கந்த புராணம் : பகுதி 8 A

கந்தபுராணம் : பகுதி 6 Aகந்தபுராணம் : பகுதி 6 B
கந்த புராணம் : பகுதி 7 Aகந்த புராணம் 7B

தேவியிடம் முருகன் பெற்ற வேல்

சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான். தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் முருகனை அழைத்து, சூரர்களை வென்று தேவர்களை காப்பாய் என்று ஆணையிட்டார். அதன் பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். முன்னர் பார்வதி தேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்களிலிருந்து வந்த நவசக்திகளின் வயிற்றில் தோன்றிய வீரவாகுதேவர் முதலான லக்ஷத்து ஒன்பது வீரர்கள் முருகனின் படைவீரர்களாயினர். பிறகு பார்வதியும் தன் மகனுக்கு பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தை அளித்தாள். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை சிக்கலில் இன்றைக்கும் ஐதீக விழாவாக நடத்துகின்றனர்.

கிரௌஞ்சகிரி மீது படையெடுப்பு

அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறித் தெற்கு நோக்கிச் செல்கிறான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்டு வரும் தாராகாசுரன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்கிறான். கிரௌஞ்சகிரி கடலோரத்தில் அமைந்திருக்கும் மலை. தாரகன் கிரௌஞ்ச மலை அருகில் அரண்மனை கட்டிக்கொண்டு தனது பெரும் படை வீரர்களுடன் வாழ்ந்து வந்தான். அதைத் தாண்டி கடலுக்குள் இருக்கும் தீவில் இருந்த மகேந்திர மலையில் சூரபத்மன் மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்தான். அதனால் கிரௌஞ்சனின் மாளிகை சூரபத்மனுக்குக் காவல் கோட்டையாக இருந்தது.

முருகன் சூரன் மீது படையெடுத்து வருவதை அறிந்த தாரகன், அவரை எதிர்த்து வந்தான்.

வீரபாகு தூது

இதைக்கண்ட முருகன் வீரபாகுவைத் அழைத்தார். 'வீரபாகு! என்னால் அடியார்களுக்கு ஏற்படும் துன்பத்தை கண்டு சகிக்க இயலாது. முதலில், இந்த தாராகசுரனை ஒழிக்க வேண்டும். நீ உடனே துணைப் படைத்தலைவராக தம்பி வீரகேசரியை நியமித்து, தாரகனின் கோட்டைக்குள் செல். நான் பின்னாலேயே கிளம்பி வருகிறேன்,' என்றார். வீரபாகு படைகளை கணப்பொழுதில் ஆயத்தப்படுத்தி, தாரகனின் கோட்டை நோக்கி புறப்பட்டான்.

மகேந்திரபுரியில் அபசகுனங்கள்

இந்நேரத்தில், அசுரர்கள் வாழ்ந்த மகேந்திரபுரி பட்டிணத்தில் அபசகுனங்கள் தோன்றின. கழுதைகள் கத்துவது போல மேகக்கூட்டங்கள் சப்தம் எழுப்பின. வானத்தில் இருந்து ரத்த மழை பெய்தது. நரிகள் காரணமின்றி ஊளையிட்டன. மேகம் சூழ்ந்ததால் சூரியனைக் காணவில்லை. அசுரர் வீட்டுப் பெண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து அலங்கரிக்கச் சென்ற போது, தங்கள் கணவன்மாரின் தலையற்ற உடல்கள் கண்ணாடியில் தெரிவது போல் கண்டு அலறினர். இவையெல்லாம் தங்கள் நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரப்போகிறது என்பதை உணர்ந்தனர் அசுரர்கள்.

