முன்னுரை
எழுபிறவி என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல். திருத்தல யாத்திரை சென்று அந்தந்தத் தலங்களின் முருகனை திருப்புகழ் பாடல்களால் போற்றி வணங்கிய அருணகிரிநாதர், தல யாத்திரை முடித்துக் கொண்டு , திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், ஆர்வம் அடங்காமல், முருகனைப் பாடிய பாடல்கள், பொதுப் பாடல்களில் அடங்கும்.
எழுபிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைகளே முளைத்து வளர் மாயை
விளக்கம்: எண்ணிப் பார்த்தால், 'நான்' 'நான் " என்று உறவு கொண்டாடும் இந்த உடல் என்பது என்ன? நீர் சூழ்ந்த இந்த உலகம் என்னும் நிலத்தில், இருவினைகள் புரிந்த காரணத்தால் வந்து பிறந்துவிடுகிறது. எந்தப்பிறவியிலும், அந்த வினைகளையே வேராகப் பற்றிப் படர்ந்துவிடுகிறது. இதில் முளைகளாக வந்ததெல்லாம் துயரம் அன்றி வேறெதுவும் இல்லை. மாயையால் அல்லவா இது மேலும், மேலும் வளர்கிறது !
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து
இருள் இலைகளே தழைத்து மிக நீளும்
விளக்கம்: இந்த மாயை, பிறவி பிறவியாய், பிரம்மாண்டமாய், கிளைகளைப் பரப்பிக்கொண்டு நிற்கிறது. ஆசைகள் என்னும் தளிர்கள் ஒவ்வொன்றாய், ஒவ்வொன்றாய், பின் கூட்டமாய், துளிர்விட்டு அடர்ந்து கிடக்கின்றன. அதனால் அஞ்ஞான இருள் மண்டிவிடுகிறது. இது முடிவில்லாத இருள் என்று தெரியாமல், நிழல் என்று ஏமாந்து நிற்கிறோம்.
இழவு தனையே பிடித்து மரணபழமே பழுத்து
இடியுமுடல் மாமரத்தின்
விளக்கம்:
இதில் அரும்பி கட்டிப் பூக்கும் வண்ண மலர்கள் என நாம் எண்ணிக் கொண்டிருப்பதெல்லாம், உதிரும் காலத்தின் எண்ணிக்கை அல்லவா. இறுதியில் இது காயாகிக் கனிவது என்பது இறப்பு என்னும் பழம் அல்லவா. அப்பொழுது இந்த உடல் என்னும் மரம் விழுந்து விடுமல்லவா. இதையா இனிய கனிகள் தந்து கொண்டேயிருக்கப் போகும் இணையில்லாத மரம் என எண்ணியிருந்தேன்!
அருநிழல் இசையில் விழ ஆத பத்தி அழியுமுனமே எனக்கு
இனியதொரு போதகத்தை அருள்வாயே
விளக்கம்: ஆஹா, என்னவொரு அருமையான உடல், எத்தகையதொரு நிழல் எண்ணி இறுமாந்து அனுபவித்த சுகம் எல்லாம் ஒருநாள் முடிந்துபோக, உருமாறிக் குணம் மாறி இந்த உடல் என்னும் குடை ஒரு அர்த்தமே இல்லாமல் வீழ்ந்து போவதற்கு முன்னால், என்னைக் காக்க வந்து விடு குமரா. ஞான உபதேசம் என்னும் விளக்கேற்றி என் அஞ்ஞான இருளை அறவே போக்கி விடுவாய்.
வழுவு நெறி பேசு தக்கனின் இசையுமக சாலையுற்ற
மதி இரவி, தேவர் வஜ்ர படையாளி
மலர்க் கமல யோனி சக்ர வளை மருவு பாணி
விக்ரமறைய எதிர் வீர உக்ரர்
விளக்கம்: தனக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமலே, யாகம் நடத்திய தட்சனின் பண்பு கெட்ட செயல் கண்டு கொதித்து, அந்த யாகசாலைக்குக் சென்று, அங்கு குழுமியிருந்த, சூரியசந்திரர், இந்திரன், பிரம்மை, சக்ரதாரியான திருமால், இவர்களின் பராக்ரமெல்லாம் ஒன்றுமில்லை என்னும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாய் உக்ரமாய், தட்சனை அழித்த சிவபெருமானின் தவப்புதல்வா, முருகா.
அழகிய கலாப கற்றை விகடமயிலேறி
எட்டு அசலமிசை வாகையிட்டு வரும் வேலா
விளக்கம்: வண்ணத் தோகை விரித்து, எழில் வீசிப் பறந்து வரும் ஏறுமயில் ஏறி, எட்டுத் திக்கிலும் உள்ள மலைகளில் எல்லாம் உன் வீரமுழக்கம் எதிரொலிக்க வரும் வீரா, அதிதீரா, ஆறுமுகா!
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி
அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே
விளக்கம்: அன்று மிக வலிமையானது தம் படை என்று இறுமாந்த சூரன் படை அழித்து, தேவர் உலகம் மீட்டுத் தந்த வெற்றிவேலாயுதா சரணம்
Comments
Post a Comment