முன்னுரை
"நச்சரவ மென்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மற்றுமொரு அகத்துறைப் பாடல்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனைத் தலைவனாகவும், முருக பக்தனை தலைவியாகவும் உருவகம் செய்துச் செந்தமிழ்த் தேனாய் மலரும் திருப்புகழ் பாடல். முருகனுக்காக பக்தன் ஏங்கும் ஏக்கத்தை ஓரளவுக்குக் காட்டுகின்ற வழிமுறை தான் இந்த அகத்துறை. சிற்றின்பம் சொன்னால் "சட்"டெனப் புரிந்துவிடுவதாலே இதைச் சொல்லிப் பேரின்ப நிலைக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி. திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னால் தானே மனித மனம் திருந்துகிறது! அதனால், வெவ்வேறு பாடல்களில், வெவ்வேறு விதமாகச் சொல்கின்ற நயம்.
தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த தனதான
எனத் துள்ளி வரும் சந்தம். அதில் புகுந்து விளையாடும் அருணகிரியாரின் தமிழ்த் தென்றல்.
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ் களங்க மதியாலும்
விளக்கம்:
உன்னைப் போய் அமுதைப் பொழியும் நிலவு என்றார்களே! இன்று தலைவன் இங்கில்லாத நிலையில், நீ நஞ்சை அல்லவா உமிழ்கிறாய். கறைபடிந்த மதியே!. நச்சரவம் என்று பெயர் கொண்ட கேது (ராகு) கிரகம் உன்னை தீண்டித் தின்றுவிட்டதாலே, அதற்கு பழிவாங்குதல் போல் என் மீது நஞ்சை உமிழ்வது என்ன நியாயம்?
நத்தொடு முழங்க னத் தொடு முழங்கு
நத்தினை வழங்கு கடலாலும்
விளக்கம்: ஆனந்த அலை வீசி இன்ப கீதம் இசைக்கும் கடலே! நீயும் ஏன் இன்றுமாறி விட்டாய்! உன்னில் விளைந்த சங்கின் இரைச்சல் ஒருபக்கம், இடிமுழக்கம் கேட்டு நீ பொங்கும் பொறுக்க முடியா சத்தம் ஒரு பக்கம், எனத் துயர அலைவீசித் துடிக்க வைக்கின்றாய்.
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே
விளக்கம்:
நான் பக்தி என்றால் என்னவென்று தெரியாதவள் தான், ஞானம் என்னவென்று புரியாதவள் தான். ஆனால் உன்மீது பித்துக் கொண்டவளாய் இருக்கும் இந்த ஆசைக்குப் பெயர் என்ன கந்தா! இந்த மட்டற்ற ஆசையாலே இந்த ஏழை உனக்காக உருகி மெலிவதைப் நீ பார்த்திருப்பாயோ முருகா!
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி
இத்தனையில் அஞ்சலென வேணும்
விளக்கம்:
உன்னைக் காண்பதற்காக என் மனம் ஏங்கும் ஏக்கமென்ன! அதற்காக நான் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எத்தனை எத்தனை! உன்னைத் தேடும் என்னை நீ தேடி வந்து "அஞ்சேல் " எனச் சொல்லி ஆட்கொள்ள மாட்டாயா!
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை
பச்சை மலை எங்கும் உறைவோனே
விளக்கம்:
அன்றொரு நாள் உன் எழிலான பச்சை மயிலில் ஏறி வந்து, பச்சை நிறப் வேடுவர்குலப் பெண் மயிலாம் வள்ளியைத் தேடி, பசுமை கொழிக்கும் தினைப்புனம் எங்கும் அலைந்து திரிந்த பரம தயாளன் அல்லவா நீ.!
இன்று இந்த ஜீவாத்மாவுக்கும் இரக்கம் காட்டலாகாதா!
பத்தியுடன் நின்று பத்தி செயுமன்பர்
பத்திர மணிந்த கழலோனே
விளக்கம்:
பக்தர்கள் அர்ப்பணிக்கும் பூ, இலை, கனி போன்ற எளிய காணிக்கைகளைக் கூட விருப்புடன் ஏற்றுக் கொள்ளும் கருணை வடிவே! வடிவேலா!
கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு
கச்சியில் அமர்ந்த கதிர்வேலா
விளக்கம்:
எழிலால் மயக்க நினைக்கும் பெண்களை எல்லாம் கசப்பான பொருட்களாக வெறுத்து ஒதுக்கிவிட்டு , உன்னையே விரும்பும் ஞானியர்க்குக் கரும்பாய் இனிக்கும் கதிர்வேலா! காஞ்சியின் தலைவா!
கற்பக வனங் கொள் கற்பக விசும்பர்
கைத்தளை களைந்த பெருமாளே
விளக்கம்:
கற்பகக் சோலைகள் நிறைந்த விண்ணுலகில், வேண்டியதையெல்லாம் பெற்றுச் சுகத்தில் மிதந்த தேவர்களை சூரபன்மன் என்னும் கொடியோன் சிறை எடுத்து வாட்டிய பொழுது, அவர்கள் வேண்டுதலை ஏற்று, விரைந்து வந்து, அவர்கள் விலங்குகளை அறுத்தெறிந்து விடுதலை செய்த வெற்றி வேலாயுதா! சரணம்.
Comments
Post a Comment