முன்னுரை
அந்த ஆதிசக்தி நாயகி, போருக்குத் தயாராகும் செல்வப் புதல்வன் சரவணனுக்கு சக்திவேலாம் ஞானவேல் தந்து வாழ்த்தும் அற்புதமான பாடல். சிவசக்தி, தன் தாண்டவ ஜதிகளில் சிலம்புகளின் வேக கதிகளில் தீயோரைக் கலங்க வைப்பதை தீந்தமிழில் சொல்லும் பாடல், ஒருபுறம் தெய்வீகம், மறுபுறம் மானுடத்தின் மதியீனம், இறைவியை, இணையிலா வேலவனைத் தூய தமிழில் பாடிப் பக்தியில் திளைப்பதை விட்டு, அப்படியும், இப்படியுமாய், எப்படியெல்லாமோ வாழ்ந்ததை எண்ணி அருணகிரியார் வருந்தும் பாடல், மனித குலம் திருந்தத் தான் பாடுகிறார்.
கொம்பனையார் காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்குமப் பாடீர பூஷணநகமேவு
கொங்கையில் நீராவி மேல் வளர்
செங்கழுநீர் மாலை சூடிய
கொண்டையி லாதர சோபையில்மருளாதே
விளக்கம் : காதளவோடிய கண்கள் என்றும், பூங்கொடி போன்ற அங்க லாவண்யம் என்றும், அங்கே சந்தனக் குங்குமக் கலவையின் வாசம் என்றும், செந்தாமரை மலர்கள் சூடிய அழகிய கூந்தல் என்றும்,
பொதுமகளிரின் வனப்புக்குப் பொன் மகுடம் சூட்டும் புன்மையுடன் சேற்றிலே கிடந்த என்னை நீ சீண்டுவாயோ செந்திலின் தலைவா! நீ கை விட்டால் எனக்கு வேறு கதியும் உண்டோ கந்தா!
உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோ நமஎன நாளும்
உன் புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்நதிட வீணாள் படாதருள்புரிவாயே
விளக்கம் : தூய வானவர்கள் துதித்து மகிழும் தலைவா போற்றி, அடியார்கள் உள்ளத்தின் ஜீவ நாதமே போற்றி, நேயமுள்ள வள்ளியைத் தேடி வரும் தேவா போற்றி போற்றி _ என்று ஒருபொழுதும் வீணாகி விடாது,ஒருகணமும் உன் இரு சரணம் மறவாது உன் புகழை நான் பாட வேண்டும், பக்தியில் ஊறிய இதய மலர் எடுத்து,
ஆசார சீலனாய் உனக்கு அர்ச்சனை செய்ய வேண்டும், திருந்தி வருந்திய பின்னால் உன் திருவருள் பெருகிவரும் என்ற நம்பிக்கையை ஆதாரமாய் வைத்து வாழ்கிறேன் ஐயா!
பம்பரமே போல் ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரிகரசூலி
பங்கமிலா நீலி மோடி
பயங்கரி மாகாளி யோகினி
பண்டு சுரா பான சூரனொடுஎதிர்போர் கண்டு
விளக்கம் : அகிலத்துக்கே அன்னையல்லவா உன் அன்னை! அவள் அம்பரத்தில், அம்பலத்தில், அகங்காரம் அற்ற அகங்களில், நூபுரங்கள், நுண்ணிசையாய், இன்னிசையாய், ஒலிக்க பம்பரம்போல் ஆடி வருகின்றாள். வேதாள கணங்களின் தலைவியாய் சங்கரனுக்கு இணையாய் தாண்டவம் ஆடுகின்ற சங்கரி அல்லவா அவள்!யோக மார்க்கங்கள் காட்டுகிறாள். கரத்தில் சூலம் எடுத்து விட்டாலோ அந்த தூயவள், பயங்கர ரூபம் கொண்ட மாகாளியாய், வன துர்க்கையாய் நீலமணிச் சுடராய்த் தோன்றி தீமைகளைத், தீயோரைப் பந்தாடி விடுகின்றாள், அவர்கள் திரும்பவும் முளைத்து விடாதவாறு வேரோடு சாய்த்து விடுகின்றாள். மமதையில், மயக்கத்தில், மடமையில் உன்னை எதிர்த்துப் போர் தொடுத்து வந்த சூரரை முடிக்க இளஞ் சூரியனாய் நீ கிளம்பியபோது '
எம் புதல்வா வாழி வாழி
எனும்படி வீரான வேல் தர
என்று முளானேம மனோகரவயலூரா
விளக்கம் :
தன் அபரிமித ஆற்றலை எல்லாம் உள்ளடக்கிய தன் ஞானசக்தி வேலை உன்னிடம் தந்து, "செல்வ மகனே நீ வாழ்க வெற்றி மாலை சூடி வருவாயாக," என்று ஆசி வழங்கி அதன் மூலம் இந்த அகிலம் புரந்தவள் அல்லவா, தன்னிகரில்லா உன் தாய்! என்றும் எங்கும் நிலைத்து நிற்கும் சத்தியமே! மெய்ப்பொருளே! சரவணபவா! பக்தர் உள்ளத்து ஆடிவரும் அழகே! வயலூரின் வாழ்வே!
இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே அடியென்தனை
ஈடேற வாழ்வருள்பெருமாளே
விளக்கம் :
அன்பர்களிடம் கற்கண்டு பாகு போல், கனிரசம் தேன்போல் உரையாடும் இனியவா! வையம் வாழவென்று விசாகத்தில் வந்துதித்த தயாளா!என் சிந்தை நிறைக்கும் சுந்தரா செந்திலின் வாழ்வே! வளமே! என் கதியாவைனே!
காத்தருள் புரிய வருவாய்.
Comments
Post a Comment