அற்றைக் கிரை — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song atraikku irai (அற்றைக் கிரை) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"அற்றைக் கிரை தேடி" என்று தொடங்கும் காஞ்சி மாநகர் திருத்தலப் பாடல். எளிமை போல் தோன்றும் வலிமையான பாடல். ஞானச் சாற்றினை அல்லவா பிழிந்து தருகிறார்! அது அருணகிரிநாதரின் அனாயாசம். சுற்றி வளைக்காமல், முதிர்ந்த, முழுமையான வெற்றிக் கனி பறிக்க வேலனை வேண்டும் பாடல். இகத்திலிருந்து பரத்துக்கு ஏற்றிவிடும் பாடல். இப்படித் திருப்புகழ் எங்கும் மணம் மிகுந்த ஞானப் பூக்களைத் தூவி விடுகிறார் அருணகிரிநாதர். நம் மனதும் மணம் பெறுமோ!

அற்றைக் கிரை தேடி

என்ற வரிகளோடு, "நித்தம் தேடிச் சோறுண்டு" என்று, உண்பதும் உறங்குவதுமாய், உயர் சிந்தனை ஒன்றும் இல்லாமல் இருப்போரைப் பாரதியார் நிந்தனை செய்வதை ஒப்பிடலாம்.

அற்றைக் கிரை தேடி
அத்தத்திலும் ஆசை

விளக்கம்: அன்னமய கோசமாக இந்த உடல் இருப்பது உண்மைதான். இது வளர்வதற்கு உணவு தேவைதான். ஆனால் நித்தம், நித்தம் அப்படி உணவு மட்டும் தேடி உண்டு கொண்டிருந்தால், விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடே இல்லையே! அதுவே வாழ்வு இல்லையே! அந்த உணவைத் தேடப் பொருள் ஈட்டும் பொழுது, அர்த்தமில்லாமல், அந்த அர்த்தமாம் பொருள்மேல் ஆசை பாய்ந்து விடுகிறதே! அந்தப் பொருள் ஆசை, மற்ற வேண்டாத ஆசைகளாய், வேரோடிக் கிளைத்தத தழைத்து விட்டால் என் செய்வேன் வேலவா?

பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ

விளக்கம்: இந்த ஆசைகளை எல்லாம் உடும்புப் பிடியாய்ப் பற்றிக் கொண்டு தொங்குகிறதே மனது!அது பற்றிக் கொண்டு தொங்கும் கிளை ஒருநாள் சடசடவென்று முறியுமே! அப்பொழுது "நான்" என்பது என்ன ஆகும்? ஆழம் காணமுடியா அதல பாதாளமாம் சம்சாரத்தில் விழும்! ஜனன மரணச் சுழலில் சிக்கித் தவிக்கும்! இந்த நிலையற்ற பற்றினை விட்டுவிட்டு, நிலையான உன் சரணங்களைப் பற்றிக் கடைத்தேற அருள் புரிவாய் சரவணபவா!

வெற்றிக் கதிர்வேலா
வெற்பைத் தொளை சீலா

விளக்கம்: உடலில் சிக்கியிருக்கும் உயிர் படும் அவதிகளும், போராட்டங்களும் அனந்தம். அவற்றுடன் போராடி வெற்றி பெற வேண்டுமானால், ஒளிவீசும் வேலுடன் நீ வரவேண்டும். அன்று கரெளஞ்சம் துளைத்தது போல் என் பற்றுக்களைத் துளைத்துத் தூளாக்க வேண்டும்.

கற்று றுணர் போதா
கச்சிப் பெருமாளே

விளக்கம்: அரிய நூல்கள் சொல்லும் வேத வேதாந்த சாரம் கற்று, ஞானம் பெற்று, த்யானத்தில் நிலைப்போரால் உணரப்படும் , உண்மைப் பொருளே! பக்தர்களுக்குக் கருணை காட்ட வேண்டுமென்றே காஞ்சிபுரம் என்னும் புனித பூமியில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம்.

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே