கந்த புராணம் : பகுதி 6 B
கந்த புராணம் : பகுதி 2 A | கந்த புராணம் : பகுதி 2 B |
கந்த புராணம் பகுதி 3 | கந்தபுராணம் : பகுதி 4 |
கந்தபுராணம் : பகுதி 5 | கந்த புராணம் : பகுதி 6 A |
நவவீரர்கள் தோற்றம்
சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினாள். அவள் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியராக நவகாளிகள் தோன்றினர். அவர்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வரும்படி சிவன் அவர்களை பணித்தார். அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்க்க. அவர்கள் வயிற்றில் கர்ப்பம் தரித்தது.
கோபத்துடன் பார்வதி 'பெண்களே ! நீங்கள் என் மணாளனை மயக்கும் விழிகளால் பார்த்து அவரது மனதைக் கெடுத்து கர்பமானீர்கள். இந்த கர்ப்பம் உங்கள் வயிற்றை விட்டு வெளியேற நீண்டகாலம் ஆகும். இதை சுமந்த படியே வாழ்ந்து வாருங்கள்', என சாபம் கொடுத்தாள்.
பத்து மாதம் கடந்தும் நவகாளிகளுக்கு பிரசவிக்கவில்லை. கர்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அவை அவர்களின் உடலில் முத்துக்களாய் ஊறின அம்மை முத்துக்கள் வெடித்து சிதறின. அவற்றில் இருந்து கத்தி, கேடயம், சூலம் ஆகிய ஆயுதங்கள் தாங்கிய லட்சம் வீரர்கள் தோன்றினர். சிவபெருமான் பார்வதியிடம், தேவி ! இந்த உலகின் நன்மை கருதியே என் அம்சமான வடிவேலன் தோன்றினான். அவனுக்கு பக்க பலமாக இருக்க இந்த லட்சம் வீரர்களை உருவாக்கினேன். இவர்களை வழி நடத்திச் செல்ல சேனாதிபதிகள் வேண்டாமா ? அதற்காகத்தான் இவர்களைக் கர்ப்பமுறச் செய்தேன். இது என் திருவிளையாடல்களில் ஒன்று, அவர்களை தவறாகக் கருதாமல், உன் சாபத்தை நீக்கிக் கொள், என்றார். கருணைமிக்க அந்த அன்னையும், சாப விமோசனம் கொடுக்க, வரிசையாக வீரபாகு வீரகேசரி, வீர மகேந்திரன், வீரமகேஸ்வரன், வீரராக்ஷஸன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன், வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான்.
சிவன் அவர்களை ஆசிர்வதித்து, மக்களே ! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நடக்க நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம், என்றார். பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச் சென்றாள்.
பார்வதி தேவி அணைத்த ஆறுமுகன்
கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்த அவர்கள், தாங்கள் சென்ற காளை வாகனத்தில் இருந்து இறங்கினர். மன்மதனை எரித்த அதே கண்ணிலிருந்து வந்த ஆறுபொறிகளினால் உண்டான ஆறுகுழந்தைகள் பார்ப்பதற்கு மன்மதனைப் போலவே அவர்கள் இருந்தனர். மன்மதன் கருநிறம். ஆனால், இந்த ஆறுமன்மதர்களோ சிவப்பு நிறம். அதனால், தமிழில் மன்மதனை கருவேள் என்றும், முருகனை செவ்வேள் என்றும் குறிப்பிடுவர். "வேள் என்ற சொல்லுக்கு அழகுமிக்கவன் என்பது பொருள். பார்வதி தேவி, ஆறு குழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள். அப்போது அவள் மார்பில் சுரந்த பாலை முருகக்குழந்தைகள் குடித்து மகிழ்ந்தனர்.
சரவணம்தனில் தனது சேய் ஆறு உருதனையும்
இரு கரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓர் ஆறு, பன்னிரு புயம் சேர்ந்த
உருவம் ஒன்று எனச் செய்தனள் உலகம் ஈன்று உடையாள்
உலகை ஈன்று ஆளும் அன்னை, சரவணப் பொய்கையில் விளையாடி கொண்டிருந்த தன்னுடைய மகனின் ஆறு உருவங்களையும் இரு கரங்களால் அன்பாக எடுத்தாள், அவர்களைத் தழுவினாள். அதனால் அந்த ஆறு உருவங்களும் ஒன்றாகி, ஓருடல், ஆறு முகம், பன்னிரு கரங்கள் கொண்ட திருக்கோலத்தைப் பெற்றான் முருகன்.
அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!
இந்த இடத்தில் ‘ஒருதிரு முருகன் வந்து உதித்தனன்’ என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். அதாவது என்றுமுள்ள இறைவன் இந்த வேளையில் முருகனாக உதித்தனன். (காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கிறான். ஏனெனில், அவன் முன்னரே இருப்பவன்.)
முனிவர்கள் சாப விமோசனம்
பார்வதி அன்னை குழந்தைகளுக்கு தன் முலைப்பால் ஊட்டியபோது, சில துளிகள் சரவணப்பொய்கையில் சிந்தி அதில் கலந்தன. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குளத்தில் நீந்திய மீன்களில் பல முனிவர்களாக வடிவெடுத்தன. அவர்கள் பற்பல சாபங்களால் மீன்களாக மாறியிருந்தவர்கள். கந்தனுக்கு ஊட்டப்பட்ட பாலின் மகிமையால் அவர்கள் தங்கள் சுயரூபமடைந்து கந்தக்குழந்தையை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.
கார்த்திகை தேவியர்கள் நட்சத்திரங்களாக மாறுதல்
பார்வதிதேவி தன் மகனை வளர்த்த கார்த்திகை தேவியரை தன் மகனை தன்னிடமே ஒப்படைத்து விட வேண்டும், என்றாள். சிவபெருமான் அப்பெண்களைத் தேற்றி அந்த ஆறுபேரும் ஒருங்கிணைந்து ஒரு நட்சத்திரமாக மாறுபாடு ஆசீர்வதிக்க, அவர்களும் விண்ணில் ஜொலிக்கத் துவங்கினர்.
பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு சிவனும் பார்வதியும் கைலாயமலை வந்தார்கள்.
Comments
Post a Comment