புடவிக்கு அணி துகில் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune.

For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : புடவிக்கு அணி துகில்

முன்னுரை

பன்னிரு கை வேலவனின் பால லீலைகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! அவன் நடத்திய அந்த நாடகங்களின் திருப்புமுனையாக அமைந்தது அவன் மேரு மலை விட்டுப் பழனிமலை வந்தது. அது பக்தர்களின் நம்பிக்கை மலையாய் உயர்ந்து என்றும் உலகத்தை காத்துக்கொண்டிருக்கிறது. இன்று பழனிமலையில் கூடும் கூட்டமே அதற்கு அத்தாட்சி. காரண காரியங்களைக் கடந்தவன் ஒரு காரணம் காட்டி பழனிமலை வந்ததைச் சொல்லும் அருமையான பாடல்.

புடவிக்கு அணி துகிலென வளர் அந்தக்
கடலெட்டையுமற குடி முனி எண் கண்
புநிதச் சததள நிலைகொள் சயம்புச் சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழி கனல் சிந்தி
கடினத் தொடு சில சிறுநகை கொண்டு
அற்புத கர்த்தர் அரகர பரசிவன் இந்தத்தனி மூவர்

விளக்கம் : நில மகளுக்கு அணிவித்த அழகிய நீல உடை போல் எட்டு திக்கும் பரந்து விரிந்த அனைத்துக் கடல்களின் நீரையும் குடித்து முடித்த அந்த குறுமுனி அகத்தியர், என் கண் உடையவராய் தூய நூறு இதழ்கள் கொண்ட தாமரை மீது தோன்றி அங்கேயே நிலை கொண்ட பிரம்மன், திரிபுர ஆணவ அசுரர்களை அழித்து முடிக்க நெற்றிக்கண் திறந்து நெருப்புப் பொறிகள் சீறி வர, சிரிப்பே நெருப்பாய் தகிக்க திரிபுரம் எரித்த சிவன்

இந்தத் தனி மூவரிட சித்தமும் தெளிவுறவும் பொற்
. செவியுட் பிரணவ ரகசியம் அன்புற்றிட
உறபனமொழி உரைசெய் குழந்தைகுருநாதா

விளக்கம் : இந்த மூவரும் தத்தம் செயல்களில் ஒப்பற்றவர்கள். அவர்கள் சித்தம் நிறையும் வண்ணம் பிரணவத்தின் பொருளை மிகத்தெளிவாக மிருதுவான மொழியில் அவர்களின் பொற் செவிகளில் சொல்லிக் குழந்தையிலேயே குருநாதன் ஆகிவிட்டவனே!

எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்கு
இடம் வைத்திட அவர் குல முழுதும் பட்டிட
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரியாவும்
பொடிபட்டு உதிரவும் விரிவுறு அண்டச்
சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து
அப்புறம் அப்பரவெளி கிடுகிடெனும் சத்தமுமாகப்
பொருது"

விளக்கம்: வலியத்தான் சண்டைக்கு வந்தார்கள் அந்த அசுரர்கள். தாங்கள் தான் ஜெயிப்போம் என்ற மிதப்பில் வந்தார்கள். அதில் ஒரு கிளை மிஞ்சினாலும் அகங்காரம் துளிர்த்து தழைத்து தலைவிரித்தாடும் என்பதால் , அவர்கள் குலத்தையே வேரோடு வெட்டி எறிந்துவிடுமளவுக்குப் பொங்கிய சினத்துடன் நீ அவர்களை தாக்கிய பொழுது ,அவர்கள் குல மலைகளாம் பல மலைகள் பொடிபட்டன. அண்டச் சுவர் அதிர்ந்து பிளவு பட்டது. அதற்கும் அப்பால் உள்ள பரவெளியே பதைத்தது போல் கிடுகிடுவென, இடியென ஒரு முழக்கம்.

கையிலுள்ள அயில் நிணமுண்க
குருதிப்புனல் எழு கடலையும் மிஞ்ச
புரவிக் கனமயில் நடமிடும் குமரேசா

விளக்கம் : உன் கையில் நீ எடுத்த வீரவேல் பகைவரின் தசை உண்டு,தன் பசியாற்றிக் கொண்டது அவர்கள் அன்று சிந்திய ரத்தம் எழு கடல் போல் பொங்கிப் பரந்தது . புரவியின் வேகத்துடன் நீ உன் மயிலை அங்குமிங்கும் நடத்திப் புரிந்த போர் சாகசங்கள் சொல்லுக்குள் அடங்குமோ முருகா!

படியில் பெருமிதத் தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வர அரன் அந்தப்
பலனை கரிமுகன் வசமருளும் பொற்பதனாலே

விளக்கம் : அகிலத்தில் மிகச்சிறந்த செம்பொன் போல் மின்னுகின்ற மேருமலையை வியக்கத்தக்க வேகத்தில் நீ வலம் வந்து தந்தையிடம் நாரதர் தந்த கனியை வேண்டி நிற்க ,தாய் தந்தையரை வலம் வந்து கஜமுகன் ஏற்கனவே கனியை பெற்றுக்கொண்டு விட்டதாலே அது முறையற்ற செயல் என நீ சினம் கொண்டாயோ முருகா! இல்லை இல்லை எளிய மானுடரைக் காக்கவேண்டும் என்பதற்காக நீ நடத்திய நாடகம் அல்லவா அது !

பரன் வெட்கிட மிகவும் வெகுண்டு அக்
கனியைததரவில்லை என அருள் செந்தில்
பழனி சிவகிரி தனிலுறை கந்தப் பெருமாளே

விளக்கம் : தாம் செய்தது சரியில்லையோ என்று சிவனாரே வெட்கும்படி கோபக் கோலம் காட்டி நின்றாய்.சிவனை விட்டு வந்ததாகச் சொல்லி விட்டு சிவமயம் ஆகி நிற்கும் சிவகிரியாம் பழனி மலைக்குத் தான் நேராக வந்து நின்று உன் அருள் கோலம் காட்டினாய். பின்னாளில் திருச்செந்தூர் சென்று உன் அவதார நோக்கத்தையும் முடித்துக்கொண்டாய். முருகா முருகா என்று| உருகும் அன்பர்களுக்காக அற்புதச் செயல்கள் செய்து அறுபடை வீடு கொண்ட ஞான பண்டிதா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே