கந்த புராணம் : பகுதி 7 A

கந்தபுராணம் : பகுதி 5Aகந்த புராணம் : பகுதி 5B
கந்தபுராணம் : பகுதி 6 Aகந்தபுராணம் : பகுதி 6 B

பாலமுருகனின் குறும்புகள்

கயிலையில் சிவன் பார்வதி தம்பதியினருக்கு தங்கள் இரு குழந்தைகளுடன் இனிதே பொழுது கழிகிறது. அண்ணனை போல தம்பி முருகனும் படு சுட்டி. ஆறு தலைகளிலும் அணிந்திருந்த கிரீடங்களின் ஒளியை தேவர்களின் கண்கள் கூசும்படி அங்குமிங்கும் திருப்புவது என்ன; தாயின் மடியிலிருந்து தந்தையின் மடிக்கு தாவி அவருடைய உடுக்கையை எடுத்து ஓசை முழங்க ஒலிப்பதென்ன; அவர் கையில் ஏந்தியுள்ள கனலை அவர் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கொண்டே அணைப்பது என்ன! தலையில் அணிந்துள்ள இளம்பிறையைக் கையாலெடுத்து அவருடைய கழுத்தில் நெளிகின்ற பாம்பின் வாயிலிட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று ஒரு பரிசோதனை. பின் அவர் கையில் ஏந்தியுள்ள மானுக்கு, சடையினின்று அறுகம்புல்லை எடுத்து உண்ணக் கொடுக்கலாமே என்று ஒரு குறும்புத்தனமான எண்ணம். பிறகு அதை செயல் படுத்துவதுமாய் சரியான துறுதுறுப்பு.

ஆமாம், தாயை மட்டும் இத்தகைய சேஷ்டை செய்யாமல் விடலாமா? அவளுடைய கொண்டையிலிருக்கும் பிறைச்சந்திரன் போன்ற அணிகலனை எடுத்து தந்தையின் சடையிலிருக்கும் பிறைச்சந்திரனுடன் இணைத்தால் என்ன நடக்கும்? பரிட்சை செய்தபோது அது முழுமதியாக காட்சி அளிக்க, சிவபிரான் சடையில் அணிந்துள்ள பாம்பு அதனை உண்பதற்காக ஓடோடி வருவதை கண்டு மகிழ்கிறான்.

இதெல்லாம் போதாமல் பூலோகம் வந்து கடல்களில் குதித்து திமிங்கலங்களை பிடித்து விளையாடி மகிழ்கிறான். ஏழு கடல்களை கலக்கி அவற்றை ஒரே கடலாக மாற்றுவது; இந்திரனின் வில்லான (இந்திர தனுசு) வானவில்லை எடுத்து அதன் நாண் மீது அமர்ந்து அந்தரத்தில் பறப்பது: இத்தகைய சேஷ்டைகள் தேவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எமன், வருணன், சூரியன், அக்னி, குபேரன், வாயு ஆகியோர் பொறாமைப்பட்டு, ஒன்று சேர்ந்து இந்திரனிடம் முருகன் செய்யும் சேஷ்டைகள் பற்றி கூறினர். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, இந்திரன் மனதில் வஞ்சம் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் முருகனை அடக்கி வைக்க தன் ஐராவதம் யானை மீதேறி புறப்பட்டான். அவர்கள் மேருமலையை அடைந்த போது, அதன் சிகரங்களை பாலமுருகன் லாவகமாக கிள்ளி எறிந்து பந்தாடிக் கொண்டிருந்தான்.

தேவர்களின் ஆணவத்தை அடக்கிய வேலன்

ஆத்திரம் கொண்ட தேவர்கள் ஆவேசத்துடன் சிறுவனான முருகனை மிரட்டினார்கள். 'இதோடு நிறுத்திக் கொண்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம்,' என்று மிரட்டினர். வேலன் அந்த வாய்ச்சொல் வீரர்களின் மீது சிகரத்தின் ஒரு பகுதியைப் பிடுங்கி வீசி எறிந்தான். தேவர்கள் சிதறியடித்து ஓடினர். தேவேந்திரன் அம்புமாரி பொழிந்தான். அவையெல்லாம் மலர்மாலைகளாகி கந்தனின் கழுத்தில் விழுந்தன. முருகன் தன் கையிலிருந்த ஒரு அம்பை குறி வைக்க, அது தேவவேந்திரன் வீற்றிருந்த ஐராவதம் யானையின் மத்தகத்தை குத்திக் கிழித்தது. அது அலறியபடியே விழுந்து இறந்தது. யானை மீதிருந்த இந்திரன் தரையில் உருண்டான். இதைப் பார்த்து கந்தன் கைகொட்டி சிரித்தான். இந்திரனுக்கு ஆத்திரம் அதிமாகி தன் வஜ்ராயுதத்தை வடிவேலன் மீது எறிந்தான். அதை அவன் சுக்கு நூறாக்கினான். அனைத்து ஆயுதங்களும் தீர்ந்து போகவே நிர்க்கதியான தேவர்கள் உயிர்பிழைக்க ஓடினர். அவர்களின் பலரைக் கொன்றான் வடிவேலன்.

முருகனின் விஸ்வரூப தரிசனம்

தேவர்கள் தங்கள் குரு பிரகஸ்பதியிடம் ஓடி தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். நடந்த விபரத்தை தன் ஞானத்தால் அறிந்த குரு, சிவமைந்தனிடம் மோதியது அவர்கள் தவறு என்று உணர்த்தி அவர்களை முருகனிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். இதனால் பாலமுருகன் சினம் தணிந்து, இறந்த தேவர்களை உயிர்பெறச் செய்தான். அவர்களின் ஆணவத்தை அழித்து, தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதத்தில் ஆறுமுகங்களும், 12 கைகளும் விண்ணுயரம் உயர விஸ்வரூப காட்சி தந்தான். விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், 'தேவர்களே கலங்க வேண்டாம். எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான். தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன்,' என்றான்.

அறுமுகனுக்கு ஓர் ஆட்டு வாகனம்

இதற்கு நடுவில் சிவன் நாரதரை ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கட்டளை இட்டார். சமித்துகளும், உரிய பொருட்களும் இடப்பட்டு யாகத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மந்திர உச்சரிப்பு மாறுபட்ட காரணத்தால் யாகாக்னினியின்று செல்வானம் போன்ற நிறத்துடன் ஓர் ஆட்டுக் கடா எழுந்தது. அந்த ஆடு தன்னினத்தையே யாகத்திற் கொல்கின்றனர் என்று வெகுண்டது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து பெரிய கொம்புகளுடன் யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓடின. உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர்.

தகவல் அறிந்த முருகப் பெருமான் வீரபாகுவை அனுப்பினார். அவனும் ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக அழுத்திப் பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார்.

திகைத்த நாரதரிடம் நாரதரே ! நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. மனமார்ந்த பக்தியுடன் அளிக்கும் சிறு காணிக்கை எனக்கு போதும். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும், என்றார். நாரதர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இதன்பிறகு கைலாயம் திரும்பினார் முருகன்.

கந்த புராணம் : பகுதி 7 B

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே