அகர முதல என உரைசெய் | 'அ' என்கிற ஒலி, அதன் எழுத்து வடிவில் தொடங்கும் |
உலகத்தில் எல்லா மொழிகளும் 'அ' என்கிற அக்ஷரத்திலேயே தொடங்கும். ஏனெனில் வாயைத்திறந்த உடன் இயல்பாக எழுகின்ற முதல் ஒலி அதுதான். இந்த 'அ' பரம் பொருளைக் குறிப்பதாக வேதம் சொல்லும். அது (அவர்) தானே அனைத்துக்கும் ஆதி, காரணம், மூலம். 'அ' என்பது படைப்புத் தொழிலையும குறிக்கும் என்பர். படைப்பு ஏற்பட்டதால், அதன் பின்புதானே காத்தல், ஒடுக்குதல் மற்ற எல்லாமே அதனால்.
ஒருமுறை ஒரு அரசன் யாகம் செய்தான். எல்லா ரிஷி, முனி அறிஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அரசன் ஓர் ஆயிரம் உயர் ரகப்பசுக்களை தங்கத்தால் நன்கு அலங்கரித்து, உங்களில் யார் சிறந்த அறிஞரோ அவர் எடுதாதுக் கொள்ளலாம் என அறிவித்தார். எந்த ரிஷி தன்னை முதலான அறிஞர் என்பார். இன்னார் முதலாமவர் என்று யார், எப்படித் தீர்மானிப்பது? பேசாது இருந்தார்கள். யாஞ்யவல்க்கியர் தன் ஆயிரம் சிஷ்யர்களுடன் வந்தார். சிஷ்யர்களை விட்டு அந்த ஆயிரம் பசுக்களை ஓட்டி வரச்சொன்னார். பெரும் சலசலப்பு. அங்கிருந்த ரிஷிகள் நிறுத்தினர்; இவர்தான் சிறந்த அறிஞர் என்று எப்படி ஏற்பது என்றனர். யாஞ்யவல்க்கியர் எதிர் பார்த்ததுதான். அவரே சொன்னார், "பரீக்ஷித்துக்கு கொள்ளுங்களேன்" என்றார் தன்னம்பிக்கையுடன். சாக்ஷாத் சூர்ய பகவானிடம் பயின்றவராயிற்றே.
பலர் கேள்வி கேட்க யாஞ்யவல்க்யர் சொன்ன பதிலில் திருப்தி உற்றார்கள். என்றாலும் விடவில்லை. கடைசியாக கார்கி என்கிற பெண் அவரிடம் கேட்கத்தொடங்கினாள். அதிலும் அவருக்கு வெற்றி. கடைசியாக அவள் கேட்ட கேள்வி பிரம்மம் 'அ' என்கிற அக்ஷரத்தைக் குறிக்கும் என்பது ஏன், எப்படி என்று விளக்குங்கள் என்றாள். அவர் ஆரம்பித்தார். பொதுவாக ஒரு வார்த்தைக்கு முன் 'அ' சேருமானால் அதற்கு எதிர்மறைப்பொருள் ஆகிவிடும் இல்லையா? உதாரணமாக நீதி, 'அ'நீதி ஆகும், நியாயம் 'அ'நியாயம் என்று ஆகும். அவர் அதுபோல 'அ'கரம் சேர்த்துப்பல சொற்களால் பரம்பொருளை வர்ணித்தார். 'அ'ரூபம், 'அ'வ்யக்தம், அமிர்தம், அநிர்வசனீயம் என்றெல்லாம்: எப்படி வேதங்கள் நேதி, நேதி (ந இதி= இது அல்ல) என்றே சொல்லிக் கொண்டு போகுமோ அப்படி 'அ'சத்திவிட்டார். அதைக் கேட்டபின் கேள்வியே இல்லை நீங்களே தகுதியானவர் என்று ஒருமுகமாகத் தீர்மானித்தார்கள்.
அம்பாளை மாத்ருகா வர்ண ரூபிணி என்று சொல்லி இருக்கிறது. "அ ஆதி க்ஷ அந்த வர்ணனகரீ " என்று ஆதி சங்கரர் அன்னபூர்ணா அஷ்டகத்தில் அம்பாளைக்குறிப்பிடுகிறார். "ஸர்வ வர்ணாத்மிகே" என்று கவி காளிதாசர் சியாமளா தண்டகத்தில் சொல்கிறார். வர்ணம் என்றால் எழுத்து. லலிதா ஸஹஸ்ர நாமத்திலேயும் “பாஷா ரூபா " என்று வருகிறது. ஏனென்றால் எழுத்துக்களின் கூட்டாகிய சொல்லுக்குச் சக்தி உண்டு.
|
ஐம்பத்து ஒர் அக்ஷரமும் | 'அ' வில் தொடங்கும் மொத்தமுள்ள (சம்ஸ்க்ருதத்தில்) ஐம்பத்து ஒரு எழுத்துக்கள் |
அகில கலைகளும் | உலகில் உள்ள எல்லா விதமான கலைகள், |
வெகுவிதம் கொண்ட தத்துவமும் | எல்லாப் பொருள்களுக்கும் மூலமாக உள்ள 96 தத்துவங்கள் |
அபரிமித சுருதியும் | கணக்கில் அடங்காத வேதங்கள் |
அடங்கும் தனிப் பொருளை | இவை யாவும் எதற்கு உட்பட்டு இருக்கின்றனவோ அந்த நிகரில்லாத பரம்பொருளை, |
எப்பொருளுமாய | தானே எல்லாப் பொருள்களும் தத்துவங்களாகவும் ஆக பரிணமித்து விளங்கும் ஒன்றினை, |
அறிவில் அறிபவர் அறியும் இன்பம் தனை | ஆனந்த வடிவமாக இருந்து, அப்பரம்பொருளைத்தம் அறிவில் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுபவமாகும் இன்பப்பெருக்கை |
துரிய முடிவை | விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கத்தையும் கடந்த துரீய நிலையையும் கடந்ததான |
விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளைக்கடந்தது துரியம் எனும் சவிகல்ப சமாதி ஆகும். அந்நிலையில் உடல், வெளிஉலகைப்பற்றிய அறிவு இல்லை என்றலும் அறிவு விழித்திருக்கும். அதையும் கடந்த நிலையில் மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற எல்லா காரணங்களும் ஸ்தம்பித்து செயல் இழந்து விடும். எனவே நிர்விகல்ப சமாதி எனப்படும். இதுவே துரிய அதீதம் என்ற நிலை. |
அடி நடு முடிவு இல் | இது ஆரம்பம், இது நடு இது முடியும் இடம் என்கிற வரையரை ஒன்றும் இல்லாத (எங்கும் எப்போதும் ஒரு போல இருக்கின்ற), |
துங்கம் தனை | உயர்ந்து விளங்கும் |
சிறிய அணுவை அணுவினின் | மிகச்சிறிய அணுவைவிட நுண்ணிய |
மலமும் | ஆத்மாவைச்சுற்றி மூடி இருக்கும் கர்ம, மாயா, அஹங்கார மலங்கள் அற்று |
குணத்ரயமும் | சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களும் |
அற்றது ஒருகாலம் | விட்டுப்போன பின்பு |
நிகழும் வடிவினை | தன்னுள்ளே அறியப்படும் சொரூபத்தை/ ஆத்மானுபவத்தை, |
முடிவில் ஒன்று என்று இருப்பதனை | அழிவே இல்லாத, வேறு எதையும் சாராத தனியான ஒரே பொருளாக விளங்குகின்ற |
நிறைவு குறைவு ஒழிவு அற | கூடுதல் குறைதல் இல்லாமல் போதல் என்கிற மாறுபாடுகள் இல்லாத, |
நிறைந்து எங்கும் நிற்பதனை | எல்லா இடத்தும் பரந்து இருக்கின்ற |
நிகர் பகர அரியதை | இதற்குச்சமம் என்று எதையும் காட்ட முடியாததாய் உள்ள, |
விசும்பின் புரத்ரயம் | ஆகாயத்தில் திரிந்து கொண்டிருந்த மூன்று புரங்களை |
எரித்த பெருமானும் | தன் சிரிப்பால் சுட்டுப்பொசுக்கின சிவபெருமானும் கூட |
நிருப குரு பர | நிகரில்லாத மேலான குருவாக விளங்கும் |
குமர என்று என்று | (என் குமாரனே) என்றும் இளமையானவனே என்றெல்லாம் |
பக்தி கொடு பரவ | மிகுந்த பக்தியுடன் உன்னைத் துதிக்க |
அருளிய மவுன மந்த்ரம் தனை | அவருக்கு உபதேசம் செய்து அருளிய (உள்ளுக்குள்ளேயே தரப்படும்) மௌன உபதேச மந்திரத்தை, |
பழைய நினது வழி அடிமையும் | பரம்பரையாக, ஜன்ம ஜன்மங்களாக உன்னையே உபாசித்து வரும் உன்னுடைய பழைய அடியவனான எனக்கும்(நானும்) |
விளங்கும் படிக்கு | நன்கு புரியும்படி ( நல்ல கதி அடையுமாறு) |
இனிது உணர்த்தி அருள்வாயே | சந்தோஷமாக அறிவு தந்து அருள்வாய். |
தகுதகுகு தகுதகுகு..... தரரரர ரிரிரிரிரி என்று என்று இடக்கையும் உடுக்கையுமியாவும் | மேற் சொன்ன ஒலி / ஜதிகளோடு இடக்கை உடுக்கை மற்றும் பல தாளக்கருவிகள் |
மொகுமொகென | அதிரும்படி ஒலிக்க |
முதிர் அண்டம் பிளக்க | அந்த ஒலி, அதிர்வில் இத்தனை காலம் நிலையாய் நின்ற இப் பழைய அண்டம் பிளந்து போக |
நிமிர் அலகைகள் | உயரமான பேய்கள் |
கரணமிட | மகிழ்ச்சியால் குதித்து ஆட |
உலகு எங்கும் பிரமிக்க | இது என்ன ஓசையோ அதிர்வோ என்று எவ்வுலகத்தாரும் ஆச்சரியப்பட |
நடம் முடுகு பயிரவர் | நடனமாடக்கூடிய பயிரவர்கள் |
பவரி கொண்டு | |
இன் புறப்படு | மகிழ்ச்சியோடு புறப்பட்டு அடையும் |
களத்தில் | போர்க்களத்தில் |
ஒரு கோடி முது கழுகு | கணக்கில்லாத பெரும் கழுகுகள் |
கொடி | காக்கைகள் |
கருடன் | பருந்துகள் இவை |
அங்கம் பார்க்க | உடல்களைக் கொத்த |
குருதி நதி பெருக | இரத்தம் ஆற்று வெள்ளம்போல் பாய |
வெகு முக கவந்தங்கள் நிர்த்தம் இட | ஆகாயத்தில் விசையுடன் எறியப்பட்ட தலைகளும், முண்டங்களும் நடனமிடுவது போல் தோன்ற |
முரசு அதிர | வெற்றி முரசுகள் அதிர்ந்து கொட்டவும் |
நிசிசரரை வென்று | சூரபத்மன் முதலிய அரக்கர் கூட்டத்தை வெற்றி கொண்டு |
இந்திரற்கு | தேவேந்திரனுக்கு |
அரசு அளித்த | அவனுடைய தேவலோகத்தை மீட்டுக் கொடுத்த |
பெருமாளே | முருகப் பெருமானே (நான் இழந்த முக்தி ஆனந்தத்தை எனக்கும் மீட்டுக்கொடுப்பாயாக.) |
Comments
Post a Comment