கந்த புராணம் : பகுதி 7B

கந்தபுராணம் : பகுதி 6 Aகந்தபுராணம் : பகுதி 6 B
கந்த புராணம் : பகுதி 7 A

முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தது

ஒரு சமயம் தேவர்களுடன் சிவனைக் காண வந்த பிரம்மன், அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க, தான் மட்டும் இவன் சிறுபிள்ளை தானே என்ற மிதப்பில் குமரனை வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். தாமும் சிவமும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் ஒன்றே என்பதை உலகிற்கும் பிரம்மனுக்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து ‘நீவிர் செய்யும் தொழில் யாது?’ என்றார்.

'படைக்கும் தொழில்,' என்றவரிடம் 'வேதங்கள் தெரியுமா உங்களுக்கு?' என்று கேட்க, பிரம்மன் ரிக் வேதம் பற்றி விளக்கும் பொருட்டு ஓம் என்று கூற ஆரம்பித்தார். 'ஓம் என்பதன் பொருள் என்ன?' என்றான் குழந்தை வேலன். பிரமன் தடுமாறுவதைக் கண்டு, 'இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது' எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.

திருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவபெருமான் சிறுநகை பூத்தார். 'பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான்' என்று உணர்ந்து நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாத முருகனை எம்பெருமான் அனைவருடனும் காணப் புறப்பட்டார்.

‘ஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன்,' என கூறிய முருகன் பிரமனை விடுவித்து பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.

சிவபெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது 'அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம்,' என்றார்.

நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு உடனே இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார். தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார் தகப்பன்சாமியாகிய முருகன். இந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்.

மாலின் கண்ணீரில் இரு பெண்கள்

இந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி 'நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம்' என்றருளினார்.

அமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்.

திருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்டார். அப்பார்வையால் அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

முருகன் யுத்தத்திற்கு கிளம்புதல்

முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார்.

சிவபெருமான் முருகனது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார். பார்வதிதேவி தன் மகனைத் தழுவி, 'பாலகனே! நீ பகைவர்களை அழித்து, வெற்றி வேலனாக திரும்பி வா,' என ஆசியளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு, சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். பிரம்மரிஷி வசிஷ்டரும், தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா, முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள், யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின. சூரர்கள் ஆட்சி செய்யும் மாயாபுரி பட்டணத்தை அடையும் முன்பாக ஒரு பெரிய மலையை படைகள் அடைந்தன.

அது தான் கிரௌஞ்ச மலை என்ற தாரகாசுரனின் நண்பன். மலை வடிவில் இருக்கும் கிரௌஞ்சம் உண்மையில் ஒரு பறவை, அகத்தியரின் சாபத்தால் மலை வடிவானது. சூரபத்மன் அரசோச்சிய காலத்துக்கும் நெடுங்காலத்துக்கு முன்பாகவே தோன்றியவன் கிரௌஞ்சன். அவன் கொடியவன், பற்பல மாயங்களைச் செய்வதில் வல்லவன். ஒரு சமயம் மாமுனிவர் அகத்தியர் தன் வழியில் வந்தபோது மலை வடிவில் இருந்து மாயம் செய்து அவரைத் துன்புறுத்தினான். கோபம் கொண்ட அகத்தியர், அவனை மலையாகவே எப்போதும் இருக்கும்படிச் சபித்துவிட்டார்.

கந்த புராணம் : பகுதி 8 A

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே