கறை இலங்கும் : J R கட்டுரை
To read the meaning of the song karai ilangum (கறை இலங்கும்) in English, click the underlined hyperlink.
முன்னுரை
கறை இலங்கும் என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தப் பாடல். ஒரு புறம் ஒளிமயமாய் நிற்கும் முருகன். மறுபுறம், இருள் மண்டிய, தீய குணங்கள் நிரம்பிய மனதுடன் இருக்கும் மனித குலம். தன்னை அந்த மனிதர்களில் ஒருவராகவே நிறுத்திக் கொண்டு. மனிதர்களின் சார்பில் முருகன் என்னும் ஒளிவெள்ளத்தில் திளைக்க விரும்பும் அடங்காத் தாகத்தை இந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறார் அருணகிரியார். இந்த ஆன்மிக தாகம் தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் என உறுதியாய்ச் சொல்கிறார். தமஸ்,ரஜஸ் என்பவற்றை விடுத்து, சாத்வீக குணத்தின் பக்கம் சென்று விடுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்.
கறை இலங்கு உக்ர சக்தி தரிக்கும் சரவணன்
சித்தத்துக்குள் ஒளிக்கும் கரவடன்
கொற்றக் குக்குடவத்தன்
விளக்கம் : உக்ர தாண்டவமாடி பகைவர் ரத்தம் குடித்து, அந்த உதிரக் கறையையே வெற்றிச் சின்னமாகக் கொண்டிருக்கும் சக்திவேலை தாங்கி இருக்கும் சரவணன். பக்தர் மனதைக் கொள்ளை அடித்து, அங்கே ஒளிந்திருக்கும் கள்வன். வெற்றி முழக்கம் செய்து வரும் கோழிக் கொடி ஏந்திய கொற்றவன்.
தனி வீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழனி மன் கச்சிக் கொற்றவன் மற்றும்
கடக வஞ்சிக்குக் கர்த்தனெனச் செந்தமிழ் பாடி
விளக்கம் : ஒப்பற்ற வீரக்கழல் அணிந்த தாமரைப் பாதங்கள், ஏறுமயில் ஏறி ஏழுலகமும் வெல்லும். நாகமலையாம் திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் பாதங்கள் என் போன்ற எளிய அன்பருக்கும் அடைக்கலம் தந்து, செந்தமிழில் திருப்புகழ் பாட வைத்தவை அல்லவா! பழனியில் அவன் ஞானக்கனியாகக் கனிந்து நின்று பக்தி என்னும் அமுதூட்டுகிறான். காஞ்சியின் குமரக்கோட்டத்தின் கொற்றவனாய் நின்று குவலயம் காக்கின்றான். மின்னும் வளை அணிந்த வஞ்சிக் கொடியின் மணவாளன். அவன் தந்த தமிழாலே அவனைப் பாடிப் பரவுவதே வாழ்க்கைப் பயணமாகட்டும்.
குறையிலன்புற்று குற்றமறுக்கும்
பொறைகள் தந்து அற்ப புத்தியை விட்டென்
குணமடங்கக் கெட்டு குணம் மற்றொன்றிலதான
குணமடைந்து
விளக்கம் : ஒரு நாளும் குறைந்து விடாத, கறையே படாத தூய அன்பை நான் உன்மேல் கொண்டிருக்க வேண்டும் முருகா . மற்றவர் குற்றங்களை மன்னிக்கும் மாண்பு வேண்டும். அவற்றைப் பெரிசு படுத்தும் சின்ன புத்தியை விட வேண்டும். அதே நேரம் குற்றத்தின் நிழல்படாமல் என்னைக் காத்துக் கொள்ளவும் வேண்டும். ரஜஸ், தமஸ் போன்ற குணங்களையும், அதன் விளைவுகளையும் விட்டொழித்து, தெய்வீகம் பொங்கும் சாத்வீக குணத்தை மட்டும் கைக்கொள்ளும் உயர்வு வேண்டும்.
எப்பற்றுக்களும் அற்றுங்
குறியொடும் சுத்தப் பத்தரிருக்கும்
குருபதம் சித்திகைக்கருள் சற்றும் கிடையாதோ
விளக்கம் : அனைத்து ஆசைகளும், அவற்றின் விளைவான பற்றுக்களும் அகன்று விட வேண்டும். இறை உணர்வு ஒன்றையே இதயத்தில் நிரப்பி, உன் பதம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்ட தூய பக்தரின் ஞான நிலைக்கு என்னைக் கொண்டு சேர்க்கும், உன் அருள் இந்த ஏழைக்கு என்று கிட்டும் என்று ஏங்கி இருக்கிறேன் குருபரா.
பிறை கரந்தைக் கொத்துப் பணி மத்தம்
தலை எலும்பு அப்புக் கொக்கிறகு அக்கம்
பிரமனன் எட்டற் கற்ற திருக்கொன்றையும் வேணி
பிறவு நின்றொக்கத் தொக்கு
மணக்கும் சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறும் கரும்பு அத் தக்கத்தருள்
விளக்கம் : ஆணவத்திற்கு எட்டாத அந்தப் பரமன் அன்புக்கு அடிபணியும் கருணை என் சொல்வேன். அவன் முடியின் வாசனையைத் தாங்கி நிற்கும் உன் அன்னையின் தாமரைச் சரணங்கள் அதற்குச் சான்றல்லவா! அவள் முக்கண்ணரின் கரும்பல்லவா! நெற்றிக்கண் கொண்ட நித்திலம் அல்லவா! பரதத்துவம் ஆனவள் அல்லவா! அந்த தத்துவ மார்க்கத்துக்குக் கொண்டு சேர்க்கும் அருள் அல்லவா!
நற்பங்கய வாவி
திறை கொளும் சித்ரக் குத்து முலைக் கொம்பு
அறியுமந் தத்தை கைக்கக மொய்க்கும் த்ரிபுரை
செம்பட்டுக் கட்டும் நுசுப்பின் திருவான தெரிவை
விளக்கம் : வளமான பங்கய வாவியில் எழிலாய் மலர்ந்திருக்கும் தாமரைகள் நாணும் அளவுக்குப் பெண்மையின் எழில் கொஞ்சும் ரூபிணி ஞானமே வடிவானவள். பச்சைக் கிளியைப் பாங்காய் ஏந்தி நிற்கும் பைங்கொடி. அக்னி கண்டம், சந்திர கண்டம், சூர்ய கண்டம் இவை மூன்றையும் தன் வசம் வைத்திருக்கும் திரிபுரை. சிவந்த பட்டாடை இடையில் மின்னச் செந்திருவாய் மங்கலம் பொங்கும் எழிலரசி
அந் துர்க்கி சத்தி எவர்க்கும்
தெரி அரும் சுத்தப் பச்சை நிறப் பெண் சிறுவ
தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே
விளக்கம் : அழகுக்கெல்லாம் இருப்பிடமான, துக்கத்தை எல்லாம் போக்குகின்ற துர்க்கை, பரபஞ்ச இயக்கத்தின் காரணமான பராசக்தி, எவருக்கும் எட்டாத சுத்த தத்துவமானவள். பச்சை நிறப் பார்வதியாள். இத்தகைய மகிமைகள் அனைத்தும் கொண்ட அன்னையின் செல்வப் புதல்வா. அடியாருக்கு சித்திகளை அள்ளி வழங்கி, இறுதியில் முக்திக்கு வழி காட்டும் முதற்பொருளே, முருகா, சரணம்
Comments
Post a Comment