வீரபாகு-தாரகன் மோதல்

வீரபாகுவின் படைகள் தடுத்த வாயிற் காவலர்களையும் மீறி கோட்டைக்குள் சென்று விட்டன. இந்த தகவல் தாரகனுக்கு கிடைத்து, அவன் உடனடியாக போர் முரசறைந்தான். கையில் பல்வேறு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு தாரகனின் படைகள் தேவ படைகளுடன் மோதின. வீரபாகுவை ஒழித்துக் கட்ட தாரகனே நேரில் போர்களத்துக்கு வந்து விட்டான். அவனை துணைத்தளபதி வீரகேசரி எதிர்த்தான். இருவரும் அம்பு மழை பொழிந்தனர். தாரகன் விடுத்த அம்புகளை வீரகேசரி தன் அம்புகளால் அடித்து நொறுக்க, பதிலுக்கு வீரகேசரி விடுத்த அம்புகளை தாரகன் தன் கதாயுதத்தால் அடித்து நொறுக்கி விட்டான். ஒரு கட்டத்தில் வீரகேசரி மீது அதிபயங்கர அம்புகளை ஏவினான். அவற்றை தடுக்க முடியாத கேசரி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

நிலைமையைப் புரிந்துகொண்ட வீரபாகு தாரகனின் முன்னால் வந்தான். தாரகா மரியாதையாக சரணடைந்து விடு. என எச்சரித்தான். தாரகன் நகைத்தான். “உன்னை என் ஒரே அம்பில் மாய்த்து விடுவேன். சிறுவன் என்பதால் விடுகிறேன். ஓடி விடு” என எச்சரித்தான். வீரபாகு பயங்கரமாக சிரித்தான். அம்பு மழை பெய்யச் செய்தான். எதற்கும் கலங்காத தாரகன் தன் தும்பிக்கையாலேயே அத்தனையையும் நொறுக்கிவிட்டான்.

தாரகன் வீரபாகு மீது ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை எய்தான். இந்த அம்பு எய்யப்பட்டால் அந்த இடம் தீப்பிடித்து நாசமாகி விடும். பதிலுக்கு வீரபாகுவும் அதை விட சக்தி வாய்ந்த ஆக்னேய அஸ்திரத்தை எய்தான். தாரகன் விடுத்த அம்பால் எரிந்த தீயை வீரபாகுவின் அம்பு உருவாக்கிய தீ அணைத்து விட்டது. இப்படியாக வாருணம், ஸெளரம், நாராயணாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களால் இருவரும் போரிட்டனர். எதற்கும் பணியாத தாரகனை நோக்கி வீரபத்திரம் என்ற அஸ்திரத்தை வீரபாகு எய்தான். நெருப்பு ஜூவாலையைக் கக்கிக் கொண்டு அது தாரகனை நோக்கிப் பாய்ந்தது. அதன் உக்கிரத்தை தாரகனால் தாங்க முடியவில்லை.

வீரபாகு கிரவுஞ்ச மலைக்குள் சிறைபடுதல்

வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன் அங்கிருந்து தப்பித்தால் போதுமென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு ஒரு குகையில் ஒளிந்திருந்தான். அவனைக் கொன்றாக வேண்டும் என்ற முருகனின் கட்டளை வீரபாகுவை உந்தித்தள்ளவே அவன் கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றதும் பொறியில் சிக்கியது போல மாட்டிக் கொண்டான். இவனுடைய வருகைக்காகவே காத்திருந்த கிரவுஞ்சமலை தாரகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தன் வாசலை மூடிக் கொண்டது. ஒரே இருள் கண் தெரியாமல் திண்டாடினான் வீரபாகு. முருகனைத் தியானித்தான். உள்ளே சென்ற வீரபாகு வெளியே வராதது கண்டு தேவப்படைகள் வெளியே வருந்தி நின்றனர்.

வீரகேசரியும் லட்சம் பூதகணங்களும் குகைக்குள் புகுந்து வீரபாகுவை மீட்கச் சென்றனர். படைகள் தன்னருகே வந்ததும் கிரவுஞ்ச மலை தன் வாசலை மிகப்பெரிய அளவில திறந்து, அவர்கள் உள்ளே புகுந்தவுடன் லட்சம் பேரையும் உள்ளடக்கி வாயை மூடிவிட்டது. இருளில் படைகள் திணறின. இதுதான் சமயமென வெளியே நின்ற தேவப் படைகளை அசுரர்கள் துவம்சம் செய்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

தாரகன் வேறொரு வாசல் வழியாக வெளியேறி அட்டகாசமாக 'வீரபாகுவை ஒழித்து விட்டேன்!' என கொக்கரித்தான்.

கந்த புராணம் : பகுதி 8 B

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே