மக்கட்கு கூற : J.V விளக்கவுரை
To read the meaning of the song makkatkku koora (மக்கட்கு கூற) in English, click the underlined hyperlink.
முன்னுரை
"மக்கட்கு கூற அரிதானது" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். சிவனார் மனம் குளிர ப்ரணவத்தின் பொருளை அவருடைய இரு செவியிலும் உபதேசம் செய்துவிட்டான் பால குமாரன். வேதனாராய் இருந்தும், அதன் சாரமான "ஓம்" காரத்தின் பொருள் தெரியாமல் பிரம்மன் இருந்தது, வெட்கமும், வேதனையும் தரும் விஷயம் என்று விட்டான்.
அந்த ப்ரணவப் பொருள்தான் என்ன?
அது ஏட்டிலே படிக்கக் கிடைப்பதில்லை. உடற் கூட்டின் தத்துவங்களுக்கும், புற உலகின் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது. அதையே உபதேசம் செய்து விட்ட முருகன்தான் பரப்ரம்மமான, முழுமுதற்கடவுள் என உணர்த்தும் பாடல். "நான்" என்பதெல்லாம் கரைந்த பின் கிடைக்கும் மோட்சமே அவன்தான் என அறுதியிட்டுச் சொல்லும் பாடல்.
"ஓம்" எனும் ப்ரணவ நாதம் வேத நாதமாக எங்கும் பரவி நிற்கிறது. அதன் அர்த்தத்தை நூல்களில் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்றால் முடிவதில்லை. புரிந்து கொண்டவர்கள் சொல்லிக் கொடுக்கலாமே என்றால், எந்தக் கல்வி முறையையும் கடந்ததாய் இருக்கிறது. ஏதாவது உவமை சொல்லி விளக்கலாமே என்றால், ஈடேதும் இல்லாத் தனித்துவமாய் நிற்கிறது. ஆன்மீகத் தேடலின் ஆழத்திற்கே சென்றாலும் கிடைப்பதில்லை. "இதுவா", "அதுவா"" என மனம் பரபரக்க, இல்லை என்பதே பதிலானது எந்தத் தத்துவ ஆராய்ச்சிகளுக்குள்ளும் விளக்கங்களுக்குள்ளும் அடங்காமல், அவற்றைக் கடந்து நிற்பது.
"உனக்குத் தெரிந்தால் சொல்லுக" என, அந்த கொன்ற மலரும், கங்கையும், கலைமதிப் பிறையும் சூடிய தந்தை கேட்டபொழுது, அவர் செவியில் அதை ஞான உபதேசமாக, அந்த ஞானக் குழந்தை சொன்ன அர்த்தம் அல்லவா அது! முக்திக்கே வித்து அதுதான் என்பதை மட்டுமே உணர முடிகிறது.
ஞானியர், யோகியர் தேடிக் கொண்டிருக்கும் அந்தப்ரணவப் பொருள், மூடர்களுக்கும், அவர்கள் விதண்டாவாதத்திற்கும் பிடிபடுமோ! எந்த வேதங்கள், அதை ஜீவநாதமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த வேதங்களுக்கே, அது எட்டவில்லை என்பது தானே நிதர்சனம். எனக்குள்ளே ஞானத்தின் மெல்லிய ஊற்று ஒன்றை அன்று திருவண்ணாமலையில் திறந்து வைத்த திருவருளே! உன்னிடமிருந்து அந்த உபதேசம் இந்த எளியனுக்கும் கிடைக்கச் செய்வாயோ பேரருளே!
தாமரைக் கண்ணனாம் அந்த சக்ரதாரியான திருமால் மெச்சிப் புகழ்கின்ற வகையில் ப்ரபஞ்ச இயக்கம் நடத்தும் அவர் அன்பான மருகனே.
புல்லென்றும், பூண்டென்றும், மலை என்றும், நதி என்றும் சிருஷ்டி விநோதம் நடத்தியவனே. அன்று பூத பைசாச கணங்கள் கரம் கொட்டிக் களிக்க, அலைகடல் நீரை வற்ற வைத்து, அதில் சூரனின் குருதி நிரம்பும் விதத்தில் உன் செந்தாமரைக் கரத்தால் வேலெறிந்த வீரனே! பச்சைக் கர்ப்பூரமும், சந்தனமும், குங்குமமும் குழைத்துப் பூசி சுகந்தம் வீசும் திண்தோள் தீரனே!
ஜகம் முழுவதையும், ஜனித்தவளாய் இருந்தும், கற்பு நிலைமாறாத எழிற் கன்னியாய், திருவிளையாடல் புரியும் அன்னை காமாட்சியின் அழகிய காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம்
Comments
Post a Comment