை எடுத்துக்கொள்ளப் பணித்து, 'தேவர்களே ! கவலை வேண்டாம். இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் என் மகன் ஆறு குழந்தைகளாக வளர்வான்,' என்றார்.
ஈஸ்வரன் ஆணைப்படி, முதலில் அக்னியும், வெப்பம் தாள முடியாத அக்னியிடமிருந்து ஆறு தீப்பொறிகளைப் பெற்ற வாயு பகவானும் ஏந்திச் சென்று ஒரு வழியாக கங்கையில் சேர்த்தனர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை. அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.
“என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள். அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்று கூறி காரணத்தை விளக்கினார். ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகி விடுவார் என்ற வரம் கொடுத்திருந்தார். அந்த வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார். அம்பாள் திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அப்படியே உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டாள். அதுதான் சரவணப் பொய்கை.
இதை கேட்ட கங்கை ஜ்வாலைகளை சரவணத்தில் (நாணல் காடு. சரம்-நாணல்; வனம்-காடு. சிறந்த நரம்புகளால் சூழப்பெற்ற இதய கமலத்தின் நடுவினுள் உள்ள தகராலயத்தை குறிப்பது) இருந்த ஆறு தாமரைகளில் அவற்றைச் சேர்த்தாள்.
கருத்து: சக்தியான அம்பிகை தவம் இருக்கிறது. சிவமும் தவம் இருக்கிறது. ஜீவனுள் இருக்கும் சிவனுக்கு பரம்பொருளுடன் இணைவதற்கு தடையாக இருப்பது ஆசையாகிய காமம். சிவன் காமத்தையும் ஆசையையும் அடக்கினார். சக்தியை அடைந்தார், ஞானத்தை பெற்றார்.
சிவனாரின் ஐந்து முகங்களும் ஒவ்வொரு திசையைப் பார்த்தவை; மொத்தத்தில், வெளிப்புறம் பார்த்தவை. ஆனால், அம்பிகையின் முகம் உள்முகம் பார்த்தது; அதாவது, அதோமுகம். நம் ஒவ்வொருவரின் ஜீவசக்தி ஆகிற அம்பிகை, நமக்குள்ளேயே நம்முடைய ஆற்றல் சக்தியாகச் சுருண்டு, தன்னுடைய முகத்தை உள்முகமாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது சக்தி தத்துவம். அகம் நோக்கிய முகம்; புறப்பார்வையால் தெரிவு பெற்று, அகப்பார்வையால் தெளிவு கொண்டு, இரண்டாலும் குறைகளைக் களைந்தால் நிறைவு கிட்டும். அத்தகைய நிறைவே ஞான பண்டிதனான முருகன்.
Comments
Post a Comment